ரஜினியின் 170-வது படம் பெயர் 'வேட்டையன்'?


ரஜினியின் 170-வது படம் பெயர் வேட்டையன்?
x

ரஜினியின் 170-வது படத்துக்கு ‘வேட்டையன்' என்ற பெயரை வைக்க படக்குழுவினர் பரிசீலித்து வருவதாக இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது

ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படம் திரைக்கு வந்ததும் இமயமலைக்கு சென்று கோவில்களில் தரிசித்துவிட்டு திரும்பி இருக்கிறார். அடுத்த புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இது ரஜினிக்கு 170-வது படம். சூர்யாவை வைத்து 'ஜெய்பீம்' படத்தை இயக்கி பிரபலமான ஞானவேல் டைரக்டு செய்கிறார்.

அடுத்த சில நாட்களில் பட பூஜையை நடத்தி படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். போலி என்கவுண்டர் மூலம் அப்பாவிகள் கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க போராடும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஜினி நடிப்பதாகவும் கூறுகின்றனர்.

'ஜெயிலர்' படத்தில் பிறமொழி நடிகர்கள் நடித்ததுபோல், இதிலும் பல மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அமிதாப்பச்சனிடம் பேசி வருவதாக தகவல். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது.

இந்த படத்துக்கு 'வேட்டையன்' என்ற பெயரை வைக்க படக்குழுவினர் பரிசீலித்து வருவதாக இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது. இதுதான் படத்தின் தலைப்பா? என்பது விரைவில் தெரிய வரும்.


Next Story