‘இந்தியாவில் மிக மோசமான ஏற்பாடுகள்...’ - டென்மார்க் பேட்மிண்டன் வீராங்கனை அதிருப்தி

உலக சாம்பியன்ஷிப்பை இங்கு நடத்த முடியும் என்று நினைப்பது மிகவும் கடினம் என மியா பிளிச்பெல்ட் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்கியதில் இருந்தே விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக விளையாட்டு அரங்கிற்குள் குரங்கு சுற்றித் திரிந்தது, மேற்கூரையில் இருந்து விழுந்த பறவை எச்சங்களால் விளையாட்டு தடைபட்டது உள்ளிட்ட சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பின. இதற்கிடையில் காற்று மாசு காரணமாக இந்த தொடரில் மேற்கொண்டு விளையாட முடியாது எனக்கூறி உலகின் 3-ம் நிலை வீரரான ஆண்டர்ஸ் ஆண்டன்சென் போட்டியில் இருந்து விலகினார்.
டெல்லியில் காற்று மாசு காரணமாக மக்கள் மோசமான பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், பேட்மிண்டன் போட்டி விளையாடுவதற்கு டெல்லி ஏற்ற இடமில்லை என்று அவர் கூறினார். போட்டியில் இருந்து விலகியதற்காக அவருக்கு ரூ.4.5 லட்சம் விதிக்கப்பட்டபோதும், தனது உடல்நிலையே முக்கியம் என்று கூறி ஆண்டர்ஸ் ஆண்டன்சென் போட்டியில் இருந்து அதிரடியாக விலகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்பெல்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் பேட்மிண்டன் தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மிக மோசமான முறையில் செய்யப்பட்டுள்ளது என தனது அதிருப்தியை அவர் பதிவு செய்துள்ளார். மேலும், அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-
“இந்தியாவில் கடந்த சில நாட்கள், நான் எதிர்பார்த்ததை விட மிகக் கடினமாக இருந்தன. நான் மோசமான போட்டிக்கு மனதளவில் என்னை தயார்படுத்திக் கொண்டேன். ஆனால் எங்களைச் சுற்றி இருந்த சூழ்நிலைகள் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும், ஏற்பாடுகள் மிக மோசமானதாகவும் இருந்தன.
மைதானத்திற்கு, உள்ளேயும் வெளியேயும் எங்கள் பயிற்சி மற்றும் போட்டியில் கவனம் செலுத்தவும், சிறப்பாக செயல்படவும் நாங்கள் இங்கு வந்துள்ளோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய சூழ்நிலைகளில் எங்கள் திறமையை வெளிப்படுத்துவதும், போட்டியில் கவனம் செலுத்துவதும் மிகவும் கடினமாகிவிடுகிறது.
வேர்ல்ட் டூர் சூப்பர் 750 நிகழ்வில் நாங்கள் சந்தித்த சூழ்நிலைகளால் அனைவரும் மன அழுத்தத்திற்கும், விரக்திக்கும் ஆளாகியுள்ளனர். அதை சிரித்துவிட்டு கடந்து செல்ல முயல்கிறோம். ஆனால் இது வேடிக்கையானதாகவோ அல்லது நியாயமாகவோ இல்லை.
இந்த பிரச்சினை இறுதியாக அதற்குத் தகுதியான கவனத்தைப் பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இந்தியாவில் தொடர்ந்து போட்டியிட வேண்டுமென்றால், எதிர்காலத்தில் எங்கள் வீரர்களுக்கு சிறந்த நிலைமைகள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.
துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய சூழ்நிலையில், உலக சாம்பியன்ஷிப்பை இங்கு நடத்த முடியும் என்று நினைப்பது மிகவும் கடினம். எதிர்காலத்தில் வீரர்களுக்கு சரியான நிலைமைகள் மற்றும் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






