இந்தியாவின் மிக நீளமான ரெயில்வே பாதை..!


இந்தியாவின் மிக நீளமான ரெயில்வே பாதை..!
x

இந்தியாவில் கிழக்கும் மேற்கும், வடக்கும் தெற்கும் ரெயில்கள் பாய்ந்து கொண்டிருந்தாலும் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரெயில் பாதை தான் நாட்டின் மிக நீண்ட ரெயில் பாதையாக அறியப்படுகிறது.

இந்தப் பாதை வழி நெடுகிலும் வெவ்வேறு பருவநிலை, வெவ்வேறு நிலப்பரப்பு, வெவ்வேறு மொழிப் பிராந்தியங்கள் என தேசத்தின் கலாசாரத்தை நம் கண் முன் கடை விரிக்கிறது. திப்ருகர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்துக்கொண்டிருக்கும் இந்த ரெயிலுக்கு 'தி விவேக் எக்ஸ்பிரஸ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தி விவேக் எக்ஸ்பிரஸ்

இதுதான் இந்தியாவின் மிக நீண்ட ரெயில்வே பாதை. ஒட்டுமொத்தமாக 4,273 கி.மீ பயண தூரம் கொண்டது. 75 மணி நேரம் 30 நிமிடங்கள் பயண நேரம். வடகிழக்கு மாநிலத்தில் வடக்கு எல்லையான அசாமின் திப்ருகர் நகரையும், தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரியையும் இணைக்கிறது. விவேக் எக்ஸ்பிரஸ் நவம்பர் 2011 முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

9 மாநிலங்கள்:

இந்த ரெயில் அசாம், நாகலாந்து, பீகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய 9 மாநிலங்களின் வழியாக பயணிக்கிறது. அந்தந்த மாநிலங்களில் தீன்சுகியா, டிமாபூர், கவுஹாத்தி, பொங்கைகான், அலிபுர்தார், சிலிகுரி, கிஷன்கஞ்ச், மால்டா, ராம்புர்ஹத், பாகூர், துர்காபூர், அசன்சால், காரக்பூர், பாலாசோர், கட்டாக், புவனேஸ்வர், கோர்தா, பிரம்மாபூர், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், சாமல்கோட், ராஜமுந்திரி, எலூரு, விஜயவாடா, ஆங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, வேலூர், சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, திரிச்சூர், அலுவா, எர்ணாகுளம், கோட்டயம், செங்கனூர், கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.


Next Story