ஓய்வு முடிவை திரும்ப பெற்ற வினேஷ் போகத்.. ஒலிம்பிக் பதக்கத்துக்கு குறி

image courtesy:PTI
ஓய்வு முடிவை திரும்ப பெற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மீண்டும் களம் இறங்க முடிவு செய்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கடந்த ஆண்டு பாரீசில் நடந்த ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டி வரை முன்னேறி வியக்க வைத்தார். தங்கப்பதக்கத்துக்கான இறுதி சுற்றில் அமெரிக்காவின் சாரா ஹில்பிரான்டுடன் மோத இருந்தார்.
ஆனால் போட்டிக்குரிய நாளில் காலையில் அவரது உடல்எடையை பரிசோதித்த போது நிர்ணயிக்கப்பட்ட அளவான 50 கிலோவை விட கூடுதலாக 100 கிராம் அதிகமாக இருந்தது தெரியவந்தது. உடனடியாக நிறைய பயிற்சியுடன் தலை முடியை கூட வெட்டி பார்த்தனர். ஆனால் எடையை குறைக்க முடியவில்லை. இதனால் அவர் போட்டியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார். பதக்கமேடையில் ஏறும் கனவில் இருந்த அவர் இந்த முடிவால் நொறுங்கிப் போனார்.
இறுதிப்போட்டிக்கு முன்பு வரை எனது உடல் எடை சரியாக இருந்தது. அதனால் தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்று விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை தீர்ப்பாயம் நிராகரித்து விட்டது. போட்டியில் இருந்து வெளியேறிய விரக்தியில் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்றார். சில மாதங்களில் அரசியலில் குதித்த அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். கடந்த ஜூலை மாதத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் 31 வயதான வினேஷ் போகத் ஓய்வு முடிவில் இருந்து விடுபட்டு 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளார். இவர் மீண்டும் ஒலிம்பிக் பதக்கத்துக்கு குறிவைத்து ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார்.






