'உலகின் அழகு ராணி' பட்டம் வென்ற இந்தியர் கிருஷங்கி கவுரி


உலகின் அழகு ராணி பட்டம் வென்ற இந்தியர் கிருஷங்கி கவுரி
x

அமெரிக்காவில் நடந்த ‘உலகின் அழகு ராணி’ போட்டியில் இந்தியாவை சேர்ந்த கிருஷங்கி கவுரி மகுடம் சூட்டி அசத்தி இருக்கிறார்.

இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கிருஷங்கி கவுரி அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். அமெரிக்கா உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் தனது தனித்துவ அடையாளத்தை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடி இருக்கிறார்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நடந்த இந்த போட்டியில் நான்கு பிரிவுகள் இடம் பெற்றன. மிஸ் குயின் ஆப் தி வேர்ல்ட், மிஸஸ் குயின் ஆப் தி வேர்ல்ட், எலைட் மிஸஸ் குயின் ஆப் தி வேர்ல்ட் உள்ளிட்ட பிரிவுகளில் கடும் போட்டி நிலவியது. இதில் கிருஷங்கி கவுரி மிஸ் குயின் ஆப் தி வேர்ல்ட் பிரிவில் பங்கேற்றிருக்கிறார். இவரை போலவே கிதிகா கர்வா, ரோகினி மாத்தூர், ரேஷ்மா ஜாவேரி ஆகிய மூன்று பெண்களும் மற்ற பிரிவுகளில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கிருஷங்கி கவுரி 'மிஸ் குயின் ஆப் தி வேர்ல்ட்' பிரிவில் ராணி பட்டம் சூடிவிட்டார். ''உலக அளவில் இந்தியாவுக்கு பெருமிதம் தேடித்தரும் மதிப்புமிக்க போட்டியில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற போட்டியில் இந்தியர் ஒருவர் பட்டம் வெல்வது இதுவே முதல் முறை என்பதும், அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது என்பதும் பெருமை அளிக்கிறது. எனது வெற்றி இளம் பெண்களுக்கு நிச்சயம் ஊக்கமளிக்கும். அவர்களுக்கு முன் மாதிரியாக விளங்குவேன்'' என்று நம்பிக்கையோடு சொல்கிறார், கிருஷங்கி கவுரி.


Next Story