வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்... சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..!


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்... சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..!
x

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகை நயன்தாரா நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

சென்னை,

'மிக்ஜம்' புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். சின்னத்திரை நட்சத்திரங்கள் பாலா, அறந்தாங்கி நிஷா, இயக்குனர் பார்த்திபன் உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இவர்களை போலவே நடிகை நயன்தாரா தனது 'பெமி 9' (Femi 9) நிறுவனத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி சென்னை வேளச்சேரி கைவேலி பாலம் அருகே உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 'பெமி 9' நிறுவனத்தின் சார்பாக சானிட்டரி நாப்கின்கள், தண்ணீர் பாட்டில்கள், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. அந்த நிவாரண பொருட்கள் 'பெமி 9' நிறுவனத்தின் விளம்பர பலகைகள் இடம்பெற்றிருந்த பிரத்தியேக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன.

இதுகுறித்த விடியோவை 'பெமி 9' நிறுவனம் தனது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த விடியோவின் இறுதியில் அப்பகுதி பெண்கள் சிலர் நயன்தாராவுக்கு நன்றி தெரிவிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதனை பார்த்த சிலர் அந்த பெண்களை கட்டாயப்படுத்தி அந்த காட்சி படமாக்கப்பட்டு உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சிலர் இந்த இக்கட்டான நேரத்தில் கூட நிறுவனத்திற்கு விளம்பரம் செய்வதா..? என்று நயன்தாராவை விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் நயன்தாராவின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒருசிலர் 'விளம்பரமாக இருந்தாலும் மக்களுக்கு உதவ நல்ல மனம் வேண்டும்' என்று நயன்தாராவுக்கு ஆதரவாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Next Story