மேற்கு வங்காளத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை


மேற்கு வங்காளத்தில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை
x

'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. கேரளாவில் இளம்பெண்களை மத மாற்றி வெளிநாட்டுக்கு கடத்தி சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்த்து விடுவது போன்ற காட்சிகள் படத்தில் உள்ளன. அடா ஷர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளன. தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரையிட்ட தியேட்டர்கள் முன்னால் போராட்டங்கள் நடந்தன. இதனால் தியேட்டர்களில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டு கடும் சோதனைக்கு பிறகே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடுவதை திரையரங்கு உரிமையாளர்கள் திடீரென்று நிறுத்தி விட்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு படத்தை நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மேற்கு வங்காளத்திலும் தி கேரளா ஸ்டோரி படம் திரையிட தடை விதிப்பதாக அந்த மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார். வெறுப்புணர்வையும் வன்முறையையும் தி கேரளா ஸ்டோரி ஏற்படுத்தக்கூடும் என்பதால் படத்தை தடை செய்வதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.


Next Story