அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்மாதிரியான உமா


அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்மாதிரியான உமா
x
தினத்தந்தி 24 Jan 2022 11:00 AM IST (Updated: 22 Jan 2022 4:58 PM IST)
t-max-icont-min-icon

சிறந்த ஆசிரியர் என்பதை விட, மாணவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியான ஆசிரியராக மாறியிருக்கிறேன். காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

தான் பணியாற்றிய பள்ளிகளில் மாணவர்களின் பங்களிப்போடு ‘காடு வளர்க்கும் திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு முன்மாதிரித் திட்டங்களை உருவாக்கி சிறப்பாகச் செயல்படுத்தியவர் அரசுப்பள்ளி ஆசிரியை உமா. தனது தொடர் செயல்பாட்டின் மூலம் மக்கள் மனதில் அரசுப்பள்ளி பற்றிய மதிப்பை அதிகரித்து வருபவர். இனி அவருடன் பேசலாம்.

உங்களைப் பற்றி?
சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் பிறந்து, வளர்ந்து, ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்தேன். திருமணத்துக்குப் பிறகு ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் கிராமத்தில் வசித்து வந்தேன். அப்போது தொலைதூரக் கல்வி வாயிலாக கணிதத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களையும், கல்வியியலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களையும் பெற்றேன். அண்மையில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றேன். அடுத்ததாக கல்வியியலில் முனைவர் பட்டம் பெறுவதற்கு திட்டமிட்டிருக்கிறேன்.

தற்போது சென்னை குரோம்பேட்டை மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவுப் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிகிறேன். உலகத் தமிழ்ப் பேரியக்கத்தின் தலைமைச் செயலாளராக இருக்கிறேன்.

கணவர் கோபாலகிருஷ்ணன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். எனது மகள் யாழினி ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மகன் கனிஷ்கர் அரசுக் கல்லூரியில் படிக்கிறார். சென்னைக்கு வந்தபிறகு பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் படிக்க வைத்தேன்.

உங்களின் பணி அனுபவங்களைச் சொல்லுங்கள்?
நான் பிறந்த சேலம் மாவட்டத்தில் உள்ள செட்டிமாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2001-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன்.  2005-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். அப்போது, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மூலம், கோத்தகிரியில் நடைபெற்ற கோடைக்காலப் பயிற்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பாடநூல்களுக்கான வழிகாட்டும் பயிற்சிக்கான கட்டகம் (Module) தயார் செய்யும் பணி அது. சமூக அறிவியலில் குடிமையியலை எனக்கு அளித்திருந்தார்கள். நான் தயாரித்தது புத்தகத்தில் என் பெயருடன் வந்திருந்தது எனக்கு ஊக்கத்தை அளித்தது. அதனால் பல்வேறு ஊர்களிலும் நடைபெற்ற முகாம்களில் பங்கேற்று, ஒரே ஆண்டில் சுமார் 15 கட்டகங்களைச் செய்தேன். பதவி உயர்வு பெற்று, திருப்பூர் மொரட்டுப் பாளையத்தில் கணித ஆசிரியரானேன். அதன்பின்பு சில பள்ளிகளில் பணியாற்றினேன்.

சமச்சீர் கல்விக்காகச் சென்னைக்கு வந்து பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் சமூக அறிவியல் பாடப் பணிகள், பாடநூல் பிழை திருத்துநர் பணி உள்ளிட்டவற்றைச் செய்தேன். நிறைய திட்டங்களில் மாநில அளவில் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்தேன். தமிழிணைய கல்விக் கழகத்தின் கீழ் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிபீடியாவில் ஏராளமான தமிழ்க் கட்டுரைகளை எழுதினோம். ஆவணக்காப்பகத்தில் 200 ஆண்டுகாலக் கல்வி பற்றிய தகவல்களைத் திரட்டினோம். இவையெல்லாம் எனக்கு நிறைய அனுபவங்களைக் கொடுத்தன.



நீங்கள் சிறந்த ஆசிரியையாக உருவானது எப்படி?
சிறந்த ஆசிரியர் என்பதை விட, மாணவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியான ஆசிரியராக மாறியிருக்கிறேன். காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. 35 மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மதிப்பிடாமல், கிராமப்புற மாணவர்களிடம் இருந்த மற்ற திறமைகளையும், இயற்கை பற்றிய அறிவையும், கலை ஆற்றலையும் கண்டு வியப்பாக இருந்தது. அதன் பிறகு எனது மதிப்பீட்டு முறையை நான் மாற்றிக் கொண்டேன். பொதுவாக கதைகள் வாசிக்கும் ஆர்வத்தை எல்லா மாணவர்களுக்கும் ஏற்படுத்தி விடுவேன். அதேபோல அவர்களிடம் உள்ள தனித்திறன்களைக் கண்டறிந்து ஊக்குவிப்பேன். நான் பணி செய்த எல்லா பள்ளிகளிலும் மாணவர்களிடம் பின்னூட்டம் பெற்று, அதற்கேற்ப எனது குணத்தையும் கற்பித்தல் முறைகளையும் மாற்றிக்கொள்வேன். அந்த வகையில் என்னை உருவாக்கியவர்கள் மாணவர்களே.

மக்களுக்கு அரசுப் பள்ளிகளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி வருவது எப்படி?
பொதுமக்கள் மனதில் ‘அரசுப்பள்ளிகள் தரமற்றது’ என்ற மனோபாவம் இருக்கிறது. அதை மாற்றுவதற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள முன்மாதிரி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து ‘அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்’ (A3) என்ற அமைப்பைத் தொடங்கி, அதற்கான வாட்ஸ்ஆப் குழுவில் ஒவ்வொரு ஆசிரியரும் செய்துவரும் சிறப்பான பணிகளைப் பற்றி எழுதி வெளியிட்டோம். அது பொதுமக்களுக்குச் சென்றடையும் வகையில் பணிகளைச் செய்தேன். ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று, ஏதேனும் ஒரு மாவட்டத்தில் ஒன்றுகூடி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறோம். கொரோனா காலத்திலும் சிறப்பாகச் செயல்படும் 165 அரசுப் பள்ளி ஆசிரியர்களை முகநூல் வாயிலாகப் பேச வைத்தேன். பல ஊடகங்களில் அரசுப் பள்ளிகளைப் பற்றித் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறேன். சரியாக செயல்படாத பள்ளிகளையும் கண்டறிந்து, அவர்களின் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டு அதைச் சீர்படுத்த செய்ய உதவி வருகிறேன். ஏராளமான பள்ளிகளுக்கு நிறைய நூல்களையும், தனியார் நிறுவனங்களிடமிருந்து பயன்படுத்தப்பட்ட கணினிகளையும் பெற்றுத் தந்திருக்கிறோம்.

நீங்கள் செய்து வரும் சமூகப் பணிகள் பற்றி?
‘கல்விச் சிக்கல்கள் - தீர்வை நோக்கி’ என்ற நூலை வெளியிட்டிருக்கிறேன். ‘இன்றையச் சூழலில் கல்வி’ என்ற மற்றொரு நூலை விரைவில் வெளியிடஇருக்கிறேன். சொந்தச் செலவிலும், நண்பர்களிடம் உதவி பெற்றும் மாணவர்களின் உயர் கல்விக்கு உதவி வருகிறேன். 2015-ம் ஆண்டு வெள்ளத்தின்போது, தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களை ஒருங்கிணைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி உதவினோம். கஜா புயல் தாக்கியபோது சுமார் 15 லட்ச ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி, டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவினோம்.

உங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகள் என்னென்ன?
‘சிறந்த ஆசிரியர் விருது’, ‘அன்பாசிரியர் விருது’ ஆகியவற்றைப் பெற்றிருக்கிறேன். ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’, ‘தங்க மங்கை விருது’, ‘சாவித்ரி பாய் பூலே விருது’, ‘கல்விக் களப்போராளி’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறேன்.

உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
கல்வி குறித்த உண்மையான பார்வையை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அரசுப் பள்ளிகள் மக்களுக்கானவை. அவற்றில் தரமான கல்வி கிடைக்க வேண்டும். அதற்கு என்னால் இயன்ற வகைகளில் எல்லாம் செயலாற்ற வேண்டும். இது மட்டுமே என்னுடைய குறிக்கோள். 

Next Story