நிலவில் மட்டுமல்ல... தமிழக மண்ணிலும் கால்பதித்த 'சந்திரயான்-3'


நிலவில் மட்டுமல்ல... தமிழக மண்ணிலும் கால்பதித்த சந்திரயான்-3
x

இஸ்ரோவின் ‘சந்திரயான்-3’ வெற்றியை, இந்தியா மட்டுமின்றி உலகமே கொண்டாடி வருகிறது.

எல்லாமும், திட்டமிட்டப்படி நடந்து வர, விக்ரம் லேண்டரில் இருந்து 'பிரக்யான்' என்ற ரோவர் (நகரும் ஆய்வு வாகனம்) நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்து வருகிறது. இந்த சரித்திர சாதனையில், இஸ்ரோவிற்கு மட்டுமல்ல,சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் இடம் பிடித்துள்ளது.

ஆம்...! பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறையின், புவி தகவல் மற்றும் கோள் இயல் மைய இயக்குனர் பேராசிரியர் அன்பழகன், நிலவு பரப்பு குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, நிலவின் நிலப்பரப்பு போலவே இருக்கக்கூடிய பிரத்யேக பயிற்சி களம் உருவாகவும், பேருதவியாக இருந்திருக்கிறார். அதுபற்றி பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

''நிலவை பற்றி பல்வேறு நாடுகளும் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. 1969-ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா அனுப்பிய அப்பல்லோ விண்கலம் நிலவில் முதன் முதலில் தரை இறங்கியது. அதுமட்டும் அல்லாமல் அங்கு மண் இருப்பதை எடுத்து நாசா ஆய்வு செய்ய தொடங்கியது. அதன்பிறகு உலக நாடுகளின் கவனத்தை நிலவு ஈர்த்தது.

நிலவில் கிடைத்த மண்ணை கொண்டு ஆராய்ச்சி செய்து அதனை அறிக்கையாக நாசா வெளியிட்டது. அதில் நிலவில் அனார்த்தோசைட், பசால்டு ஆகிய 2 வகையான பாறை மற்றும் மண் வகைகள் இருப்பது தெரிய வந்தது. இதில் அனார்த்தோசைட் பாறை மற்றும் மண் வகைகளை நம் தமிழ்நாட்டிலும், மற்ற சில மாநிலங்களிலும் பார்க்க முடியும்'' என்பவர், அத்தகைய பாறையில் தயாரித்த மண் மாதிரியிலிருந்து தான், இப்போது வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கிய விக்ரம் லேண்டரும், அதற்குள் இருக்கும் 'பிரக்யான்' ரோவரும் பயிற்சி பெற்றதாக கூறுகிறார்.

''உலக நாடுகளை தொடர்ந்து, இந்தியாவும், நிலவு தொடர்பான ஆராய்ச்சியில் களமிறங்கி, 'சந்திரயான்-1' திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. 'சந்திரயான்-1' திட்டத்தின் நோக்கம், நிலவில் உள்ள கனிமங்கள் மற்றும் நீர் ஆதாரங்களை ஆராய்வதுதான். அதை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட 'சந்திரயான்-2' திட்டத்தின் நோக்கம், நிலவின் தென் துருவ பகுதியை ஆராய்வது. இதற்காக நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டரை தரை இறக்கி, அதற்குள் இருக்கும் பிரக்யான் ரோவரை நிலவு பரப்பில் உலாவவிட்டு, ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டிருந்தனர். இதற்காக இஸ்ரோவில், நிலவு பரப்பு போலவே இருக்கும் பிரத்யேக பயிற்சி களம் அமைக்கப்பட்டது. அப்போதும் நம் தமிழ்நாட்டின் நாமக்கலில் இருந்துதான், மண் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன'' என்பவர், தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி என்ற அப்புசமுத்திரம் என்ற குக்கிராமத்தில் 1963-ம் ஆண்டு பிறந்தவர். தந்தை பெயர் சித்தன். தாயார் சரஸ்வதி. மனைவி எழில் அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். 2 மகன்கள் மற்றும் பேரன், பேத்திகளுடன் சேலம் குரங்குச்சாவடியில் வசித்து வருகிறார்.

பள்ளி கல்வியை சொந்த ஊரிலும், உயர்கல்வியை சேலம், திருச்சியிலும் படித்து முடித்த அன்பழகன் புவியியல் தொடர்பான ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தினார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும், ஜெர்மனியிலும் ஆராய்ச்சி படிப்புகளை முடித்திருக் கிறார். இதுவரை 7 புத்தகங்கள் எழுதியதுடன் 150-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். புவியியல் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க ஜெர்மனி, பிரான்ஸ், கிரீஸ், நெதர்லாந்து, சிங்கப்பூர், தாய்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

இதுவரை சிறந்த ஆசிரியர் விருது, ஆராய்ச்சியாளர் விருது, தமிழ்நாடு சிறந்த விஞ்ஞானி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளும் பேராசிரியர் அன்பழகனின் ஆராய்ச்சிகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளன.

''தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி குன்னமலை, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த அனார்த்தோசைட் பாறை உள்ளது. இருப்பினும் நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி குன்னமலை படிவங்கள், ரொம்ப ஸ்பெஷல்.

2004-ம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள புவி பவுதீக ஆராய்ச்சி மையத்தில், நிலவுக்கு 'சந்திரயான்-1' அனுப்புவது குறித்த மாநாடு நடத்தப்பட்டது. அப்போது முதலே, அனார்த்தோசைட் மண் பற்றிய ஆராய்ச்சிகளை நான் தொடங்கிவிட்டேன். இதற்காக, மும்பை ஐ.ஐ.டி.யில் இருந்து 2005-ம் ஆண்டு சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறைக்கு மாறுதலாகி வந்தேன். 2012-2013-ம் ஆண்டில், இந்த அனார்த்தோசைட் மண் தொடர்பாக ஆய்வு நடத்தி அதனை தரம் பிரித்து, முழு தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும், அதற்கு 6 மாத கால அவகாசம் என்றும் அப்போதைய 'சந்திரயான்-1' திட்ட இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை என்னிடம் கூறினார்.

உடனே எனது தலைமையில் ஆராய்ச்சியாளர்கள், அதாவது அப்போது என்னுடன் பணியில் இருந்த அறிவழகன், பரமசிவம், சின்னமுத்து உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு ஆய்வு பணிகளை தொடங்கியது. எங்களது ஆய்வு குறித்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு கண்காணித்து வந்தது. நாங்களும் 15 நாட்களுக்கு ஒருமுறை இஸ்ரோவுக்கு அறிக்கை அனுப்பி வந்தோம். திருச்சி என்.ஐ.டி.யில் பணிபுரிந்த முத்துக்குமரன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவை சேர்ந்த வேணுகோபால் உள்ளிட்டவர்களும் இந்த ஆய்வில் ஒருங்கிணைந்து செயல்பட்டோம். எங்களது ஆராய்ச்சிக்கு துணையாக இருந்தது திருச்சி என்.ஐ.டி. நிறுவனம், அங்கும் அனார்த்தோசைட் மண் அனுப்பினோம்.

அவர்கள் அந்த மண்ணின் நெகிழ்வு தன்மை உள்ளிட்ட புவி பொறியியல் தன்மை குறித்து ஆய்வு செய்தனர். இரவும், பகலும் எங்களது ஆராய்ச்சி நீடித்தது. இஸ்ரோ கொடுத்த காலகெடுவுக்குள் எங்களது ஆராய்ச்சியை முடித்து விஞ்ஞானிகள் எதிர்பார்த்தபடியே அறிக்கை அனுப்பி வைத்தோம். அதற்கு பிறகு மண்ணை அனுப்பி வைக்கும்படி இஸ்ரோ கேட்டு கொண்டது'' என்று தமிழ்நாட்டு மண், இஸ்ரோ பயிற்சி களத்தில் இடம் பிடித்ததை விளக்கினார்.

''பாறை படிமங்களை மண்ணாக மாற்றும் பொறுப்பை, பொடியாக்கும் நிறுவனத்திடம் ஒப்படைத்தோம். அதன்படி சித்தம்பூண்டி குன்னமலை பகுதியில் இருந்து பாறைகள் எடுக்கப்பட்டு அவை அந்த நிறுவனத்தில் கொடுத்து பொடியாக மாற்றப்பட்டது.

முகத்தில் பூசும் பவுடர் போன்றும், அதை விட கொஞ்சம் பெரியதான மண் துகள்களாகவும், உப்பு போன்ற அளவிலும், பெரிய கற்கள் மற்றும் சிறு பாறைகள் என இப்படியாக 5 வகையாக தரம் பிரித்து உருவாக்கினோம். அதனை மூட்டைகளில் அடைத்து பார்சல் அனுப்பும் நிறுவனம் மூலம் 50 டன் மண்ணை இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்தோம்.

இந்த மண்ணை கொண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள், தத்ரூப பயிற்சி களம் அமைத்தனர். அதில் விக்ரம் லேண்டரை மணல்-பாறை பரப்பில் தரை இறக்குவது, பிரக்யான் ரோவரை கரடு முரடான பரப்பில் நகர்த்தி பார்ப்பது... என ஒத்திகை பார்த்தனர். அந்த ஒத்திகை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

அனார்த்தோசைட் மண் ஆராய்ச்சியை சிறப்பாக செய்து முடித்ததற்காக இஸ்ரோ சார்பில் பாராட்டு சான்றும், பெரியார் பல்கலைக்கழகம் சிறந்த ஆராய்ச்சியாளர் விருதும் வழங்கியது. இந்த விருதை மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் பெற்றேன். அதனை இன்றளவும் நினைத்து பெருமைப்படுகிறேன்'' என்று மனம் பூரித்தார்.

''அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் நிலவு மண்ணை எடுத்து வந்திருந்தாலும், நிலவுக்கு லேண்டர் அனுப்பிய பட்டியலில் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுடன் 4-வதாக இந்தியாவும் இணைந்துள்ளது. அதுவும், நிலவின் தென் துருவ பகுதியில், முதல் நாடாக நாம் கால்பதித்திருக்கிறோம். அதேபோல, 'சந்திரயான்-2' திட்டம் தோல்வியடைந்தாலும், நிலவின் ஈரப்பதம் குறித்தும், எந்த பகுதியில் நீர் உள்ளது என்பதையும் படம் எடுத்து அனுப்பியது, இந்தியாவின் சந்திரயான்-2 தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இப்போதும் தகவல்களை அனுப்பி வருகிறது. நிலவு குறித்த ஆராய்ச்சியில், மற்ற நாடுகளை விட, நாம் முன்னேற்றத்துடனே காணப்படுகிறோம். அதற்கு 'சந்திரயான்-3' திட்டத்தின் வெற்றியே சான்று'' என்று பிரக்யான் ரோவர் நிலவில் உலாவ தொடங்கிய வெற்றி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டவர், நாமக்கல் சித்தம்பூண்டி அனார்த்தோசைட் மண்ணிற்கு காப்புரிமை பெற்றது குறித்து பேசினார்.

''உலக அளவில் ரஷியா, அமெரிக்கா, ஜப்பான், சீனா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள நிலவு பரப்பு மாதிரி மண்ணுக்கு இணையானது, இந்த சித்தம்பூண்டி அனார்த்தோசைட் மண். எனவேதான் இந்த மண்ணுக்கு காப்புரிமை கேட்டு 2014-ம் ஆண்டு இஸ்ரோ-பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் விண்ணப்பித்து இருந்தோம். 2018-ம் ஆண்டு அதற்கான காப்புரிமை, கூட்டாக இஸ்ரோ விஞ்ஞானிகள், பல்கலைக்கழக எங்களது ஆராய்ச்சி குழு மற்றும் திருச்சி என்.ஐ.டி.யை சேர்ந்த முத்துக்குமாருக்கும் வழங்கப்பட்டது'' என்றார் நெகிழ்ச்சியுடன், பேராசிரியர் அன்பழகன்.

அனார்த்தோசைட் மண்

அனார்த்தோசைட் பாறை வகையின் வயதானது, 2500 மில்லியன் ஆண்டுகள் முதல் 2900 மில்லியன் ஆண்டுகள் வரை இருக்கலாம் எனவும், இந்த பாறை வகை பூமி உருவான காலத்திலேயே உருவான பாறை எனவும் கூறப்படுகிறது. நிலவில் தொடர் விண்கற்கள் விழுந்ததால் அனார்த்தோசைட் பாறைகள் துல்லியமான மண் படிவங்களாக மாற்றிவிட்டன. ஆனால் பூமி பரப்பில் இன்னும் பாறைகளாக உள்ளன. அனார்த்தோ சைட் மண் என்பது வெள்ளை நிறத்தில்தான் காணப்படும்.


Next Story