சக்கர நாற்காலியில் அமர்ந்து சாதிக்கத் தூண்டும் டெல்பின்


சக்கர நாற்காலியில் அமர்ந்து சாதிக்கத் தூண்டும் டெல்பின்
x
தினத்தந்தி 24 Jan 2022 11:00 AM IST (Updated: 22 Jan 2022 4:47 PM IST)
t-max-icont-min-icon

என்னுடைய கவலைகளைக் காது கொடுத்து கேட்கவும் யாருமில்லை. அந்த நொடியில்தான், நாம் ஏன் இன்னொருவருக்கான காதுகளாக இருக்கக் கூடாது? எனத் தோன்றியது. உடனடியாக அதற்கான அமைப்பைத் தொடங்கினேன்.

ளவியல் ஆலோசகர், பேச்சாளர், தொழில் முனைவோர் என பல்துறை வித்தகரான, டெல்பின் கடந்து வந்த பாதை மிகவும் கரடுமுரடானது. அதைக் கடக்க கால்கள் பயன்தராத நிலையில், தன் மனஉறுதியையே கால்களாகவும், ஊன்றுகோலாகவும் கருதி, தான் மேற்கொண்ட அத்தனைத் துறைகளிலும் தடம்பதித்து வருகிறார். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட அவரது வாழ்க்கை அனுபவங்கள் இதோ:

“சிறுவயதில் மற்ற குழந்தைகளைப் போல, ஆரோக்கியமான குழந்தையாகவே நானும் இருந்தேன். பள்ளிப் பருவத்தில் ஒருமுறை, கால் இடறிக் கீழே விழுந்தேன். அதற்குப் பின் அதுபோல அடிக்கடி விழ ஆரம்பித்தேன். என்றாலும், விழ விழ எழுந்து கொண்டே இருந்தேன். அல்லது எழுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்துகொண்டே இருந்தேன். நான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மும்முரமாகத் தயார் ஆகிக் கொண்டிருந்த சமயம், என் அம்மா “நீ உடலளவில் மிகவும் பலவீனமாக இருக்கிறாய் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். எனவே, இனி நீ படிப்பைத் தொடர வேண்டாம். உடம்பைக் கவனித்துக் கொண்டு வீட்டில் ஓய்வு எடு” எனக் கூறிவிட்டார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இருந்தாலும், நன்றாக படித்து, பத்தாம் வகுப்பில் 82 சதவீதம் மதிப்பெண் பெற்றேன். அவ்வளவு மதிப்பெண் எடுத்து என்னை நான் நிரூபித்தாலும், மேற்கொண்டு படிக்க, வீட்டில் அனுமதி தரவில்லை. படிப்பைவிட உடல்நலமே முக்கியம் எனக் கூறி, ஒரு வருடம் வீட்டிலேயே இருக்கச் செய்தார்கள். அது கிட்டத்தட்ட வீட்டுச்சிறை போல தனிமையிலும், வெறுமையிலும் கழிந்தது. அதற்குப்பின் பிடிவாதம் பிடித்து, மீண்டும் படிப்பை தொடர்ந்தேன். பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 91 சதவிகிதம் எடுத்து பள்ளியிலேயே, முதல் மாணவியாக வந்தேன். எனினும் மேற்கொண்டு படிக்க என் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இருந்தாலும், மனவலிமையோடு போராடி ஒருவழியாக இளங்கலை முடித்தேன்.

அந்த சமயம்தான், என் உடலில் சில அசவுகரியங்களை உணர ஆரம்பித்தேன். அவற்றைக் குறிப்பிட்டு, இணையதளத்தில் தேடிய பொழுது, கிடைத்த பதில், என்னைச் சுக்கு நூறாக உடைத்துப் போட்டது. எனக்கு வந்திருப்பது, ‘தசைச்சிதைவு நோய்’ (Muscular Dystrophy). இதில், உடம்பிலிருக்கும் ஒவ்வொரு தசைப் பகுதியும் பலவீனமாகிக் கொண்டே வரும். அதுதான் என்னுடைய கால்பகுதி தசைகள் பலவீனமடைந்து, நான் அடிக்கடி கீழே விழுவதற்கான காரணம். என் அம்மா என் படிப்பை நிறுத்தியதற்கான, உண்மையான காரணமும் அதுவே தான் என்பதை புரிந்துெகாண்டேன்.



இந்த நோயினால், எந்த நேரத்திலும் இதயத்தில் உள்ள தசைகள் வலுவிழந்து, உயிருக்கே ஆபத்து நிகழலாம். எனினும் இந்த நோய்க்கான காரணத்தை, மருத்துவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.

உலகத்தில் எந்த மூலையிலும், இதைக் குணப்படுத்துவதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே மனஉறுதியை ஒன்று திரட்டி, உடல்-மன அவஸ்தைகளுடன் போராடி, பல நல்ல மனிதர்களின் உதவியுடன், முதுநிலைப் படிப்பாக உளவியல் முடித்தேன்.

அடுத்தது வேலைதான், சம்பாதிக்கத் தொடங்கிவிட்டால், நம் நிலைமை மாறிவிடும் என பெருமூச்சு விட்ட தருணம் அது. அப்போது எதிர்பாராதவிதமாக 20 வருடங்களாக ஓய்வில்லாமல் குடும்பத்திற்காக உழைத்த என் அம்மா உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாகிவிட்டார். அதே நேரத்தில், படியேறும்பொழுது தவறி விழுந்து, நானும் நடக்க முடியாமல் முடங்கிவிட்டேன். அதுவரை கீழே விழுந்தாலும், எழுவதற்குத் தெம்பு இருந்த எனக்கு, அதன்பின் சுத்தமாக எழ முடியாமல் போனது.

முழுவதுமாக சக்கர நாற்காலியை நாடும் நிலை ஏற்பட்டது. நான் மனதளவிலும், உடலளவிலும் நொறுங்கி நின்ற தருணம் அது.

இருந்தாலும், அம்மாவை மட்டுமாவது தேற்றிவிட வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. உடனே மருத்துவமனையிலிருந்து, அம்மாவை டிஸ்சார்ஜ் செய்து, அவரை என் அருகிலேயே வைத்துக் கொண்டேன். அவருக்காக இல்லாமல், என் உடல் நிலையைக் கவனிக்க வேண்டுமே என்பதற்காக, என் அம்மா எழுந்து நடக்க ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. எனினும் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த என் அம்மா இப்படி முடங்கிவிட்டதாலும், அக்காவும் திருமணம் ஆகிப் போய்விட்டதாலும் வருமானம் எதுவும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டோம். அப்பொழுதுதான், வறுமையைப் போக்க, நானே களத்தில் இறங்கியாக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பது, கல்லூரி மாணவர்களுக்கு ரெக்கார்ட் எழுதித் தருவது என உட்கார்ந்த இடத்திலிருந்து என்னென்ன வேலைகள் செய்ய முடியுமோ, அத்தனையையும் செய்து சம்பாதித்தேன். ஆனாலும் மனது இன்னும் பெரிதாக எதையாவது சாதிக்க வேண்டும் என துடித்துக் கொண்டே இருந்தது. எனவே 2016-ல் எனது பெயரில், வீட்டிலேயே ஆடை, அணிகலன்கள் விற்கும் ‘பொட்டிக்’  ஆரம்பித்தேன். எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்த சமயம், 2018-ல் எதிர்பாராதவிதமாக, என்னுடைய 10 வருடக் காதல், மனமுறிவைச் சந்தித்தது. அந்த ஏமாற்றம், என்னை சொல்லமுடியாத துயரத்திற்குள் தள்ளியது. அந்த நேரத்தில் மனதளவில் தனிமையினால் பாதிக்கப்பட்டேன்.

என்னுடைய கவலைகளைக் காது கொடுத்து கேட்கவும் யாருமில்லை. அந்த நொடியில்தான், நாம் ஏன் இன்னொருவருக்கான காதுகளாக இருக்கக் கூடாது? எனத் தோன்றியது.
உடனடியாக அதற்கான அமைப்பைத் தொடங்கினேன். நான் படித்த உளவியல் படிப்பு,  எனக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்கும் பெரிதும் பயன்பட்டது.

என்னை நாடி வந்த அனைவருக்கும் மனநல ஆலோசனைகளை அன்புடன் வழங்கினேன். அதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவர்களுக்கும் ஊக்க உரைகள்  கொடுத்து, அவர்கள் இலக்கை நோக்கி முன்னேற உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்” என அழுத்தமாகக் கூறுகிறார். 

டெல்பினின் வாழ்க்கை அனுபவங்கள் பாரதியின் ‘வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்ற வரியைத்தான் நமக்கு நினைவுபடுத்துகின்றன. 

Next Story