அறிவொளி ஏற்றிய பெண் மருத்துவர்


அறிவொளி ஏற்றிய பெண் மருத்துவர்
x
தினத்தந்தி 24 Jan 2022 5:30 AM GMT (Updated: 22 Jan 2022 11:37 AM GMT)

அறிவியல் துறையையும் கடந்து சமூக மாற்றத்திற்கும் அளப்பரிய பணிகளை ஆற்றியுள்ளார் ரணடிவ்.

னிமனித முன்னேற்றத்தைக் கடந்து, சமூக மாற்றத்தை உண்டாக்குவதில் தான் கல்வியின் பிரதான பங்கு உள்ளது. கமல் ரணடிவின் வாழ்க்கை நமக்கு இதைத்தான் கற்பிக்கிறது. 1917-ம் ஆண்டு, நவம்பர் மாதம் புனே மாநகரில் பிறந்த கமல் ரணடிவ், பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கினார். அவரின் கல்வி ஆர்வத்தால் பெற்றோர், அவரை மருத்துவராக்குவதற்கு எண்ணினர். 

பள்ளிப் படிப்பை முடித்த ரணடிவ் புனே விவசாயக் கல்லூரியில் சைடோஜெநிக்ஸில் படிப்பில் முதன்மை பட்டம் பெற்றார். திருமணம் முடிந்த பின்பு மும்பை நகரில் குடியேறினார். அங்குதான் அவருக்கு இந்தியாவின் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை தோற்றுவித்த வி.ஆர்.காநோல்கருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இத்தொடர்பு தான் ரணடிவ் பின்னாட்களில் அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பை முடித்தபோதும், தேசம் திரும்பி புற்றுநோய் மையத்தில் பணியாற்றுவதற்கு ஊக்குவித்தது.

தேசம் திரும்பிய ரணடிவ் புற்றுநோய் மையத்தின் பொறுப்பாளராக பல முன்னெடுப்புகளை நிகழ்த்தினார். திசுக்கள் பற்றிய ஆராய்ச்சிக்கென்று  பிரத்யேக குழுவை அமைத்தார். தேசத்திலேயே முதலாவதாக மார்பக புற்றுநோய்க்கும், மரபு வழித்தோன்றலுக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிந்த முதல் மருத்துவர் ரணடிவ் தான். மேலும் தொழுநோயை உண்டாக்கும் லெப்ரசி பாக்டீரியா பற்றிய ஆராய்ச்சியினை மேற்கொண்டு அதற்கான தடுப்பூசியையும் கண்டறிந்தார். 

200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நூல்களை வெளியிட்ட ரணடிவ், சமூக மாற்றத்திற்கும் பெரும் பங்காற்றினார். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று அங்கேயே பணிபுரிந்து வந்த பல இந்தியர்களை, தாய்நாடு திரும்பி இந்திய மக்களுக்கு சேவை புரிவதற்கு ஊக்குவித்தார். அவர் ஆற்றிய சமூகப் பணிகளில் முதன்மை வகிப்பது 1972-ல் ரணடிவ் மற்றும் அவரது தோழர்கள் தோற்றுவித்த ‘தேசிய பெண்கள் ஆராய்ச்சியாளர் சங்கம்’ தான். 
 பெண்கள் மருத்துவ படிப்பில் சேர தடையாய் இருந்த சமூக இடர்பாடுகளை நீக்குவதுதான் இச்சங்கத்தின் பிரதான நோக்கமாய் விளங்கியது. பலவகை முன்னெடுப்புகளை மேற்கொண்ட இச்சங்கம், இந்திய பெண் சமூகத்திடம் அறிவியல் குறித்தும், ஆராய்ச்சிகளின் தேவை குறித்தும் பெரும் அறிவொளியை ஏற்றி வைத்தது. இன்றளவும் பல இந்திய பெண்கள் இவ்வியக்கத்தின் மூலம் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர்.

அறிவியல் துறையையும் கடந்து சமூக மாற்றத்திற்கும் அளப்பரிய பணிகளை ஆற்றியுள்ளார் ரணடிவ். ஆராய்ச்சியாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றப்பின் கமல் ரணடிவ் தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து, பழங்குடி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கிய நலனுக்காக பெரிதும் உழைத்தார். இன்று இந்திய பெண் சமூகம் அடைந்திருக்கும் ஆரோக்கிய உடல்நலச் சூழலுக்கு கமல் ரணடிவ் போன்றோரின் பங்கு ஈடு இணையற்றது.

சமூக மாற்றத்தையும், மேன்மையையும் அடைய கல்வி ஒரு ஈடில்லா பேராயுதம் என்பதையே கமல் ரணடிவ் போன்றோரின் வாழ்க்கை நமக்கு உரக்கச் சொல்கிறது. 


Next Story