விவசாயிகளுக்கு உதவ கார்த்தி வேண்டுகோள்


விவசாயிகளுக்கு உதவ கார்த்தி வேண்டுகோள்
x

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு உதவ கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் கார்த்தி உழவன் அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கி இயற்கை விவசாயத்தில் சாதனை புரிபவர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வறண்ட நிலத்தை குத்தகை எடுத்து இயற்கை விவசாயம் செய்து சாதித்த கிராமத்து பெண்களை அழைத்து வந்து விருதுகள் வழங்கி பாரட்டினார்.

விழாவில் கார்த்தி பேசும்போது, "விவசாயிகள் உழவர் சந்தையிலோ, அங்காடிகளிலோ வேளாண் பொருட்களை கொண்டு செல்ல போக்குவரத்து தேவைப்படுகிறது. அதை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். 500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் அனைவரும் சேர்ந்து விவசாய கூட்டமைப்பிடம் தங்களுக்கு தேவையான காய்கறிகளை கேட்டால் அவர்கள் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.

அப்படி செய்தால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். நமக்கும் நஞ்சில்லாத உணவு கிடைக்கும். சிறு குறு விவசாயிகள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் வகையில் விவசாய கருவிகளை உருவாக்கும் போட்டி இந்த வருடம் நடைபெறும். விவசாயிகள் நம் எதிர்காலத்துக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு விவசாயம் பற்றிய புரிதலை ஏற்படுத்த அனைத்து பள்ளிகளிலும் விவசாய சுற்றுலாவை கட்டாயமாக்க வேண்டும். விவசாயிகள் பொருட்களை சேமித்து வைக்க அங்காடி அருகில் செயலாக்க கூடங்களை நிறுவ வேண்டும்'' என்றார். நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், ராஜ்கிரண், பொன்வண்ணன், டைரக்டர் பாண்டிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story