தமிழ் சினிமாவை நோக்கி படையெடுக்கும் நடிகைகள்


தமிழ் சினிமாவை நோக்கி படையெடுக்கும் நடிகைகள்
x

தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள ஏராளான புதுமுக நடிகைகளில் சிலரை பற்றிய விவரங்கள்:-

சினிமாவின் தொடக்க காலத்தில் கதாநாயகிகளை நடிக்க வைக்கும் விஷயத்தில் மிகுந்த போராட்டம் நிலவியது. கதாநாயகிகள் கிடைக்காத அந்தக் காலகட்டங்களில் ஆண் நடிகர்களே பெண்களாக வேஷம் கட்டிய வரலாறும் உண்டு.

காலப்போக்கில் அந்த நிலை மாறி டி.ஆர்.ராஜகுமாரி, அஞ்சலி தேவி, பத்மினி, பானுமதி, சாவித்ரி, சரோஜா தேவி, ஜெயலலிதா என மகத்தான நடிகைகள் தமிழ் சினிமாவை அலங்கரித்தார்கள்.

அடுத்த கட்டமாக, ஸ்ரீப்ரியா, ஸ்ரீவித்யா, பானுப்ரியா, அம்பிகா, ராதிகா, ராதா, சரிதா, மாதவி, ரேவதி, குஷ்பு, கவுதமி, ரோஜா, சிம்ரன் என பலர் தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார்கள்.

பிறகு நயன்தாரா, திரிஷா, தமன்னா போன்ற நடிகைகள் நடிக்க ஆரம்பித்து இன்றளவும் தங்கள் மார்க்கெட்டை தக்க வைத்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது இந்தி, மலையாளம், கன்னடத்தில் இருந்து, ஏராளமான புதுமுக நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு படையெடுத்து வருகிறார்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள், எம்.பி.ஏ. பட்டதாரிகள் என உயர் கல்வி படித்த பெண்களும் சினிமா பக்கம் திரும்பி உள்ளனர்.

சினிமா கைக் கொடுக்காவிட்டால் ஓ.டி.டி படங்கள், வெப் சிரீஸ், ரியாலிட்டி ஷோக்கள் என பல வேலை வாய்ப்புகள் உருவாகி இருப்பதால் துணிச்சலாக அவர்கள் சினிமாவுக்கு படையெடுத்து வருவதை பார்க்க முடிகிறது.

புதுமுக நடிகைகள், முன்பு ஆயிரங்களிலும், ஓரிரு லட்சங்களிலும் சம்பளம் வாங்கி வந்த நிலை மாறி, இப்போது அறிமுக படத்திலேயே ஐந்து லட்சம், பத்து லட்சம், ஐந்து நட்சத்திர ஓட்டல் என பல்வேறு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள ஏராளான புதுமுக நடிகைகளில் சிலரை பற்றிய விவரங்கள்:-

பிரியங்கா அருள்மோகன்: சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா அருள் மோகன். தொடர்ந்து 'எதற்கும் துணிந்தவன்', 'டான்' போன்ற படங்கள் இவருக்கு தமிழில் முக்கிய இடத்தை பிடிக்க உதவியது. தற்போது தனுஷுடன் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார்.

சித்தி இதானி: சிம்புவுடன் நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் பிரபலமாகி உள்ள சித்தி இதானி இப்போது ஆர்யாவுடன் நடித்து வருகிறார்.

இவானா: பாலாவின் 'நாச்சியார்' படத்தில் அறிமுகமான இவானாவுக்கு சமீபத்தில் வெளியான 'லவ்டூடே' படத்தில் ஜாக்பாட் அடித்தது. தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'கள்வன்' படத்தில் நடித்துள்ளார்.

ஷிவானி நாராயணன்: தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோ மூலம் சினிமாவுக்கு வந்த இவர், கமலின் 'விக்ரம்', ஆர்.ஜே.பாலாஜியின் 'வீட்ல விசேஷம்' உட்பட சில படங்களில் நடித்தார்.

ஆஷிகா ரங்கநாத்: கன்னடத்தில் சில படங்களில் நடித்த ஆஷிகா ரங்கநாத்துக்கு அதர்வா நடித்த 'பட்டத்து அரசன்' படம் தமிழ் சினிமாவில் நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ளது.

கஷ்மிரா பர்தேசி: 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் அறிமுகமானவர். இப்போது 'வசந்தமுல்லை', 'வரலாறு', 'பரம்பொருள்', 'பி.டி.சார்' என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

சம்யுக்தா ஹெக்டே: 'வாட்ச்மேன்' படத்தில் அறிமுகமான இவருக்கு 'ஜெயம்' ரவியுடன் நடித்த 'கோமாளி' திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து 'பப்பி', 'தேள்', 'மன்மதலீலை' என ஏராளமான படங்கள் வெளியாகி, தமிழில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.

துஷாரா விஜயன்: பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. தொடர்ந்து 'அன்புள்ள கில்லி', 'நட்சத்திரம் நகர்கிறது' என தமிழ் சினிமாவின் கவனம் பெற்ற படங்களில் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார்.

அஞ்சலி நாயர்: 'நெடுநெல்வாடை' படத்தில் அறிமுகமானவர். அந்தப் படத்தைத் தொடர்ந்து வெளிவந்த 'டாணாக்காரன்' இவருக்கு தமிழில் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. விமான பணிப்பெண்ணான இவருக்கு, வேலையை ராஜினாமா செய்யு மளவுக்கு வாய்ப்புகள் குவிந்துள்ளது.

பார்வதி அருண்: சசிகுமார் நடித்த 'காரி' படத்தில் அறிமுகமானவர். தற்போது 'மெமரீஸ்' உள்பட பல படங்கள் கைவசம் உள்ளன.

கோலிவுட்டுக்கு படையெடுத்துள்ள புதுமுக நடிகைகள் பட்டியலில் அகான்ஷா சிங், ஸ்ம்ருதி வெங்கட், ஐஸ்வர்யா மேனன், ஐஸ்வர்யா தத்தா, தன்யா ஹோப் உட்பட ஏராளமான நடிகைகள் இடம் பிடித்துள்ளனர்.


Next Story