‘பெண் என்பதே பெருமை’ - சுபா
சுவிஸ் நாட்டின் லுசர்ன் (Luzern) பல்கலைக்கழகத்தில் நான் ஆலோசகராக இருப்பது தமிழராக எனக்கு கிடைத்த பெருமை.
இலங்கை, கிளிநொச்சியில் பிறந்த சுபா, பெற்றோருடன் இரண்டு வயதுக் குழந்தையாக சுவிட்சர்லாந்து நாட்டுக்குப் புலம்பெயர்ந்தார். தலைநகர் பேர்னில் வளர்ந்து, உயர்கல்வியில் சர்வதேச அரசியல் படித்தார். பல மொழிகள் கற்றாலும், தமிழ் மீது தனி ஆர்வம் கொண்டவர். யுனெஸ்கோவில் பணியாற்றிய இவர், உலக செஞ்சிலுவைச் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றும் அவரிடம் பேசியபோது...
“என்னுடைய அப்பா உமாதேவன், அம்மா அமிர்தராணி, தம்பி திலீபன்.
அப்பா எனக்கு அடிக்கடி கூறிய ஊக்கமொழி ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பதே. எனக்கு அரசியல் மீதான ஆர்வம் அப்பா மூலமும், தமிழ் ஆர்வம் அம்மாவின் மூலமும் உருவாகியது.
அரசியல், சர்வதேச விவகாரங்கள் மற்றும் ஸ்பானிஷ் மொழியில் இளங்கலைப் பட்டங்கள் படித்தேன். பின்பு ஜெனீவாவில், சர்வதேச சட்டம் மற்றும் விவகாரங்களில் முதுகலை முடித்தேன். பல மொழிகளில் படித்து இன்று தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகள் சரளமாகப் பேச பழகி இருக்கிேறன். சுவிஸ் நாட்டின் லுசர்ன் (Luzern) பல்கலைக்கழகத்தில் நான் ஆலோசகராக இருப்பது தமிழராக எனக்கு கிடைத்த பெருமை.
யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தில் 2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை கொள்கை வகுக்கும் குழுவில் பணியாற்றினேன். பிறகு பதவி உயர்வு மூலம் சில காலம் ஜப்பான், துருக்கி மற்றும் சில ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றினேன்.
2015-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பிளான் இன்டர்நேஷனல் என்ற சிறுவர்களுக்கான அமைப்பில் சுவிஸ் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணி புரிந்தேன்.
தற்போது சர்வதேச நிறுவனம் ஒன்றில் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறேன். இந்நிறுவனம் 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இளைஞர்கள் வளர்ச்சிக்கு சுய தொழில் வாய்ப்பு கொடுப்பதே இதன் நோக்கம் ஆகும். என்னுடைய குழு மூலம் எகிப்து, ஜோர்டான், லெபனான், துனிசியா, மொராக்கோ, ஜெர்மனி, சுவிஸ் போன்ற நாடுகளில் இளைஞருக்கான வேலைவாய்ப்புகளுக்கு உதவுகிறோம்.
உங்கள் பணி அனுபவங்களில் உணர்வது?
யுனெஸ்கோ பணியில், ஆப்பிரிக்க நாடுகளின் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வியின் அவசியம் குறித்து கல்வி அமைச்சகத்துடன் ஆய்வு மேற்கொண்டேன். யுனிசெப் (UNICEF) போன்று குழந்தைகள் உரிமைக்காகப் பணிபுரியும் அமைப்பில் பணியாற்றியபோது கென்யா, உகாண்டா, மாலி, சிரியா, நைஜர், வியட்நாம், இந்தோனேசியா, சுரினாம், பொலிவியா, இந்தியா போன்ற நாடுகளில் குழந்தைகளின் கல்வி, பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமை, பொருளாதார உதவி என மக்களின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தலைமையேற்றுப் பணியாற்றினேன்.
இந்தப் பணிக் காலத்தில் சிறுவர்களுடன் சந்தித்த மறக்க முடியாத சம்பவங்கள் உள்ளன. உகாண்டா நாட்டில் 14 வயது சிறுமியுடன் உரையாடினேன். அவள் ஆதரவில்லாமல் தெருவில் வாழ்ந்த காலத்தில் நாங்கள் மீட்டோம். ஒரு கல்வி நிறுவனத்தில் சிகை அலங்காரம் கற்றுக் கொண்டிருந்தாள். சுயதொழில் தொடங்குவது அவளது கனவு. ‘தன் மகளை நன்றாக வளர்க்க வேண்டும்’ என்றாள். ‘14 வயது குழந்தைக்கே ஒரு குழந்தையா?’ என அதிர்ந்தேன். என் கண்கள் கலங்கின.
உங்களது பிற துறை ஆர்வம், ஈடுபாடுகள் என்ன?
எனக்கு நடனம் பிடிக்கும். பரதநாட்டியம் முறைப்படி பயின்றேன். புத்தகம் வாசித்தல் மிகவும் பிடிக்கும். சிறு வயதில் அம்புலிமாமாவில் ஆரம்பித்து இப்போது அம்பை வரை படிக்கிறேன். பேச்சிலும் ஆர்வம் உண்டு.
அண்மையில் லண்டன் தமிழ்த் தொலைக்காட்சியில் ‘நிமிர்ந்து நில்’ என்ற நேர்காணல் நிகழ்வைத் தொகுத்து வழங்கினேன்.
உங்களது சாதனைகள்?
சென்ற ஆண்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் இயக்குநர் குழுவுக்குத் தேர்வானது பெருமைக்குரியது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து போர் மற்றும் வன்முறையில் இருந்து மக்களைக் காக்கும் பணியில் ஈடுபடும் ஒரு நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருப்பது பெருமை.
முக்கியமான முடிவுகள் எடுக்கும் உயர் பதவியில் இருப்பதே சாதனைதான். இன்னும் நிறைய பேர் என்னைப் போல உயர் பதவிகளுக்கு வர வேண்டும். அவர்களை ஊக்குவிக்க பெண்கள் தினத்தில் சர்வதேச மாநாட்டை நடத்தியது மனநிறைவைத் தந்தது.
மறக்க முடியாத சம்பவங்கள்?
ஆபத்தான ஆயுதப் போராட்டத்தில் மாலி, நைஜர், பர்க்கினா பாஸோ பகுதியில் பல வன்முறைகள் நடந்தன. ஒரு சூழலில் உயிர் தப்புவேனா? இல்லையா? என்ற நிலை ஏற்பட்டது. அந்த நெருக்கடியான சூழலிலும் அங்கே மக்கள் காட்டிய அன்பு, அக்கறை ஆச்சரியம் அளித்தது.
கென்யாவில் ஒரு முறை எங்களுடைய வாகனம் பழுதானபோது, ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று ‘உகாளி’ என்ற களி போன்ற உணவைப் பரிமாறினார்கள்.
ஒரு பெண்ணாக நீங்கள் உணர்வது, கூறுவது?
பெண் என்பதில் பெருமைதான். ‘தன்னால் முடியாது’ என்ற கருத்திலேயே பெரும்பாலான பெண் பிள்ளைகள் வளர்கிறார்கள். அவர்கள், ஒரு போதும் தங்கள் நம்பிக்கையைக் கெடுக்கும் குரல்களை நம்பக்கூடாது. நீங்கள் என்றும் நீங்களாகவே இருங்கள்.
லட்சியம் என்ன?
இன்று நான் இருக்கும் நிலை, நான் கனவு கூட காணாதது. எனக்குக் கிடைத்த தனித்துவமான வாய்ப்பை, மாற்றங்கள் உண்டாக்குவதற்குப் பயன்படுத்துவேன். அதை நோக்கிப் பயணிப்பதே எனது லட்சியம்.
Related Tags :
Next Story