கேரளா குப்பை கிடங்கு தீ விபத்து; 6 ஆண்டுகளுக்கு முன்பே முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதிய நடிகர் மோகன்லால்


கேரளா குப்பை கிடங்கு தீ விபத்து; 6 ஆண்டுகளுக்கு முன்பே முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதிய நடிகர் மோகன்லால்
x

மலையாள நடிகர் மோகன்லால் 6 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரம்மபுரத்தில், 110 ஏக்கரில் செயல்பட்டு வரும் குப்பை கிடங்கில் கடந்த 2-ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் கொச்சியில் உள்ள பல்வேறு பகுதிகள் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதன் காரணமாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பேசுபொருளாக மாறியது. இதனிடையே மலையாள நடிகர் மோகன்லால் 6 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் மோகன்லால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கேரள முதல்-மந்திரி படிக்க வேண்டும் என்ற தலைப்பில் கேரளா எதிர்கொள்ளும் குப்பை பிரச்சினை குறித்து மோகன்லால் விவரித்துள்ளார்.

கேரளாவை அச்சுறுத்தும் மிகப்பெரிய பயங்கரவாதி யார் என்றால், அது குப்பையாக தான் இருக்கும் என்று அந்த கடிதத்தில் மோகன்லால் குறிப்பிட்டுள்ளார். பிரம்மபுரம் குப்பை கிடங்கு தீ விபத்தைத் தொடர்ந்து, மோகன்லாலின் இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் பரவி வருகிறது.
Next Story