குத்துச்சண்டையில் கலக்கும் சிந்துஜா


குத்துச்சண்டையில் கலக்கும் சிந்துஜா
x
தினத்தந்தி 14 Feb 2022 5:30 AM GMT (Updated: 12 Feb 2022 7:38 AM GMT)

குத்துச்சண்டை பயிற்சியாளராகி, என்னைப்போல நடுத்தர மற்றும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு.

குத்துச்சண்டை போட்டிகளில் பல சாதனைகள் படைத்து வருகிறார் மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடியில் வசிக்கும் சிந்துஜா. வணிகவியலில் இறுதியாண்டு படிக்கும் அவருடன் ஒரு சந்திப்பு.

உங்களைப் பற்றி?
‘‘எனது அப்பா ரவிச்சந்திரன், விவசாயம் செய்கிறார். அம்மா மகாலட்சுமி, அண்ணன் ராஜ் குமார். இவர்கள்தான் என் குடும்பம். குத்துச்சண்டைதான் என் உலகம்.

எனக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டு மீது ஆர்வம் அதிகம். பள்ளியில் படிக்கும்போது கூடைப்பந்து விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டேன். அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த பயிற்சியாளர் ஜலேந்திரன் மாணவர்களுக்கு ஒருநாள் மட்டும் குத்துச்சண்டை பயிற்சி அளித்தார். அதில் பங்குபெற்ற நான் போட்டியில் கலந்து கொண்டு மண்டல அளவில் பதக்கம் வாங்கினேன். குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்வதற்காக பெயரைப் பதிவு செய்து விட்டுதான் வீட்டில் கூறினேன். 

ஆரம்பத்தில் குடும்பத்தினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறுவதையும், குத்துச்சண்டையில் எனக்கு இருந்த ஆர்வத்தையும் பார்த்து குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்து என்னை ஊக்கப்படுத்தினார்கள்.

குத்துச்சண்டை பயிற்சியாளராகி, என்னைப்போல நடுத்தர மற்றும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு.

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து 5 முறை தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மேரிகோம் தான் என்னுடைய முன்னுதாரணம். அவரைப்போல் விடாமுயற்சியுடன் என்னுடைய இலக்கை அடைய வேண்டும் என்பதே எனது லட்சியம்.

நான் குத்துச்சண்டைப் பயிற்சி ஆரம்பிக்கும் போது இது பெண்களுக்கு சரிவராது, அடிபட்டால் பிரச்சினை என்று பலரும் கூறினார்கள். ஆனால் அது மிகவும் தவறான கருத்து. பாதுகாப்பாகவும், சரியான வியூகத்துடனும் விளையாட்டை மேற்கொண்டால் எந்த பிரச்சினையும் வராது. எங்களது பயிற்சியாளர் தஞ்சாவூரில் வசிப்பதால், தொலைவு காரணமாக தினமும் மயிலாடுதுறைக்கு வந்து போக முடியாது. மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே அவரால் வர  இயலும். அதன் காரணமாக நாங்களாகவே இணைந்து பயிற்சி செய்வோம். இவை அனைத்தும் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இருந்தபோதும் நானும், என்னுடன் பயிற்சியெடுக்கும் பெண்களும் இணைந்து மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றோம்.

குத்துச்சண்டை பயிற்சிக்கு முக்கியத் தேவையான கையுறை கூட வாங்க முடியாத சூழலில் இருந்தேன். அப்பா விவசாயி என்பதால், பொருளாதார நெருக்கடிகள் அதிகமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து, சமீபத்தில்தான் வாங்க முடிந்தது.

என்னைப் போல நிறைய பேர் திறமையானவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான பயிற்சி தந்து, பொருளாதார ரீதியில் ஆதரவு கொடுத்தால் அவர்களும் அடுத்த மேரிகோம் ஆகலாம்’’ என்கிறார்.

பல்கலைக்கழக, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று ஏராளமான சான்றிதழ்களும், பதக்கங்களும் வாங்கியிருக்கிறார்.

“சாதிக்கும் எண்ணம் உங்களுக்குள் இருந்தால், சரித்திரம் போற்றும் பெண்களாவது உறுதி” என்கிறார் சிந்துஜா. 

Next Story