இதுவரை இல்லாத வகையில் கல்விக்கு ரூ.1.13 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு


இதுவரை இல்லாத வகையில் கல்விக்கு ரூ.1.13 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
x

கல்வித்துறைக்கு மத்திய பட்ஜெட்டில் இதுவரை இல்லாத வகையில் ரூ.1.13 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் முன்னேற்றத்தில் கல்வித்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்த வகையில், அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதுவரை இல்லாத வகையில் கல்வித்துறைக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 898 கோடியே 97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.68 ஆயிரத்து 804 கோடியே 85 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உயர் கல்வித்துறைக்கு ரூ.44 ஆயிரத்து 94 கோடியே 62 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு 2022-23 நிதி ஆண்டில் கல்வித்துறைக்கு 1 லட்சத்து 4 ஆயிரத்து 277 கோடியே 72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

3 செயற்கை நுண்ணறிவு மையங்கள்

நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் '5ஜி' சேவையை பயன்படுத்தி செயலிகளை உருவாக்குவதற்கான 100 ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும்.

இந்த ஆய்வுக்கூடங்கள் பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகள், வங்கிகள், பிற தொழில் நிறுவனங்களுடன் இணைந்து அமைக்கப்படும்.

ஆசிரியர் பயிற்சி

மேலும் ஆசிரியர் பயிற்சியானது, புதுமையான கற்பித்தல், பாடத்திட்ட பரிமாற்றங்கள், தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாடு உள்ளிட்டவற்றின் மூலம் மேம்படுத்தப்படும்.

ஆய்வகத்தில் உருவாக்கப்படும் செயற்கை வைரங்கள் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளால் இயக்கப்படுகிற, அதிக வேலை வாய்ப்புள்ள ஆற்றல் சார்ந்த துறை ஆகும்.

அத்தகைய வைரங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக ஐ.ஐ.டி. ஒன்றுக்கு 5 ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி மானியம் வழங்கப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story