ஆலய வழிபாட்டால் அமைதி கிடை க்கும் நாள். உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
அலுவலகத்தில் பணிபுரிவோர் பதவி உயர்வு பற்றியோ, சம்பள உயா்வு பற்றியோ பேச வேண்டாம். சில காலம் பொறுமையாக இருங்கள். தொழில் நன்றாக நடைபெற, அதிக உழைப்பை வெளிப்படுத்த வேண்டியதிருக்கும். குடும்பம் நன்றாக நடந்தாலும், சிறுசிறு பிரச்சினைகளும் ஏற்படத்தான் செய்யும். கவனமாக செயல்படுங்கள். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.
வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஆனால் தனாதிபதி சுக்ரன், விரயாதிபதி குருவுடன் கூடி விரய ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். எனவே வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும்.
மீன - செவ்வாய் சஞ்சாரம்
வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அஷ்டமாதிபதியாக இருக்கும் செவ்வாயும் 12-ம் இடத்திற்குச் செல்லும் போது, திட்டமிடாது செய்யும் சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம், விலை உயர்ந்து உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யப்போகிறது. விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள்.
சனி - செவ்வாய் பார்வைக் காலம்
வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். எனவே விரய ஸ்தானம் வலுக்கிறது. இதனால் வாங்கிய இடத்தை விற்கும் சூழ்நிலை ஒரு சிலருக்கு ஏற்படலாம். கோபத்தின் காரணமாக சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்
வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். இதனால் சகோதர ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். இதனால் பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி உங்கள் ராசிக்கு வருகிறார். இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றியாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கல்யாண முயற்சி கைகூடும்.
மகரச் சனியின் வக்ர காலம்
உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் வைகாசி 11-ந் தேதி முதல் மகரத்தில் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தொழில் வளர்ச்சியில் தடைகள் ஏற்படலாம். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். திட்டமிட்ட பணிகளை குறித்த நேரத்தில் செய்ய இயலாது. வாகனங்களால் தொல்லையுண்டு. வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளிலும் குறுக்கீடு வரலாம். இக்காலத்தில் சனிபகவானையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.
இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:மே: 19, 20, 23, 24, 30, 31, ஜூன்: 4, 5 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்க வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். குலதெய்வ வழிபாடு குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும். கணவன் - மனைவி உறவு திருப்தி தரும். உறவினர்களை யும், உடன்பிறப்புகளையும் அனுசரித்துச் செல்லுங்கள். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். சனியின் வக்ர காலத்தில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டால் வீண் பழி உண்டாகாது.
(அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை)
பெயரின் முதல் எழுத்துக்கள்:சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்
செல்வ நிலை உயரும்
மேஷ ராசி நேயர்களே!
இந்த தமிழ் புத்தாண்டு, பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை உங்களுக்குத் தரப்போகின்றது. எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். மதிநுட்பத்தோடு செயல்பட்டு மக்களின் செல்வாக்கைப் பெறப்போகிறீர்கள்.
புத்தாண்டின் தொடக்க நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், தனாதிபதி சுக்ரனோடு இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்ப ஸ்தானாதிபதியும், களத்திர ஸ்தானாதிபதியுமான சுக்ரனோடு உங்கள் ராசிநாதன் இணைந்திருப்பதால், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிக லாபம் தரக்கூடிய விதத்தில் தொழிலும் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். வருமானப் பற்றாக்குறை அகலும். உத்தியோகத்தில் சம்பள உயர்வும், நல்ல பொறுப்புகளும் கிடைக்கலாம்.
உங்கள் ராசியிலேயே சூரியன், புதனோடு இணைந்து ‘புத ஆதித்ய யோக’த்தை உருவாக்குகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியன் உச்சம் பெற்று, அவரோடு சகாய ஸ்தானாதிபதி புதன் இணைந்திருப்பதால் பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
ஜென்மத்தில் ராகுவும், 7-ல் கேதுவும் இருப்பதால் சர்ப்ப தோஷ ஆதிக்கம் இருக்கிறது. எனவே அதற்குரிய பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. ஒருசில சமயங்களில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை உருவாகும். பொருளாதார மேம்பாடு கருதி புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது, பங்குதாரர்களின் சாதகம் பக்கபலமாக இருக்கின்றதா? என்பதை ஆராய்ந்து பார்த்து அதற்கு ஏற்ப தொழில்களை அமைத்துக் கொள்வது நல்லது.
தொழில் ஸ்தானத்தில் சனி பலம்பெற்றிருப்பதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். என்றாலும் அதன் வக்ர காலத்தில் கொஞ்சம் கவனமுடன் செயல்பட வேண்டும். கூட்டாளிகளால் பிரச்சினை ஏற்படலாம். குருவைப் பொறுத்தவரை வருடத் தொடக்கத்திலிருந்து விரய ஸ்தானத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. விரயாதிபதி விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இந்த ஆண்டு விரயங்கள் கூடும். எனவே சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக இல்லத்தில் சுப காரியங்களை நடத்துவது, வீட்டிற்குத் தேவையான உபகரணங்களை வாங்குவது போன்ற சுப விரயங்களை மேற்கொள்ளலாம்.
குருவின் பார்வை பலன்
மீனத்தில் சஞ்சரிக்கும் குரு, இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். வாகனம், வீடு, தாய், சவுகர்யம், எதிர்ப்பு, வியாதி, கடன், இழப்பு, விரயம் ஆகியவற்றைக் குறிக்கும் ஸ்தானங்களைக் குரு பார்த்தால் வருமானம் திருப்திகரமாக இருக்கும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. மாற்று மருத்துவத்தால் உடல் ஆரோக்கியம் சீராகும். கடன்சுமை ஓரளவு குறையும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு இழந்த பதவிகள் கூட மீண்டும் கிடைக்கும்.
8.8.2022 முதல் 16.11.2022 வரை, மீன ராசியில் குரு வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கிறார். பெற்றோர் வழியில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உற்றார், உறவினர்களால் விரயங்கள் ஏற்படும். வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வந்துசேரும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நிதானமும், பொறுமையும் தேவைப்படும் நேரம் இது. பிடிவாதக் குணத்தையும், கோபத்தையும் குறைத்துக் கொள்ளுங்கள். முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு சலுகைகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். பணியிட மாற்றத்திலும் திருப்தி ஏற்படாது.
சனியின் வக்ரமும், பெயர்ச்சி காலமும்
25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். 29.3.2023-ல் கும்ப ராசிக்கு சனி, பெயர்ச்சியாகிச் செல்கின்றார். சனியின் வக்ர காலத்தில் தொழிலில் கவனம் தேவை. பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் உருவாகலாம். பொதுவாக சனிப்பெயர்ச்சிக்குப் பின்னால் லாப ஸ்தானம் பலம்பெறுகிறது. எனவே தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். கூட்டுத் தொழிலில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
விரய ஸ்தானத்தில் குரு இருப்பதால் குரு கவசம் பாடி குருவை வழிபடுவதோடு வியாழன் தோறும் விரதமிருப்பது நல்லது. குரு வழிபாடு குதூகலம் வழங்கும்.
பெண்களுக்கான பலன்கள்
புத்தாண்டில் கொடுக்கல்- வாங்கல்களில் திருப்தி ஏற்படும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். கணவன் - மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி, கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பிடிவாதக் குணத்தைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வது நல்லது. சர்ப்ப தோஷம் இருப்பதால் ராகு-கேது பரிகாரத்தை முறையாக யோகபலம் பெற்ற நாளில் அனுகூல ஸ்தலங்களில் செய்து கொள்ளுங்கள்.
27-12-2020 முதல் 20-12-2023 வரை
மகரத்தில் வருகிறது சனி மகத்தான பலன் கிடைக்கும் இனி! மேஷ ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், தொழில் ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கப்போவது யோகம்தான். இதனால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கின்றார். அவரோடு இப்பொழுது சனியும் சேருவதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ ஏற்படுகின்றது. எனவே சனியால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்க, குருவின் அனுகூலமும் கைகொடுக்கும்.
தொழிலில் பணவரவு கூடும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு வரும் சனி பகவானால் தொழில் வளர்ச்சி சிறப்பாக அமையும். கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுக்கும் ஆற்றல் சனி பகவானுக்கு உண்டு. எனவே தொழிலில் லாபத்தை அள்ளிக்கொடுப்பர். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 4, 7, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. அதன்படி பூமி, சுகம், தாய், கல்வி, வியாபாரம், களத்திரம், பயணம், விரயம் ஆகியவற்றைக் குறிக்கும் 4-ம் இடத்தில், சனியின் பார்வை பதிவதால் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படலாம். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. சனியின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடிவரும். ஏற்கனவே பேசி கைவிடப்பட்ட வரன்கள், மீண்டும் தேடிவரலாம். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். உறவினர்களோடு மனம் விட்டுப் பேசி சில பிரச்சினைகளுக்கு நல்ல முடிவெடுப்பீர்கள். சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயணங் கள் அதிகரிக்கும். இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும்பொழுது, பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் வந்துசேரும். சூரியன் 5-ம் இடத்திற்கு அதிபதியானவர். அவரது சாரத்தில் சனி சஞ்சரிக்கும்பொழுது, பொதுவாழ்வில் புகழ்கூடும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சந்திரன். எனவே இக்காலத்தில் இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் போது, ராசிநாதன் காலில் சனி உலா வருவதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. இடையில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கின்றார். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். லாபமும் கிடைக்கும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும்பொழுது, விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். உறவினர்கள் பகை உருவாகலாம். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ஜென்ம குருவாக வருவதால் இடமாற்றங்களும், ஊர்மாற்றங்களும் ஏற்படலாம்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சியாகும்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அதன்படி உங்கள் ராசிக்கு, ஜென்மத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் வருவதால் குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை. வாழ்க்கைத் துணை வழியே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. 8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அந்த நேரத்தில் நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். சிக்கல்களில் இருந்தும், சிரமங்களில் இருந்தும் விடுபடுவீர்கள்.
வெற்றிக்குரிய வழிபாடு
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானுக்குரிய ‘கருநிறக் காகம் ஏறி..’ என்ற சனி கவசப் பாடலைப் பாடி வழிபடுங்கள். அதோடு ஆதியந்தப் பிரபு படத்தை இல்லத்து பூஜை அறையில் வைத்து அருகம்புல் மாலையும், வெற்றிலை மாலையும் அணிவித்து வழிபட்டால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி பகவான் வக்ரமடைகின்றார்.
தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதி வக்ரமடைவது அவ்வளவு நல்லதல்ல. மிகுந்த கவனம் தேவை. எதிரிகள் பலம் கூடும். பிறருக்கு பொறுப்புகள் சொல்வதால் பிரச்சினைகள் உருவாகும். விரயம் உண்டு. தைரியமும், தன்னம்பிக்கையும், தெய்வ பலமும் உங்களுக்கு கைகொடுத்து உதவும். எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சி, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பெயர்ச்சியாக அமையப்போகின்றது. பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். உடன் பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக்கொடுப்பர். பணிபுரியும் பெண்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சனியின் வக்ர காலத்தில் உங்கள் ஆரோக்கியத்திலும், பெற்றோர்களின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கை கூடும்.
21.03.2020 முதல் 07.10.2022 வரை
(அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை)
பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ,ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்
ராசிக்கு வருகிறது ராகு; யோசித்துச் செயல்பட்டால் வெற்றி
மேஷ ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், மார்ச் 21-ந் தேதி முதல் உங்கள் ராசியிலேயே பிரவேசிக்கப் போகிறார். அதே நேரத்தில் சப்தம ஸ்தானத்திற்கு கேது வருகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் இந்த இடத்தில் சஞ்சரித்து, நட்சத்திரப் பாதசாரங்களில் பவனி வரும்பொழுது அதற்கேற்ப பலன்களை வழங்குவார்கள்.
ஜென்ம ராகு, சப்தம கேது
கடந்த 1½ ஆண்டாக, உங்கள் ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு, இப்பொழுது ஜென்ம ராசிக்கு மாறுகிறார். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்த கேது, சப்தம ஸ்தானத்திற்கு பெயர்கிறார். எனவே சுபச்செலவுகளும், மங்கள நிகழ்ச்சிகளும் இல்லத்தில் நடைபெறும்.
சூரிய சாரத்தில் ராகு சஞ்சாரம்(21.3.2022 முதல் 22.5.2022 வரை)
கார்த்திகை நட்சத்திரக் காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சூரியன் என்பதால், தொழில் வெற்றி நடைபோடும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
சுக்ரன் சாரத்தில் ராகு சஞ்சாரம்(23.5.2022 முதல் 28.1.2023 வரை)
பரணி நட்சத்திரக் காலில் சுக்ரனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார நிலை சீராகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகளும், உடன் இருப்பவர்களும் உதவிகரமாக இருப்பர். கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சாரம்(29.1.2023 முதல் 7.10.2023)
அசுவினி நட்சத்திரக் காலில் கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, அதிக விழிப்புணர்ச்சி தேவை. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம். மருத்துவச் செலவு கூடும். உத்தியோகத்தில் திடீா் மாற்றங்கள் உருவாகும். உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
குரு சாரத்தில் கேது சஞ்சாரம் (21.3.2022 முதல் 25.9.2022 வரை)
விசாக நட்சத்திரக் காலில் குருவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் உறுதியாகும். அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். பயணங்கள் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.
ராகு சாரத்தில் கேது சஞ்சாரம்(26.9.2022 முதல் 3.6.2023 வரை)
சுவாதி நட்சத்திரக் காலில் ராகுவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். இல்லம் கட்டிக் குடியேறுதல் அல்லது இல்லம் வாங்கிக் குடியேறுதல் போன்ற நல்ல சம்பவங்கள் நடைபெறலாம். ஒரு சிலருக்கு ஊா் மாற்றங்கள் ஏற்படலாம். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
செவ்வாய் சாரத்தில் கேது சஞ்சாரம்(4.6.2023 முதல் 7.10.2023 வரை)
சித்திரை நட்சத்திரக் காலில் செவ்வாயின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். கொடுக்கல் - வாங்கல்கள் தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைந்து பொருளாதார நிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர். வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானம் வந்துசேரும்.
குருப்பெயா்ச்சிக் காலம்
ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நடைபெறுகிறது. ஏப்ரல் 13-ந் தேதி மீன ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை பலத்தால் ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல்கள் ஏராளமாக வந்துசேரும். 22.4.2023 அன்று மேஷத்திற்கு குரு பெயர்ச்சியாகிறார். இதனால் ‘குரு மங்கள யோகம்’ உருவாகும். அரைகுறையாக நின்ற காரியங்கள் அனைத்தும் நடந்தேறும். குருவின் பார்வை பலத்தால் பிள்ளைகளுக்கு வேலையும், மலர் மாலையும் கிடைக்கும்.
சனிப்பெயர்ச்சி காலம்
16.3.2023 அன்று கும்ப ராசிக்கு, சனி பகவான் பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானாதிபதியான சனி, லாப ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பது யோகம்தான். பொருளாதாரத்தில் உச்ச நிலை உருவாகும். எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமென்று நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்திலேயே செய்து முடிப்பீர்கள்.
பெண்களுக்கான பலன்கள்
இந்த ராகு - கேது பெயர்ச்சியில், உங்களுக்கு ஜென்ம ராகுவாக அமைவதால் எதையும் யோசித்துச் செய்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு ஓரளவு படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கும் யோகம் கைகூடும். வாழ்க்கைத் துணை வழியே விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கலாம். மாரியம்மன் வழிபாடு மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
பன்னிரண்டில் வந்தது குரு பகவான்; பண விரயங்கள் அதிகரிக்கும்
பிறருக்கு உதவும் பெருந்தன்மையான குணம் படைத்த மேஷ ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான், 13.4.2022 முதல் 12-ம் இடமான விரய ஸ்தானத்திற்கு வருகிறார். இதனை ‘பயண ஸ்தானம்’ என்றும், ‘அயனசயன ஸ்தானம்’ என்றும் சொல்வார்கள். இந்த இடத்தில் குரு சஞ்சரிப்பதால் வரவைக்காட்டிலும் செலவு கூடும். ‘எவ்வளவு பணம் வந்தாலும் மறுநிமிடம் செலவாகிவிடுகிறதே’ என்ற எண்ணம் தோன்றும். இருப்பினும், சுபவிரயங்களைச் செய்வதன் மூலம் வீண் விரயங்களில் இருந்து தப்பிக்கலாம்.
குரு இருக்கும் இடத்தின் பலன்
நவக்கிரகங்களில் குருவை ‘சுபகிரகம்’ என்பார்கள். அப்படிப்பட்ட கிரகம் இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கே பலன். சனி இருக்கும் இடத்திற்கு பலன் கொடுப்பார். குரு பார்க்கும் இடத்திற்கு பலன் கொடுப்பார். அந்த அடிப்படையில் குரு பகவான் இருக்கும் இடம், உங்கள் ராசிக்கு விரய ஸ்தானம். ஆகையால் வரவு ஒருமடங்கு என்றால் செலவு இருமடங்காகும். வாழ்க்கைத் தேவைகள் இறுதி நேரத்தில் பூர்த்தியாகும். பழைய கடன்களை அடைக்க வருமானம் வந்தாலும், புதிய கடன் வாங்கும் சூழ்நிலையும் சிலருக்கு ஏற்படும். தங்களுக்கோ, தங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ, ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உருவாகலாம். உறவினர்களுக்கோ, மற்றும் உடன்பிறப்புகளுக்கோ திருமணச்செலவுகள், குழந்தை பிறப்புச் செலவுகள், பெண் பிள்ளைகளின் சுபச்சடங்கு செலவுகள், பெற்றோர்களின் மணிவிழாக்கள் என்று பலவிதமாகவும் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வீடு வாங்கும் அல்லது வீட்டைப் பழுது பார்க்கும் யோகம் உருவாகும். பிள்ளைகளுக்கு நல்ல வேலைகிடைத்து, உதிரி வருமானம் வந்து, குடும்ப பொருளா தாரத்தை உயர்த்தும்.
குருவின் பார்வை பலன்
மீனத்திற்கு பெயர்ச்சியாகும் குரு, உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களை பார்க்கப் போகிறார். ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பார்கள். அதன் பார்வை பலத்தால் பல நன்மைகள் கிடைக்கும். 4-ம் இடத்தைப் பார்ப்பதால், கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையைச் சரிவரச் செய்து முடிப்பீர்கள். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். தாய்வழி ஆதரவு உண்டு. இடம், பூமி சம்பந்தமாக எடுத்த முயற்சி, வாகனம் வாங்கும் முயற்சியில் இருந்த தடை அகலும். பணிபுரிபவர்களுக்கு, கூடுதல் பொறுப்பு வரலாம்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
சுய சாரத்தில் குரு சஞ்சாரம் (13.4.2022 முதல் 30.4.2022 வரை)
உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதியானவர் குரு. அவர் பூரட்டாதி நட்சத்திரக் காலில், தன் சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பாக்கிய ஸ்தானம் பலம்பெறும். இக்காலத்தில் குரு பகவான், செலவிற்கேற்ற வரவைக் கொடுத்துக் கொண்டேயிருப்பார். குடும்பச்சுமை கூடும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். பெற்றோரின் ஆதரவோடு சில பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வீர்கள். திருமண வயதை அடைந்த பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடும். இடமாற்றம், வீடுமாற்றம், பதவி மாற்றம் வரும் நேரம் இது.
சனி சாரத்தில் குரு சஞ்சாரம் (1.5.2022 முதல் 24.2.2023 வரை)
உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர், சனி பகவான். அவரது சாரத்தில் உத்திரட்டாதி நட்சத்திரக் காலில் குரு சஞ்சரிக்கும்போது, தொழில்வளம் சிறப்பாகும். எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், மருத்துவம் சம்பந்தமான தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது ஒரு இனிய காலமாக அமையும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
புதன் சாரத்தில் குரு சஞ்சாரம் (25.2.2023 முதல் 22.4.2023 வரை)
உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதி, புதன். ரேவதி நட்சத்திரக் காலில் புதன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும்போது, மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். வழக்குகள் சமாதானத்திற்கு வரும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து இணைவர். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் பலம் குறையும். கொடுத்த கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியைத் தரும். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும்.
குரு வக்ர இயக்கம் (20.7.2022 முதல் 16.11.2022 வரை)
இக்காலத்தில் குரு பகவான், சனியின் சாரத்தில் சஞ்சரித்து வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. எனவே இக்காலத்தில் நிதானமும், பொறுமையும் அவசியம். எதிர்மறைச் சொற்களை தவிர்த்து, நேர்மறைச் சொற்களை பேசுங்கள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. எனவே சலுகைகள் கிடைப்பது தாமதப்படும். வழிபாட்டின் மூலமே நல்ல பலன்களை வரவழைத்துக் கொள்ள இயலும்.
பெண்களுக்கான பலன்கள்
குருப்பெயர்ச்சியின் விளைவாக பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் கவனம் தேவை. வருமானப் பற்றாக்குறை அதிகரிக்கும். கணவன்- மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்படுங்கள். கூட்டுக் குடும்பத்திலும் பிரச்சினை உண்டு. உங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பாராத மாற்றம் வரலாம். அலுவலகத்தில் சகப் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையும். வியாழன் தோறும் விரதமும், குரு வழிபாடும் நன்மை தரும்.
வளம் தரும் வழிபாடு
இந்தக் குருப்பெயர்ச்சியால் இனிய பலன் கிடைக்க, நவக்கிரகத்தில் உள்ள குருவை வழிபடுவதோடு, சிறப்பு வழிபாடாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வழிபாட்டையும் மேற்கொண்டால் வாழ்க்கை வளமாகும்.
எங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு
Paper Ad Tariff | Web Ad Tariff | Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi | Powered by VishwakAstrology
5/17/2022 2:51:34 PM
http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Aries