பாடகர்களாக கலக்கும் நடிகர்-நடிகைகள்


பாடகர்களாக கலக்கும் நடிகர்-நடிகைகள்
x

சினிமாவின் தொடக்கத்தில் நடிகர்-நடிகைகளே சொந்தக் குரலில் பாடி நடித்தார்கள். காலப்போக்கில் சொந்தக்குரலில் பாடுவதும், பேசுவதும் மறைந்து போனது. இப்போது மீண்டும் பழைய காலத்து நடைமுறை வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் தங்கள் படங்களில் பாடல்கள் பாடி, பாடகர்களாகவும் தங்களை அடையாளப்படுத்தி உள்ளனர். அதற்கு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆரம்ப காலங்களில் தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, பிறகு சந்திரபாபு, பானுமதி போன்றவர்கள் சொந்தக் குரலில் பாடி நடித்தார்கள். சந்திரபாபு பாடிய `பிறக்கும்போதும் அழுகின்றாய், இறக்கும்போதும் அழுகின்றாய்...', `குங்குமப்பூவே...' போன்ற பாடல்கள் காலத்தால் அழியாத கானமாக நிற்கின்றன. பானுமதி பாடிய `மாசிலா உண்மை காதலே...', `அழகான பொண்ணு நான்...' போன்ற பாடல்கள் காலம் கடந்தும் ரசிக்க வைக்கின்றன.

வில்லனாக நடித்த அசோகன் `இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான் அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்...' என்ற தத்துவப் பாடலை பாடி இருந்தார்.

டி. ராஜேந்தர் `தங்கைக்கோர் கீதம்' படத்தில் `தட்டிப்பார்த்தேன் கொட்டாங்குச்சி...' பாடலை பாடினார். திரைக்கதை ஜாம்பவான் என்று பெயர் எடுத்த பாக்யராஜ் `இது நம்ம ஆளு' படத்தில் `பச்சை மலை சாமி ஒண்ணு...' என்ற பாடலை பாடி அசத்தியிருந்தார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் ரஜினி `மன்னன்' படத்தில் `அடிக்குது குளிரு...' என்ற பாடலை பாடி இருந்தார்.

கமல்ஹாசன், `பன்னீர் புஷ்பங்களே ராகம் பாடு...', `நினைவோ ஒரு பறவை...', `ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்லை...', `சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்...', `இஞ்சி இடுப்பழகி...', `மாறுகோ மாறுகோ...', என பல பாடல்கள் பாடி உள்ளார். சமீபத்தில் வெளிவந்த `விக்ரம்' படத்தில் `பத்தல... பத்தல...' பாடலை பாடி தெறிக்க விட்டிருந்தார்.

நகைச்சுவை நடிகரான வடிவேலுவும் `எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட பாடும்...' உள்பட பல பாடல்களை பாடி உள்ளார். `அமரன்' படத்தில் கார்த்திக் பாடிய `வெத்தல போட்ட ஷோக்குல...' பாடலையும் மறந்து விட முடியாது.

விஜய் முதன்முதலாக `ரசிகன்' படத்தில் `பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி...' என்ற பாடலை பாடினார். தற்போது `லியோ' படத்தில் பாடிய `நான் ரெடி' பாடல் பெரிய அளவில் வைரல் ஆகி உள்ளது. விஜய் இதுவரை 30-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

தனுஷ் `எங்க ஏரிய உள்ள வராத...', `ஒய் திஸ் கொலவெறி டி...' என 20-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கவனம் ஈர்த்துள்ளார். தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் 80-க்கும் மேற்பட்ட பாடல்களை சிம்பு பாடியுள்ளார்.

விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, விஜய் ஆண்டனி, சித்தார்த் உள்ளிட்டோரும் பாடல்கள் பாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். நடிகைகளில் வசுந்தரா தாஸ் பாடிய `ஷக்கலக்க பேபி...', `கட்டிப்புடி கட்டிப்புடிடா...' ஆகிய பாடல்கள் புகழ் பெற்றவை.

ஆண்ட்ரியா `புஷ்பா' படத்தில் இடம்பெற்ற `ஊ சொல்றியா மாமா...' பாடல் மூலம் ரசிகர்களை எந்நேரமும் முணுமுணுக்க வைத்தார். சுருதிஹாசன் பல மொழிகளில் பாடி உள்ளார். கனிகா `பைவ் ஸ்டார்' படத்தில் நடிகையாக வும், பாடகியாகவும் அறிமுகமானார்.

ரம்யா நம்பீசன் `சகலகலா வல்லவன்', `மன்னர் வகையறா', `பிளான் பண்ணி பண்ணனும்' உள்பட பல படங்களில் பாடியுள்ளார்.

மம்தா மோகன்தாஸ் `வில்லு' படத்தில் `டாடி மம்மி வீட்டில் இல்ல...' என்ற பாடலை பாடி இருந்தார்

கீர்த்தி சுரேஷ், `சாமி-2' படத்திலும், நித்யா மேனன் `மார்கழி திங்கள்' படத்திலும் பாடியுள்ளனர். ராஷி கன்னா தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் பாடி இருக்கிறார்.

தங்கள் அபிமான நடிகர்-நடிகைகள், நடிப்பில் காண்பிக்கும் அதே வசீகரத்தை குரலிலும் காண்பித்து வருவதால் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.


Next Story