'நாங்க எதுக்காக வரி கட்டுறோம்னு கேக்க வச்சுராதீங்க' - நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ வைரல்


நாங்க எதுக்காக வரி கட்டுறோம்னு கேக்க வச்சுராதீங்க - நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ வைரல்
x
தினத்தந்தி 5 Dec 2023 3:30 AM GMT (Updated: 5 Dec 2023 9:21 AM GMT)

சென்னை மழை வெள்ளம் குறித்து ஆட்சியாளர்களை விமர்சித்து நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது. நேற்று சென்னையில் தொய்வின்றி பெய்த மழையால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், சென்னையின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், பல இடங்கள் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியையும் ஆட்சியாளர்களையும் விமர்சித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் அந்த வீடியோவில், 'எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான் புயல் வந்தால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும், பின்னர் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குள் வரும். அண்ணாநகரில் உள்ள என் வீட்டில் கூட ஒரு அடிவரை தண்ணீர் தேங்கியுள்ளது. இங்கு இந்த நிலைமை என்றால் தாழ்வான பகுதிகளில் இதை விட மோசமானதாக இருக்கும்.

2015ல் நடந்தபோது எல்லாரும் ஒன்றாக இணைந்து இறங்கி வேலை செய்தோம். முடிந்த அளவு பொதுமக்களுக்கு சேவை செய்தோம். 8 வருடங்களுக்கு பிறகு அதைவிட மோசமான ஒரு நிலை ஏற்பட்டிருப்பது கேள்விக்குறியாக உள்ளது. மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியது. அது எங்கே தொடங்கி எங்கே முடித்தார்கள் என்று தெரியவில்லை. நான் இதை ஒரு நடிகனாக கேட்கவில்லை, வாக்காளராக கேட்கிறேன்.

சென்னையில் உள்ள அனைத்து தொகுதி எம்.எல்.ஏ.களும் வெளியே வந்து பொதுமக்களுக்காக சேவை செய்ய வேண்டும். உங்கள் தொகுதிக்கு நீங்கள் உதவினால் பொதுமக்களுக்கு அது ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். ஏனென்றால் வீட்டில் குழந்தைகள், முதியவர்கள் என எல்லாரும் பயந்து இருப்பார்கள். இது அரசியல் தொடர்பான குற்றச்சாட்டு அல்ல, இது ஒரு தர்மசங்கடமான கேவலமான விஷயமாக நான் பார்க்கிறேன்.

இது ஒரு முக்கியமான பதிவு. தயவு செய்து அரசாங்க அதிகாரிகள் வேலை செய்து மக்களுக்கு உதவ வேண்டும். ஏனென்றால் நாங்கள் வரி கட்டுகிறோம். நாங்கள் எதற்காக வரி கட்டுகிறோம் என்று கேட்க வைத்து விடாதீர்கள். மக்கள் நீங்கள் உதவி செய்வீர்கள் என்று எதிர்பார்ப்பார்கள். கண்டிப்பாக இந்த நேரத்தில் உங்கள் முகம் தெரிந்தால் நன்றாக இருக்கும்' என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Next Story