சாதனையாளர்

கணித நிபுணர் சோபி ஜெர்மைன் + "||" + Mathematician Sophie Jermaine

கணித நிபுணர் சோபி ஜெர்மைன்

கணித நிபுணர் சோபி ஜெர்மைன்
உயிரே போய்விடும் என்ற நிலையில்கூட ஒரு விஷயத்தில் அவர் அத்தனை ஈடுபாடு கொண்டிருந்தால், அது எத்தனை சுவாரசியமானதாக இருந்திருக்கும் என்று எண்ணினார் சோபி. அன்று முதல் தந்தையின் நூலகத்தில் இருந்த புத்தகங்களின் வாயிலாக, தானே கணிதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.
சோபி ஜெர்மைன் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு கணித நிபுணர், இயற்பியல் வல்லுநர் மற்றும் தத்துவஞானி ஆவார். ஒலியியல், மீள் திறம், எண்களின் கோட்பாடு ஆகியவை குறித்து பல புதிய கருத்துகளை வெளியிட்டவர். சோபி தனக்கு மிகவும் பிடித்த கணிதத் துறையில் செயலாற்றுவதற்கு குடும்பத்தின் எதிர்ப்புகளையும், சமூக எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு தனக்குரிய அங்கீகாரத்தைப் போராடிப் பெற்றார்.

சோபி 1776-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி பாரிஸில் பிறந்தார். அவருக்குப் பதின்மூன்று வயதாகும்போது பிரெஞ்சுப் புரட்சி தொடங்கியது. பாரிஸ் நகர வீதிகளில் நடந்த கிளர்ச்சி அச்சமூட்டுவதாக இருந்ததால், வீட்டிலேயே அடைந்து கிடக்க நேரிட்டது. அந்த சமயத்தில்தான் தந்தையின் நூலகத்தில் பெரும்பகுதி நேரத்தை செலவழித்தார் சோபி. கணிதத்தின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

ஒரு நாள் கிரேக்க கணித நிபுணர் ஆர்கிமிடீஸின் இறப்பு குறித்த கதையைப் படித்தார். கிரேக்கத்தின் மீது ரோமானியர்கள் படையெடுத்து வந்தபோது, மணலில் வரைந்த வடிவத்தின் வடிவியல் கோட்பாட்டை விடுவிக்கும் சிந்தனையில் ஆர்கிமிடீஸ் இருந்ததால், ரோமானிய படைவீரரின் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. அதனால் ஆர்கிமிடீஸ் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார்.

உயிரே போய்விடும் என்ற நிலையில்கூட ஒரு விஷயத்தில் அவர் அத்தனை ஈடுபாடு கொண்டிருந்தால், அது எத்தனை சுவாரசியமானதாக இருந்திருக்கும் என்று எண்ணினார் சோபி. அன்று முதல் தந்தையின் நூலகத்தில் இருந்த புத்தகங்களின் வாயிலாக, தானே கணிதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.

அங்கு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பல்கலைக்கழகத்துக்குப் போவதோ, கற்ற அறிஞர்களின் குழுவில் பங்குகொள்வதோ இயலாத காரியம். அதனால் சோபி அந்த காலகட்டத்தின் முன்னணி கணித வல்லுநர்களை நேரில் சந்திக்காமல் கடிதத்தின் வழியாகத் தொடர்பு கொண்டார். தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகளை புனைப்பெயரில் எழுதிச் சமர்ப்பித்தார். அவருடைய அறிவாற்றலை அவர்கள் மெச்சிய பிறகு, தன்னுடைய உண்மையான அடையாளத்தை வெளிக்காட்டினார்.

17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு கணித வல்லுநர் பெர்மட், வருங்காலக் கணித ஆர்வலர்களுக்கு முடிக்கப்படாத சவால் ஒன்றை விட்டுச் சென்றிருந்தார். அது ‘பெர்மட்டின் கடைசி தேற்றம்’ என்று அழைக்கப்பட்டது. இது குறித்து தான்செய்த ஆய்வுகளையும், முடிவுகளையும் பற்றி ஜெர்மானிய கணித வல்லுநரான கார்ல் காஸுக்கு அனுப்பி வைத்தார் சோபி.

மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் தன்னுடன் கடிதத்தின் வழியாக கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது ஒரு பெண் என்பது காஸுக்குத் தெரிய வந்தது. இந்தத் தேற்றம் குறித்து சோபி செய்த ஆய்வுகளும், அவற்றின் முடிவுகளும் இன்று வரையிலும் கணிதத் துறையில் பயன்பாட்டில் உள்ளன.

அடுத்து இயற்பியல் துறையின் பக்கம் கவனத்தைத் திருப்பிய சோபி, பிரெஞ்சு அறிவியல் அகாடமியின் போட்டிக்கு சமர்ப்பித்த ‘ஒன்றின் மீள்தன்மை கொண்ட பரப்புகளின் அதிர்வின் அடித்தளமாக அமைந்த கணித விதிமுறை' பற்றிய கட்டுரை பரிசை வென்றது.

புற்று நோயின் தாக்கத்தால் 1831-ல் மறைந்தார் சோபி. அவருடைய வழிகாட்டியான காஸ், சோபிக்கு கவுரவ பட்டம் வழங்கவேண்டுமென்று காட்டிங்கன் பல்கலைக்கழகத்திடம் பரிந்துரை செய்திருந்தார். அந்தப் பட்டம் சோபியின் மறைவுக்குப் பின்னரே வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மாதவிடாய் வலியைக் குறைக்கும் சுப்த பத்தகோனாசனம்
வடமொழியில் ‘சுப்த’ என்றால் ‘படுத்திருத்தல்’, ‘பத்த கோனாசனம்’ என்றால் ‘கட்டப்பட்ட ஆசன நிலை’ என்று பொருள். எனவே தான் இந்த ஆசனத்தை ‘சுப்த பத்தகோனாசனம்’ என அழைக்கிறார்கள்.
2. மாடலிங்கில் கலக்கும் கிராமத்து தேவதை - ஸ்டெபி கிட்டில்
கிராமத்தில் இருந்து வந்ததால், சாராசரி பெண்ணுக்கு இருக்கும் மேக்கப் நுணுக்கங்கள்கூட அப்போது எனக்கு தெரியாது. சரியாக மேக்கப் போடத் தெரியாது. மாடலிங், நடிப்பு போன்றவற்றில் பயிற்சி பெற்றது இல்லை. மிகவும் சிரமப்பட்டு ஒவ்வொன்றாகக் கற்றேன்.
3. ஓரிகாமி நகைகள்
ஓரிகாமி நகைகள் ஜப்பானியர்களின் காகிதக் கலை வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
4. நேரமின்மையால் உணர்வுகளை இழக்க வேண்டாம்..
நம் சுயநலத்துக்காகவும், பிற்காலத்தில் கிடைக்கப்போகும் சிறு பலனுக்காகவும் நிகழ்கால வாழ்வை மறந்து விடுகிறோம். கடிவாளம் கட்டிய குதிரையைப் போல, எதையோ நோக்கி, ஒரு நேர்கோட்டில் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
5. பெண்களை அதிகம் பாதிக்கும் ஒற்றைத் தலைவலி
ஆண்களை விட, பெண்களையே ஒற்றைத் தலைவலி அதிகம் பாதிக்கிறது. இது குறித்த மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில், அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுக்கும், குறைவான சோடியம் புரோட்டான் எக்ஸ்சேஞ்சர் அளவுக்கும் உள்ள தொடர்பே இந்த மாறுபாட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.