பாலியல் வழக்கை வாபஸ் பெற நடிகைக்கு ரூ.1 கோடி தருவதாக பேரம்
பாலியல் வழக்கை வாபஸ் பெற ரூ.1 கோடி தருவதாக பேரம் பேசியதாக பாதிக்கப்பட்ட நடிகை தெரிவித்துள்ளார்.
மலையாள வில்லன் நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மயக்க மருந்து கொடுத்து பல தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் நடிகை சில வாரங்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்தது பரபரப்பானது. விஜய் பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் துபாய் தப்பி சென்று விட்டார். இதையடுத்து அவரது பாஸ்போர்ட்டை முடக்கினர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனும் அனுப்பினர். பின்னர் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியதால் கேரளா திரும்பி நடிகையை, "பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்றும், நடிகையின் சம்மதத்துடனேயே அது நடந்தது என்றும், அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்காததால் புகார் அளித்துள்ளார் என்றும் தெரிவித்தார். போலீசிலும் ஆஜரானார். இந்தநிலையில், புகாரை வாபஸ் வாங்க நடிகர் தரப்பில் இருந்து ரூ.1 கோடி பேரம் பேசியதாக பாதிக்கப்பட்ட நடிகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகை அளித்துள்ள பேட்டியில், " பாலியல் புகாரை வாபஸ் வாங்கினால் ரூ.1 கோடி தருவதாக அந்த நடிகரின் நண்பர் என்னிடம் பேரம் பேசினார். நான் மறுத்துவிட்டேன். என்ன நடந்தாலும் புகாரை வாபஸ் பெற மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்துவிட்டேன்" என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.