தினமும் இரண்டு முறை உடற்பயிற்சி செய்யலாமா?


தினமும் இரண்டு முறை உடற்பயிற்சி செய்யலாமா?
x

உடல் நலனை சீராக பேணுவதற்கு உடற்பயிற்சி செய்வது அவசியமானது.

உடற்பயிற்சி செய்வதற்கு எந்த நேரம் சிறந்தது என்ற குழப்பம் நிறைய பேரிடம் இருக்கிறது. காலை, மாலை இரண்டு வேளையும் தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக ஜிம்முக்கு சென்று மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்வது நல்லதா?, இரண்டு முறை உடற்பயிற்சி செய்வது நல்லதா? என்பது குறித்து உடற்பயிற்சி நிபுணர்களிடம் ஆலோசிப்பது சிறந்தது.

ஏனெனில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும், கடுமையான உடற்பயிற்சி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். காலை, மாலையில் என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்கிறீர்கள்? மற்ற நேரங்களில் எந்த மாதிரியான வேலை செய்கிறீர்கள்? என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

உடற்பயிற்சி விஷயத்தில் ஒவ்வொருவருடைய உடல்வாகும், உடல் வலிமையும் வேறுபடக்கூடும். குறிப்பாக விளையாட்டு வீரர்கள், மல்யுத்த வீரர்கள் தினமும் இரண்டு முறை உடற்பயிற்சி செய்யலாம். அவர்களை போல் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளை தினமும் இரண்டு முறை மற்றவர்கள் செய்வது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.

குறைந்த எடை கொண்ட விளையாட்டு உபகரணங்களை கையாளும் பயிற்சிகள் அல்லது குறைந்த தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளை வேண்டுமானால் தினமும் இரண்டு முறை செய்யலாம். அப்போதும் கூட காலையில் சற்று கடினமான உடற்பயிற்சிகளை செய்தால் மாலையில் இலகுவான உடற்பயிற்சிகளை செய்வதுதான் உடலுக்கு நல்லது.

திடீரென்று ஒரே நாளில் தொடர்ச்சியாக பல மணி நேரம் உடற்பயிற்சி செய்வது தவறானது. அது உடலுக்கு மட்டும் அழுத்தத்தை கொடுக்காமல் மனதுக்கும் அழுத்தத்தை கொடுக்கும். இதய துடிப்பு, ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினையும் ஏற்படக்கூடும். ஆதலால் உடல்வாகுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

கடினமான உடற்பயிற்சிகளை நீண்ட நேரம் செய்வது பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆர்வ மிகுதியில் ஒரே சமயத்தில் பல உடற்பயிற்சிகளை செய்தால் தசை வலி, நடப்பதில் சிரமம், முதுகெலும்பு பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும்.

தினமும் இரண்டு முறை உடற்பயிற்சி செய்ய ஆசைப்படுபவர்கள் இரண்டு பிரிவாக பயிற்சிகளை பிரித்துக்கொள்ள வேண்டும். ஜிம்முக்கு செல்பவர்களாக இருந்தால் கார்டியோ, எடை தூக்கும் பயிற்சி போன்ற கடினமான உடற்பயிற்சிகளை காலையில் செய்யலாம். மாலையில் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற இலகுவான பயிற்சிகளை செய்து வரலாம்.


Next Story