சினிமாவில் 32 ஆண்டுகள்... ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விக்ரம்
விக்ரம் சினிமாவுக்கு வந்து 32 ஆண்டுகள் ஆனதை வலைத்தளத்தில் ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள். இதையடுத்து டுவிட்டரில் விக்ரம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரம் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிறது. 1990-ல்தான் விக்ரம் நடித்த முதல் படமான 'என் காதல் கண்மணி' வெளியானது. அதன் பிறகு தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து விட்டு 1994-ல் புதிய மன்னர்கள் படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு வந்தார். பிதாமகன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.
திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. விக்ரம் சினிமாவுக்கு வந்து 32 ஆண்டுகள் ஆனதை வலைத்தளத்தில் ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள்.
இதையடுத்து டுவிட்டரில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விக்ரம் வெளியிட்டுள்ள பதிவில், ''இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெறும் முயற்சி மட்டுமே. இந்த 32 வருடத்துக்கு நன்றி'' என்று கூறியுள்ளார். வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் பீமா, ஜெமினி, ஸ்கெட்ச், மகான், சாமி, அந்நியன், ராவணன், தெய்வத்திருமகள், பிதாமகன், தாண்டவம், ஐ, கடாரம் கொண்டான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் விக்ரம் நடித்த காட்சிகள் இடம்பெற்று உள்ளன.