'லியோ' படத்தின் வெற்றி விழா நடத்த அனுமதி ?


லியோ படத்தின் வெற்றி விழா நடத்த அனுமதி ?
x
தினத்தந்தி 29 Oct 2023 6:05 AM GMT (Updated: 29 Oct 2023 9:16 AM GMT)

லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு அனுமதி வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் லியோ படம் கடந்த வாரம் வெளியானது.

லியோ திரைப்படம் முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.461 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்தது. மேலும், தமிழ் சினிமா வரலாற்றில், முதல் வாரத்தில் அதிக வசூல் செய்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நடிகர் விஜய்யும் கலந்து கொள்கிறார். எனவே இந்த விழாவுக்கு பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு படத் தயாரிப்பாளர் கடிதம் கொடுத்திருந்தார்.

தற்போது இது தொடர்பாக காவல்துறை படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு வெற்றி விழா கொண்டாட்டம் தொடர்பான விவரங்களைக்கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த கடிதத்தில், விழாவானது எத்தனை மணிக்கு தொடங்கி , எத்தனை மணிக்கு முடிவடையும் என்று கேட்கப்பட்டுள்ளது. மேலும் பங்கேற்கும் முக்கிய நபர்களின் விவரங்களை காவல்துறைக்கு அளிக்க வேண்டும். ரசிகர்களுக்கு எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது. காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் தனியார் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்றும் அதில் கேட்டுள்ளனர். மேலும் விழாவில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்றும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர்.

இந்த நிலையில் லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு அனுமதி வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, நவம்பர் 1-ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் எந்த வித நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை. எனவே விழா நடத்த என்.ஒ.சி. கடிதம் பெற்று முன் தொகையும் செலுத்தினால் லியோ பட வெற்றி விழாவுக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மொத்தம் 8 ஆயிரம் இருக்கைகள் உள்ளன. இதில் பார்வையாளர்களுக்கு 5,500 இருக்கைகள், வி.ஐ.பி. களுக்கு 500 இருக்கைகள் என மொத்தம் 6,000 இருக்கைகள் ஒதுக்கப்படும், என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story