மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு: திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த லோகேஷ் கனகராஜ்


மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு: திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த லோகேஷ் கனகராஜ்
x

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த மாதம் 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்ததால் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூலித்தது. மேலும் இப்படம் உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்றும், வெளிநாடுகளில் மட்டும் லியோ திரைப்படம் ரூ. 201 கோடி வசூலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.

நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். அவர் அந்த பதிவில், 'மன்சூர் அலிகான் என்னைப்பற்றி மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான முறையில் பேசும் வீடியோ குறித்து நான் கேள்விப்பட்டேன். அவரது பேச்சுக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். என்னுடன் நடிக்க அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால் அவரை போன்ற ஒரு கேவலமான மனிதருடன் நான் இணைந்து நடிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரை போன்றவருடன் இனிமேல் ஒருபோதும் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன். மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர்' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை திரிஷாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், 'மன்சூர் அலிகான் இவ்வாறு பேசியிருப்பது எனக்கு மிகவும் மன உளைச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் அனைவரும் ஒரே அணியாக பணியாற்றி இருக்கிறோம். அனைத்து துறைகளிலும் பெண்கள், சக பணியாளர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மரியாதை வழங்கப்பட வேண்டும். இந்த நடத்தையை நான் முற்றிலுமாக கண்டிக்கிறேன்' என பதிவிட்டிருந்தார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.


Next Story