பி.டி. உஷா போல ஆக வேண்டும் - ரித்திகா
10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தனது எட்டரை வயதில் பங்கேற்ற ரித்திகா, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கத்தையும், நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
சென்னை முகலிவாக்கத்தில் வசிக்கும் பாலாஜி சாரங்கபாணி - சுஜாதா முரளிதரன் தம்பதியின் இளைய மகள் ரித்திகா. இவரது சகோதரி தனிஷா தடகள பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். அதைப் பார்ப்பதற்கு சென்ற ரித்திகா, தனது சகோதரி பயிற்சி பெறும்போது அவருடன் தானும் ஓடி, அவரை முந்திச் செல்ல வேண்டும் என்று உத்வேகம் காட்டினார்.
அப்போதுதான் ரித்திகாவுக்கும் தடகளத்தில் ஈடுபாடு இருப்பதை பெற்றோர் அறிந்தனர். பின்பு மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த ரித்திகாவையும் தடகளப் பயிற்சியில் சேர்த்தனர். பயிற்சியைத் தொடங்கிய சில மாதங்களிலேயே, தனது பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், நீளம் தாண்டுதலிலும் தங்கப் பதக்கங்களை வென்றார் ரித்திகா.
அவரது திறமையைக் கண்டு வியந்த பயிற்சியாளர்கள் ஜெகதீஷ், பாலா ஆகியோர், அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதம், நேரு உள் விளையாட்டரங்கில், பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் ரித்திகாவை பங்கேற்க வைத்தனர்.
10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தனது எட்டரை வயதில் பங்கேற்ற ரித்திகா, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கத்தையும், நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
தடகளத்தில் மட்டுமின்றி படிப்பிலும் கெட்டிக்காரரான ரித்திகாவுக்கு, ஓவியம் வரைவதிலும் ஆர்வம் உண்டு. தற்போது 10 வயதாகும் ரித்திகா, ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா பரவல் ஏற்பட்ட காலத்திலும் தனது பயிற்சியை அவர் நிறுத்தவே இல்லை.
இன்றுவரை அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து, தனது சகோதரியுடன் பயிற்சியைத் தொடர்ந்து வருகிறார். தன்னைவிட வயதில் மூத்தவர்களுடன் விளையாட்டில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை விரும்பிச் செய்துவரும் ரித்திகாவுக்கு, பி.டி. உஷா போல உலகப் புகழ் பெற்ற ஓட்டப்பந்தய வீராங்கனை ஆக வேண்டும் என்பதே கனவாக உள்ளது.
Related Tags :
Next Story