பிறமொழிகளில் ஜொலிக்கும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள்


பிறமொழிகளில் ஜொலிக்கும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள்
x

தமிழ் சினிமா நட்சத்திரங்கள், சமீப காலமாக மொழி களைக் கடந்து வேற்று மொழிகளில் அதிக படங்களில் நடித்து ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். பான் இந்தியா, ஓ.டி.டி. போன்ற தளங்கள் இதற்கான தடைகளை முற்றிலும் தகர்த்துள்ளது.

குறிப்பாக தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பங்களிப்பு பெரிய அளவில் உள்ளது. உலகெங்கும் வெளியாகி பல ஆயிரம் கோடி வசூல் சாதனை புரிந்த `பாகுபலி' படத்தில் கட்டப்பா கேரக்டரில் நடித்த சத்யராஜ் அந்தப் படத்துக்கு பிறகு தெலுங்கு மொழிகளில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்கி வருகிறார்.

சத்யராஜுக்கு தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகின்றன. மலையாள படங்களிலும் நடிக்கிறார். ஹீரோவாக நடிக்கும்போது வாங்கிய சம்பளத்தை விட இப்போது குணச்சித்திர வேடங்களில் நடிக்க அதிக சம்பளமாம்.

தமிழில் நடிக்க ஆரம்பித்த அதே காலகட்டத்திலேயே தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் சரத்குமார். `புஷ்பா' படத்தின் மூலம் பான் இந்திய ஸ்டார் ஆக உயர்ந்திருக்கும் அல்லு அர்ஜுனின் ஆரம்ப கால படமான `பன்னி'யில் சரத்குமார் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து படத்தை வெற்றி அடைய செய்ததோடு அல்லு அர்ஜுனின் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

பிற மொழிகளில் ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ளார் சமுத்திரக்கனி. தமிழ் மொழிக்கு நிகராக இப்போது தெலுங்கு மொழியில் பிஸியாக இருக்கிறார் சமுத்திரக்கனி. முன்னணி ஹீரோக்கள் பலர் சமுத்திரக்கனியின் கால்ஷீட் நிலவரத்தைப் பொறுத்து அவர்களுடைய படங்களை திட்டமிடும் அளவிற்கு தெலுங்கு மொழியில் மிக முக்கியமான நடிகராக கருதப் படுகிறார்.

விஜய் சேதுபதி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என எந்தவொரு இந்திய மொழியையும் விட்டுவைக்காமல் கலக்கி வருகிறார். இவர்களில் தனுஷ் அடுத்த லெவல். இந்தி படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ள தனுஷ் திறமைக்கு ஹாலிவுட்டும் கதவை திறந்தது.

தமிழ்நாட்டில் பிறந்து ஆந்திராவின் மருமகளான சமந்தாவுக்கு தெலுங்கில் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. இப்போது இந்தியிலும் நடிக்கிறார்.

இயக்குனராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்த கவுதம் மேனன், தொழில்முறை நடிகர்களே தோற்றுப் போகுமளவுக்கு மிகச் சிறப்பாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் `சீதா ராமம்' தெலுங்கு படத்தில் போலீஸ் ஆபீஸராக நடித்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார். இப்போது தமிழ் மொழிக்கு நிகராக தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் கணிசமான படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

ஜோதிகா வடமாநிலத்தில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டின் மருமகள். திருமணத்துக்குப் பிறகும் ஜோதிகாவுக்கு பிறமொழி வாய்ப்பு எனும் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கிறது. விரைவில் மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக நடித்துள்ள `காதல் தி கோர்' படம் வெளியாகவுள்ளது.

நயன்தாராவுக்கு மலையாளம் தாய் மொழியாக இருந்தாலும் தமிழ் சினிமா இவருடைய தாய் வீடாக மாறி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு ஷாருக்கானுடன் `ஜவான்' படத்தில் நடிப்பதன் மூலம் இந்தியிலும் அடி எடுத்து வைத்திருக்கிறார்.

பத்தாண்டுகளுக்கு மேலாக சினிமாவில் வெற்றிப் பட நாயகியாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், தமிழில் பிஸியாக இருக்குமளவுக்கு தெலுங்கிலும் பிஸியான நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் சமந்தாவுடன் நடித்த `யசோதா', பாலகிருஷ்ணாவுடன் நடித்த `வீரசிம்ம ரெட்டி' போன்ற படங்கள் இவருக்கு தெலுங்கு சினிமாவில் முக்கிய இடத்தை கொடுத்துள்ளது.

கீர்த்தி சுரேஷ், சாய்பல்லவி ஆகியோரும் தெலுங்கு, மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளனர்

இந்தப் பட்டியலில் ராகவா லாரன்ஸ், நாசர், ரோகிணி, கோவை சரளா உட்பட மேலும் பல தமிழ் நடிகர்-நடிகைகள் உள்ளனர் என்ற செய்தி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமை.


Next Story