தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி சென்னையில் இன்று தொடக்கம்


தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 11 Sept 2024 5:10 AM IST (Updated: 11 Sept 2024 10:11 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

சென்னை,

தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி இன்று முதல் 13-ம் தேதிவரை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இந்திய தடகள கூட்டமைப்பின் ஆதரவுடன் இந்த போட்டியை தமிழ்நாடு தடகள சங்கம் நடத்துகிறது. போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்த தொடரில் இந்தியா (62 பேர்), பாகிஸ்தான் (12 பேர்), இலங்கை (54 பேர்), பூட்டான் (5 பேர்), நேபாளம் (9 பேர்), வங்காள தேசம் (16 பேர்), மாலத்தீவுகள் (15 பேர்) ஆகிய 7 நாடுகளில் இருந்து மொத்தம் 173 பேர் கலந்து கொள்கின்றனர்.

100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டம் உள்பட 28 வகையான பந்தயங்கள் இரு பாலருக்கும் நடத்தப்படுகிறது. 1995-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் அரங்கேறும் முதல் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் இது தான். தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை மின்னொளியில் போட்டி நடைபெறும்.

இதில் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வருண் ஊரி மனோகர் (100 மீட்டர் ஓட்டம்), அரிஹரன் கதிரவன் (110 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்), ஜிதின் அர்ஜுனன் (நீளம் தாண்டுதல்), ரவி பிரகாஷ் (டிரிப்பிள் ஜம்ப்), கார்த்திகேயன் (4 x100 மீட்டர் தொடர் ஓட்டம்), அபிநயா ராஜராஜன் (100 மீட்டர் ஓட்டம்), பிரதிக் ஷா யமுனா (நீளம் தாண்டுதல், டிரிப்பிள் ஜம்ப்), லக் ஷன்யா (நீளம் தாண்டுதல்), கனிஸ்டா டீனா (4x 400 மீட்டர் தொடர் ஓட்டம்) ஆகிய 9 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். உள்ளூர் அணியான இந்தியா அதிக பதக்கங்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story