84 வது பிறந்தநாளை கொண்டாடினார் பாடகர் யேசுதாஸ்


84 வது பிறந்தநாளை கொண்டாடினார் பாடகர் யேசுதாஸ்
x

யேசுதாஸ் மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் பாடகர் கே.ஜே.யேசுதாஸ். இவர் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். 8 தேசிய விருதுகள் மட்டுமின்றி ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். அது மட்டுமின்றி மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். இப்படி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான பாடகர் யேசுதாசுக்கு இன்று 84-வது பிறந்தநாள்.

அவர் தனது பிறந்த நாளை கேரளாவில் கொண்டாட விரும்பினார். ஆனால் இசை நிகழ்ச்சிக்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். இருந்தபோதிலும் அவர் தனது பிறந்தநாளை காணொளி வாயிலாக ரசிகர்களுடன் கொண்டாடினார். அவர் ஆன்லைனில் ரசிகர்கள் முன்னிலையில் தோன்றி, கேக் வெட்டினார்.

இந்த நிலையில் அவரது பிறந்தநாளுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து கூறியுள்ளார். இதனை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், கே.ஜே.யேசுதாஸ் அவர்களுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். கேரளாவின் அடையாளமாக திகழும் உங்கள் பாடல்கள் காலத்தால் அழியாதவை, அவை எல்லைகளையும் மொழிகளையும் தாண்டி, இணக்கமான மதச்சார்பற்ற சமுதாயத்திற்கு ஒருங்கிணைந்த ஒற்றுமை உணர்வை வளர்க்கின்றன. வரவிருக்கும் ஆண்டுகளில் உங்களது வெற்றியும் மகிழ்ச்சியும் தொடர வாழ்த்துகிறேன், என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகர் மோகன்லால் மற்றும் பாடகி கே.எஸ்.சித்ரா உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


Next Story