பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவனாக நடிக்க விரும்பினேன் - நடிகர் ரஜினிகாந்த் ருசிகர பேச்சு


பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவனாக நடிக்க விரும்பினேன் - நடிகர் ரஜினிகாந்த் ருசிகர பேச்சு
x

பொன்னியின் செல்வன் பட விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா கலந்து கொண்ட காட்சி.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தபோது நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். விழாவில் ரஜினிகாந்த் ருசிகரமாக பேசியதாவது:-

''கல்கி நாவலான பொன்னியின் செல்வன் காவியம் ஒவ்வொரு பிரசுரமும் வெளியாகும் போது வாசகர்கள் காட்டும் ஆர்வம் நம்மை வியக்க வைக்கும். அப்போது முதல் பாகம், இரண்டாம் பாகம் என்று படங்களை எடுக்கும் வழக்கம் இல்லாமல் இருந்ததால் பொன்னியின் செல்வனை படமாக்க முடியவில்லை.

இந்த படத்தை எடுக்க எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் மணிரத்னம் அதை சாதித்து காட்டியுள்ளார். நான் நிறைய பக்கங்கள் கொண்ட புத்தகங்களை படிக்க விருப்பப்பட மாட்டேன். ஜெயலலிதாவிடம் பத்திரிகையில் வாசகர் ஒருவர் பொன்னியின் செல்வன் படத்தை இப்போது எடுத்தால் வந்திய தேவன் கதாபாத்திரம் யாருக்கு பொருத்தமாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு ரஜினிகாந்த் என்று ஒரே வரியில் ஜெயலலிதா பதில் அளித்திருந்தார்.

ஜெயலலிதாவே இப்படி சொன்னதால் எனக்கு சந்தோசம் ஏற்பட்டது. உடனடியாக பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாங்கி படித்து முடித்தேன். என்ன கதைடா என்று வியந்து போனேன். இந்த கதையில் வரும் நந்தினி கதாபாத்திரம் தான் படையப்பாவில் உருவான நீலாம்பரி கதாபாத்திரத்துக்கு மூல காரணமாக இருந்தது.

பொன்னியின் செல்வன் பட வேலைகள் நடந்து வந்தபோது மணிரத்தினிடம் போய் இந்த படத்தில் எனக்கு பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் வேண்டாம் உங்கள் ரசிகர்கள் என்னை திட்டுவார்கள் என்று மறுத்து விட்டார்.

இந்த படத்தை நினைக்கும்போதெல்லாம் சில கற்பனைகளை நான் எண்ணுவேன். வந்தியத்தேவனாக நானும், ஆதித்த கரிகாலனாக விஜயகாந்த்தும், அருள்மொழி வர்மனாக கமல்ஹாசனும், குந்தவையாக ஸ்ரீதேவியும், நந்தினியாக ரேகாவும், பெரிய பழுவேட்டரரையராக சத்யராஜும் நடிக்க வேண்டும் என நினைத்துக் கொள்வேன். நான் நடிக்க விரும்பிய வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில்தான் கார்த்தி நடித்துள்ளார்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

விழாவில் கமல்ஹாசன், விக்ரம், சரத்குமார், ஐஸ்வர்யாராய், திரிஷா, டைரக்டர் மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story