இந்தியன்-2 படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிடும் ரஜினிகாந்த்


இந்தியன்-2 படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிடும் ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 2 Nov 2023 10:46 AM GMT (Updated: 2 Nov 2023 11:11 AM GMT)

சினிமாவில் ரசிகர்கள் சண்டையிட்டு கொண்டாலும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

சென்னை,

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் பாலிவுட்டில் நாக் அஷ்வின் இயக்கும், 'கல்கி 2898 ஏடி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் இயக்கும் ஒரு படம் மற்றும் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். இதில் மணிரத்னம் பட பூஜை சமீபத்தில் போடப்பட்டது. அந்த படத்தின் டைட்டில் டீசர் கமலின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் மகேஷ் நாராயணன் படம் பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாக நடந்து வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, திருப்பதி, தென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இன்னும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இதனிடையே சமீபத்தில் டப்பிங் பணிகளை தொடங்கினார் கமல்.இந்த நிலையில் இந்தியன் - 2 படத்தின் கிளிம்ஸ் வீடியோ நவம்பர் 3-ம் தேதி வெளியாகும் என்று கடந்த மாதம் 29 -ம் தேதி படக்குழு அறிவித்திருந்தது.

தற்போது இந்தியன் - 2 திரைப்படத்துக்கான கிளிம்ஸ் வீடியோவை நாளை மாலை 5:30 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தெலுங்கு மற்றும் இந்தி மொழிக்கான கிளிம்ஸ் வீடியோக்களை இயக்குனர் ராஜமௌலி மற்றும் நடிகர் அமீர் கான் வெளிடுகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது..


Next Story