'லியோ': சினிமா விமர்சனம்


லியோ: சினிமா விமர்சனம்
x
நடிகர்: விஜய் நடிகை: திரிஷா  டைரக்ஷன்: லோகேஷ் கனகராஜ் இசை: அனிருத் ஒளிப்பதிவு : மனோஜ் பரமஹம்சா

போதைப்பொருள், ரத்தம் தெறிக்கும் சண்டை என லோகேஷ் கனகராஜின் ‘ஸ்டைல்' இந்தப்படத்திலும் தொடர்கிறது.

விஜய், பார்த்திபன் என்ற பெயரில் இமாசலப்பிரதேசத்தில் காபி ஷாப் நடத்தி மனைவி திரிஷா, மகன், மகளுடன் சந்தோஷமாக வாழ்கிறார்.

மிஷ்கின் தலைமையில் வரும் ரவுடிகள் கொலைகள் செய்துவிட்டு விஜய்யின் காபி ஷாப்பில் புகுந்து ஒரு பெண்ணை மானபங்கமும் செய்கின்றனர். விஜய் மகளையும் கொல்ல முயல்கிறார்கள்.

அப்போது விஜய் வெகுண்டெழுந்து அத்தனை பேரையும் அடித்து துவம்சம் செய்து சாகடிக்கிறார். பத்திரிகையில் வெளியான அவரது புகைப்படத்தை பார்த்து இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து ரவுடிகள் அணி அணியாக விஜய்யை கொல்ல வருகிறார்கள்.

போதைப்பொருள் கடத்தல் ஜாம்பவான் சஞ்சய்தத்தும், இருபது வருடங்களுக்கு முன்பு எதிரியாக மாறி தன்னுடயை போதைப்பொருள் தொழில் சாம்ராஜ்ஜியத்தை அழித்துவிட்டு செத்துப்போன லியோதான் பார்த்திபன் விஜய் என்று கருதி அடியாட்களுடன் தேடி வருகிறார்.

இதனால் விஜய்க்கும், அவரது குடும்பத்துக்கும் ஆபத்து சூழ்கிறது. லியோ யார்? சஞ்சய்தத்துக்கும், லியோவுக்கும் என்ன தொடர்பு? கொலைகார கும்பலிடம் இருந்து குடும்பத்தை விஜய் காப்பாற்றினாரா? என்பதற்கு விறுவிறுப்பான திரைக்கதையில் விடை சொல்கிறது மீதிக்கதை.

அட்டகாசம் செய்யும் கழுதை புலியை அடக்கி அறிமுகமாகி சிலிர்க்க வைக்கும் விஜய், அன்பான அப்பா, ஆசை கணவன், பழிவாங்கும் ஹீரோ என விதவிதமான நடிப்பில் வசியம் செய்துள்ளார், காட்சிக்கேற்ப உடல்மொழி, தோற்றத்திலும் வித்தியாசம் காட்டி உள்ளார்.

ரவுடிகளை கொன்றுவிட்டு குடும்பத்தை நினைத்து அழும் காட்சியிலும், சந்தேகப்படும் மனைவியிடம் 'நான் கொலைகாரன் இல்லடி' என்று தேம்பும் காட்சியிலும் உணர்ச்சியை கொட்டியுள்ளார்.

பிளாஷ்பேக்கில் 'லியோ'வாக வரும் விஜய் சண்டை காட்சிகளில் அதகளம் புரிந்துள்ளார்.

அழகான குடும்பத்தலைவியாக வரும் திரிஷா, கணவர் விஜய்யுடன் காதல், சந்தேகம் என அனுபவமான அசத்தல் நடிப்பை கொட்டியிருக்கிறார். உதடு முத்தம் கொடுத்து அதிரவும் வைக்கிறார்.

மூடநம்பிக்கையில் சிக்கி மூர்க்கத்தனமான நரபலி தரும் சஞ்சய்தத், அவரது தம்பியாக வரும் அர்ஜுன், மிஷ்கின், சாண்டி ஆகியோர் குரூர வில்லத்தனத்தில் மிரட்டி உள்ளனர்.

கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான், பிரியா ஆனந்த், ராமகிருஷ்ணன் என அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களுக்கு நிறைவு சேர்த்திருக்கிறார்கள்.

சில நிமிடங்களே வந்தாலும் மடோனா செபஸ்டியன் மனதில் நிற்கிறார்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு மேஜிக் செய்துள்ளது. அனிருத்தின் இசை ஆட்டம் போட வைக்கிறது.

போதைப்பொருள், ரத்தம் தெறிக்கும் சண்டை என லோகேஷ் கனகராஜின் 'ஸ்டைல்' இந்தப்படத்திலும் தொடர்கிறது. தமிழ் சினிமாவில் பலமுறை சொல்லப்பட்ட கேங்ஸ்டர் கதை என்றாலும், அதை தனக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாக படமாக்கிய விதத்தில் கவனம் பெறுகிறார்.

இரண்டாம் பாதியில் சற்று தொய்வு இருந்தாலும் இறுதியில் வேகத்தை கூட்டி அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.

கிளைமாக்சில் 'நான் யாரென்று தெரிகிறதா?' என ஒலிக்கும் காந்தக்குரலும், பின்னணியில் ஒலிக்கும் 'தகிட தக் தீம்...' பி.ஜி.எம்.மும் எதிர்பாராத திருப்பம்.


Next Story