இயற்கை விவசாய ‘அறிவுத்தோட்டத்தை’ உருவாக்கிய குணசுந்தரி!
இயற்கை விவசாயத்தில் முன்மாதிரியை உருவாக்க விரும்பினோம். அதன் காரணமாக, பல ஆண்டுகள் பராமரிப்பின்றி வறண்டு கிடந்த நிலத்தை வாங்கி, இரண்டு ஆண்டுகளில் பசுமையாக்கினோம். அதற்கு ‘அறிவுத்தோட்டம்’ என்று பெயரிட்டோம்.
ஓய்வு பெறும் வயதில், பொருளாதார ரீதியில் பாதுகாப்பாக இருப்பதையே அனைவரும் விரும்புவார்கள். ஆனால், வேலூரைச் சேர்ந்த குணசுந்தரி, தனது கணவர் நகரத்தில் இருந்த வீட்டை விற்று, விவசாயம் பொய்த்துப் போன தரிசு நிலத்தை வாங்குவதற்கு ஒத்துழைத்தார். நிலத்தை வாங்கிய இரண்டே ஆண்டுகளில், கணவருடன் சேர்ந்து, தனது கடின உழைப்பாலும், இயற்கை விவசாய முறையாலும் ‘அறிவுத்தோட்டம்’ என்ற பெயரில் வேளாண் மற்றும் மூலிகைப் பண்ணையை உருவாக்கி, சிறப்பாக செயலாற்றி வருகிறார்.
குடும்பத்தோடு அறிவொளி இயக்கத்தில் செயலாற்றிய குணசுந்தரி, தொழில் முனைவோராகவும் வெற்றிக்கொடி நாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடன் நடந்த உரையாடல் இங்கே…
“நான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். பல்வேறு சிரமங்களுக்கு இடையில் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சியை முடித்தேன்.திருமணத்துக்குப் பிறகு வேலூரில் ‘அறிவொளி இயக்கம்’ மற்றும் ‘அறிவியல் இயக்கம்’ போன்றவற்றில் மக்கள் இயக்கச் செயற் பாட்டாளராகவும், தொழில் முனைவோராகவும் பணியாற்றுகிறேன்.
கணவர் செந்தமிழ்ச்செல்வன், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. தற்போது அவருடன் சேர்ந்து முழுநேர இயற்கை விவசாயத்தைச் செய்து வருகிறேன்.
எனது மகன் உமாநாத், மகள் திவ்யா ஆகியோர் மென்பொறியாளர்களாக இருக்கின்றனர்.”
அறிவொளி மற்றும் அறிவியல் இயக்கங்களில் நீங்கள் செய்த பணிகள் என்ன?
அறிவொளியில் இணைந்த பல்லாயிரம் பெண்களை ஒருங்கிணைப்பதற்காக தலைமைக் குழுவில் இருந்து வழி நடத்தினேன். இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கி, பெண்களுக்கு உதவியாக இருந்தேன். பெண்களை ஆற்றல்படுத்தவும், தொழில் முனைவோராக்கவும் ஏராளமான பயிற்சி வகுப்புகள் நடத்தினேன்.
வேலூர் பெண்கள் சிறையில் இருந்த கைதிகளுக்கு, தன்னார்வலராக அறிவொளி வகுப்புகளை நடத்தினேன். அவர்களின் பிரச்சினைகளை மாவட்ட ஆட்சியரின் பார்வைக்குக் கொண்டு சென்று தீர்வு காண்பதற்கு உதவினேன். எனது கணவர் அறிவொளி இயக்கத்தின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளராகவும், எனது பிள்ளைகள் கலைக்குழுவில் கலைஞர்களாகவும் இருந்தனர்.
தொழில் முனைவோராக உங்களின் பயணத்தை பற்றி கூறுங்கள்?
அறிவொளியில் கிடைத்த ஆற்றலும், மகளிர் மன்றத்தில் கிடைத்த துணிச்சலும், தொழில் தொடங்குவதற்கான நம்பிக்கையை அளித்தது. முதலில் ஐந்து பெண்களுடன் இணைந்து கேண்டீன் நடத்தினேன். பிறகு, வேலூரிலே முதன்முறையாக விளையாட்டுத் துறைக்கான ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினேன்.
அதில் மகளிருக்கு முன்னுரிமை கொடுத்து, 13 பெண்களும், 6 ஆண்களும் பணி செய்தனர். 25 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்திய நிறுவனத்தை, விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்பதற்காக நண்பரிடம் விற்றுவிட்டேன்.
இயற்கை விவசாயத்தின் மீது ஈடுபாடு வந்தது எப்படி?
மக்களிடம் இருந்து மேலும் கற்கவும், எங்களின் வாழ்நாள் அனுபவங்களை மக்களுக்கே அளிக்கவும் எண்ணினோம். குறிப்பாக ஓய்வு நாட்களை விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக செலவிடுவதற்கு திட்டமிட்டோம். அவர்களுடன் நெருங்கிப் பழக வேண்டுமெனில் ‘நாமும் விவசாயியாக இருப்பதோடு, நேரிடையான அனுபவமும் அவசியம்’ என்பதை உணர்ந்தோம்.
எனவே, இயற்கை விவசாயத்தில் முன்மாதிரியை உருவாக்க விரும்பினோம். அதன் காரணமாக, பல ஆண்டுகள் பராமரிப்பின்றி வறண்டு கிடந்த நிலத்தை வாங்கி, இரண்டு ஆண்டுகளில் பசுமையாக்கினோம். அதற்கு ‘அறிவுத்தோட்டம்’ என்று பெயரிட்டோம்.
அறிவுத் தோட்டத்தின் செயல்பாடுகள் பற்றி?
அறிவுத் தோட்டத்தை வேளாண் பண்ணையாக மட்டுமின்றி, பயிற்சிக் களமாகவும் செயல்படுத்துகிறோம். ஏராளமான மாணவர்களும், விவசாயிகளும் வந்து பார்வையிட்டு அறிந்து செல்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் ‘இயற்கை விவசாயிகளுக்கான கூட்டங்களை’ தொடர்ந்து நடத்தி வருகிறோம். இயற்கை விவசாயிகளை அதிகரித்து, அவர்களின் விளைபொருட்களை நேரடியாக விற்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
உங்களது சந்தை திட்டம் பற்றி?
‘நம் சந்தை’ என்பது தமிழ்நாடு அரசின் மகளிர் திட்டத்தின் கீழ், தமிழ்மாநில கிராமப்புற மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கமும், இயற்கை விவசாயிகளும் இணைந்து நடத்தும் சந்தை ஆகும். அறிவுத்தோட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தின் முன்னெடுப்பாக, மாவட்ட நிர்வாகத்திடம் பேசி ‘நம் சந்தை’ உருவாக்கப்பட்டது.
விவசாயிகளை ஒவ்வொரு வாரமும் தொடர்பு கொண்டு ‘நம் சந்தையில்’ பங்கேற்க வைக்கிறோம். விவசாயிகளின் தொடர் சந்திப்பு அவர்களுக்குள் நெருங்கிய உறவை ஏற்படுத்தி உள்ளது. நுகர்வோர் தரும் ஆதரவால் மூன்றாவது ஆண்டாக ‘நம் சந்தை’ வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
உங்களுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள்?
எங்களது செயல்பாடுகள் மூலம் கிடைக்கும் வரவேற்பும், அன்பும், மரியாதையும்தான் பெரிய விருது. சிறந்த தொழில் முனைவோருக்கான பரிசை மகளிர் மன்றம் வழங்கி கவுரவித்தது. அறிவுத் தோட்டத்துக்கும் பல்வேறு விருதுகள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக, தனியார் நிறுவனம் ஒன்று சமூக செயல்பாடாக, இந்திய அளவில் சிறந்த 15 விவசாயிகளைத் தேர்வு செய்து, ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி வருகிறது. அதில் 2021-ம் ஆண்டிற்கான விருது எங்களுக்குக் கிடைத்தது.
உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
மாநிலம் தழுவிய அளவில் இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை விவசாயிகளுக்கு எடுத்துரைத்து, அவர்களை இயற்கையை நோக்கித் திருப்ப வேண்டும். ‘ஆரோக்கியமான வாழ்விற்கு, இயற்கை விளைபொருட்கள் எவ்வளவு அவசியம்’ என்பது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அறிவுத் தோட்டத்தை மையமாக வைத்து, மதிப்புக் கூட்டுதல் தொடர்பான தொழில்களைத் தொடங்க திட்டமிட்டு வருகிறேன். மூலிகை சார்ந்த தொழில்
களிலும் முத்திரை பதிக்க முயன்று கொண்டிருக்கிறேன்.
Related Tags :
Next Story