இல்லத்தரசியின் சாதனை
தேவையில்லாத பிளாஸ்டிக் பொருட்களை மண்ணில் போட்டால், அவை மட்காமல் மண்ணின் வளம் கெடும். எனவே அதை வைத்து வீட்டிற்கு அழகுப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறேன். குழந்தைகளையும் அவ்வாறே பழக்கப்படுத்தி வருகிறேன்.
“உலகம் உன்னை அறிவதை விட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்” என்ற அப்துல்கலாமின் வார்த்தைக்கேற்ப, தனது திறமைகளின் மூலம் தன்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் சேலம் மாவட்டம், களரம்பட்டியில் வசித்து வரும் இல்லத்தரசி பத்மப்பிரியா. அவருடன் ஒரு சந்திப்பு..
“எனது அம்மா ஜெயலெட்சுமி ஓய்வு பெற்ற ஆசிரியர், அப்பா சின்னதுரை முன்னாள் ராணுவ வீரர், கணவர் முத்தமிழ்ச்செல்வன் வழக்கறிஞராக பணிபுரிகிறார். எனக்கு மகனும், மகளும் இருக்கிறார்கள்.
சொந்த ஊரான திருத்துறைப்பூண்டியில் பள்ளிப் படிப்பை முடித்தேன். பின்பு நாகையில் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் 3 வருட டிப்ளமோ படிப்பை முடித்தேன். எனக்கு சிறு வயதில் இருந்தே தமிழின் மீதும், ஓவியம் வரைவதிலும் ஆர்வம் இருந்தது.
அப்பா-அம்மா இருவருமே நன்றாக வரைவார்கள். எனது சிறு வயதிலிருந்தே “கண் பார்த்தால், கை வேலை செய்ய வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ‘நம்மால் முடியாது’ என்று எதையும் யோசிக்க மாட்டேன். எங்காவது அழகானப் பொருளைக் கண்டால் ‘அதை எவ்வாறு செய்திருப்பார்கள்’ என்று ஆராய்ந்து, அதன்படியே செய்ய முயற்சிப்பேன். நாம் செய்யும் எந்த வேலையையும் முழு மனதுடனும், ஈடுபாட்டுடனும் செய்யும் போது அதனுடைய முடிவு அழகானதாக இருக்கும்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கியதால் அனைவரும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். அதில் இருந்து வெளியில் வர நிறைய ஓவியங்கள் வரைய ஆரம்பித்தேன். நான் வரைவதைப் பார்த்து எனது குழந்தைகளும் வரைய ஆரம்பித்தனர். எனது கணவர் முழுமையான ஆதரவு தந்து என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார். அது என் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியது.
அந்த நேரத்தில் தனியார் பயிற்சி நிலைய நிறுவனர் ஹேமலதா நிறைய உதவி செய்தார். ஆலோசனைகள் வழங்கினார். அவரின் ஆலோசனை மற்றும் தமிழ் மீது எனக்கு இருந்த பற்றின் மூலம் 300 திருவாசகம் வரிகளை, 300 அவரை விதைகளில் சி.டி. மார்க்கரால் ஒரு மணி நேரத்தில் எழுதினேன். அதன் பிறகு 4 அடி நீளம், 3 அடி அகலம் அளவில் திருவள்ளுவர் உருவத்தை வரைந்து, அதில் 1330 திருக்குறளையும் எழுதினேன். இதற்கு எனக்கு 8 மணி நேரம் ஆனது.
மேலும் ‘ஓரிகாமி’ எனும் காகித கலைப்பொருட்களை ஒரு மணி நேரத்தில் அதிகப்படியான எண்ணிக்கையில் செய்திருக்கிறேன். இவற்றை ‘விர்ச்யு புக் ஆப் வேல்டு ரெக்கார்டு’ உலக சாதனையாக அங்கீகரித்தது.
தேவையில்லாத பிளாஸ்டிக் பொருட்களை மண்ணில் போட்டால், அவை மட்காமல் மண்ணின் வளம் கெடும். எனவே அதை வைத்து வீட்டிற்கு அழகுப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறேன். குழந்தைகளையும் அவ்வாறே பழக்கப்படுத்தி வருகிறேன்.
சிவன் உருவம் வரைந்து, அதில் முழு திருவாசகத்தையும் எழுத வேண்டும் என்பதுதான் எனது அடுத்த முயற்சி.
பெண்களால் முடியாதது எதுவுமே இல்லை. நீங்கள் ஒரு அடி முன் வைத்தால், உங்களை சார்ந்தவர்கள் உங்களை பத்து அடி முன்னால் கூட்டிச் செல்வார்கள். ‘வீட்டில் உள்ள வேலைகளை செய்யவே நேரம் போதவில்லை’ என்று நினைக்க வேண்டாம். உங்களுக்குள் இருக்கும் திறமைக்கு தீனி போடுங்கள். பெண் முயன்றால் வான் முட்டும் வெற்றி நிச்சயம்” என்று ஊக்கமளிக்கிறார் பத்மப்பிரியா.
Related Tags :
Next Story