இயற்கை வளங்களைப் பற்றிய படிப்பு


இயற்கை வளங்களைப் பற்றிய படிப்பு
x

பூமியைப் பற்றிய படிப்பு புவியியல். இயற்கை வளங்கள், காலநிலை, கடல், மனித புவியியல் ஆகியவை பற்றிப் படிப்பதே இதன் அடிப்படை.

காலநிலை, மேகக் கூட்டங்கள், ஆழ் கடல், கடல் அலை, புவித் தகவல் தொழில்நுட்பம், தொலை உணர்வுப் படங்களின் விவரங்கள் ஆகியவை குறித்தெல்லாம் அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்தப் படிப்பு உகந்தது.

காலநிலையியல், வரைபடக் கலையியல், பேராழியியல், புவிப்புறவியல், மனிதப் புவியியல், சமூகப் புவியியல், புவித் தகவல் தொழில்நுட்பம், தொலை உணர்வுப் படங்கள் எனப் பல பிரிவுகள் உள்ளன. புவியியலில் ஆர்வம் உள்ள மாணவர்கள், அறிவியல் பாடம் எடுத்துப் படித்தாலும் கலைப் பிரிவில் படித்திருந்தாலும் இளங்கலையில் புவியியலை தேர்வு செய்யலாம்.

இளங்கலைப் பிரிவானது சென்னை மாநிலக் கல்லூரியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும், ராணி மேரி கல்லூரியிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.

முதுகலைப் பட்டப் படிப்பு, சென்னைப் பல்கலைக்கழகப் புவியியல் துறையிலும், மாநிலக் கல்லூரியிலும், ராணி மேரிக் கல்லூரியிலும், பாரதிதாசன், மதுரை காமராஜர் ஆகிய பல்கலைக்கழகங்களிலும் வழங்கப்படுகின்றன. முனைவர் பட்ட ஆய்வையும் மேற்கொள்ளலாம்.

இந்தியாவில் புவியியல் துறைக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. அதாவது தேசிய தொலை உணர்வு அமைப்பு, இந்திய சர்வே அமைப்பு, டேராடூன் பிராந்திய தொலை உணர்வு அமைப்பு ஆகியவற்றில் வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆசிரியர், பேராசிரியர் போன்ற பணிகள் கிடைக்கும். தற்போது அனைத்து அரசு நிறுவனங்களிலும் புவித் தகவல் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் தேவைப்படுகிறார்கள்.


Next Story