'லியோ' பாடலை பாடி அசத்திய சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அனிருத்!


லியோ பாடலை பாடி அசத்திய சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அனிருத்!
x

அமெரிக்காவில் ‘லியோ’ படத்தின் பாடலை பாடி அசத்திய சிறுவனுக்கு அனிருத் தனது கண்ணாடியை பரிசளித்தார்.

வாஷிங்டன்,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ்-அனிருத் கூட்டணியில் 'விக்ரம்' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து 'லியோ' படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. முன்னதாக இந்த படத்தின் டைட்டில் பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. முழுவதும் ஆங்கில வரிகளைக் கொண்டு அமைந்திருந்த 'லியோ' பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவில் 'லியோ' படத்தின் பாடலை அனிருத் முன்னிலையில் ஒரு சிறுவன் பாடி அசத்தியுள்ளான். தற்போது தனது இசை நிகழ்ச்சிக்கான அமெரிக்கா சென்றுள்ள அனிருத், அங்கிருந்த ரசிகர்களுடன் உரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ஒரு சிறுவன் 'லியோ' பாடலை பாடியதை அனிருத் ரசித்துக் கேட்டார்.

உடனே அனிருத், தான் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி அந்த சிறுவனுக்கு பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.



1 More update

Next Story