ரூ.119 கோடி வசூல் சாதனை... ஜப்பானில் 200 நாட்கள் ஓடிய ஆர் ஆர் ஆர் படம்


ரூ.119 கோடி வசூல் சாதனை... ஜப்பானில் 200 நாட்கள் ஓடிய ஆர் ஆர் ஆர் படம்
x
தினத்தந்தி 11 May 2023 2:01 AM GMT (Updated: 11 May 2023 2:43 AM GMT)

ஜப்பான் ரசிகர்கள் இந்திய படங்களை பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களை ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டு வருகிறார்கள். ரஜினிகாந்தின் முத்து படத்தை பார்த்த பிறகு அவருக்கு ஜப்பானில் ரசிகர் மன்றத்தையே தொடங்கி உள்ளனர். சமீப காலங்களில் திரைக்கு வந்த அனைத்து ரஜினி படங்களும் ஜப்பானிலும் திரையிடப்பட்டன.

இந்த நிலையில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் தயாராகி தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியிடப்பட்டு வசூல் சாதனை நிகழ்த்திய ஆர் ஆர் ஆர் படத்தையும் ஜப்பானில் வெளியிட்டனர். இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றதும் ஜப்பானியர்கள் ஆர்வமாக படத்தை பார்த்தனர்.

ஜப்பானில் 44 நகரங்களில் 209 தியேட்டர்களில் ஆர் ஆர் ஆர் படம் திரையிடப்பட்டது. 31 ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் திரையிடப்பட்டன. இந்த நிலையில் ஜப்பானில் ஆர் ஆர் ஆர் படம் 200 நாட்கள் ஓடி ரூ.119 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. இதன் மூலம் ஜப்பானில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற பெருமையை ஆர் ஆர் ஆர் பெற்றுள்ளது. ஆர் ஆர் ஆர் படம் உலகம் முழுவதும் ரூ.1,235 கோடி வசூலித்து உள்ளது.


Next Story