துணிப்பையால் சீரான குடும்ப பொருளாதாரம் - ஐராணி
பழச்சாறில் இருந்து ஜாம் தயாரிப்பது, பழரசம் தயாரிப்பது போன்ற சிறு தொழில் பயிற்சியை முயற்சித்துப் பார்த்தேன். மேலும், துணிப்பை தைப்பதற்கான பயிற்சியையும் பெற்றேன்.
அமைதியாக சென்றுகொண்டிருந்த குடும்ப வாழ்க்கையில், திடீரென ஏற்பட்ட பொருளாதார பற்றாக்குறையை சமாளிப்பதற்காக கையில் இருந்த குறைவான தொகையைக்கொண்டு சணல் பை, கலம்காரி துணிப்பை போன்றவற்றை வாங்கி விற்பனை செய்தார் புதுவையைச் சேர்ந்த ஐராணி ராமச்சந்திரன். இன்று அதையே வெற்றிகரமானத் தொழிலாக நடத்தி வருகிறார். அதன் மூலம் சில பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருப்பதோடு, தொழில் பயிற்சியும் வழங்கி வருகிறார். அவரிடம் பேசியதில் இருந்து...
“எனக்கு சொந்த ஊர் திண்டுக்கல். அப்பா போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுனராக இருந்ததால் 40 ஆண்டுகளுக்கு முன்பே புதுச்சேரியில் குடியேறிவிட்டோம். நான் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே அங்குதான்.
1996-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. 10 ஆண்டு காலம் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு வீட்டில் இருந்தேன். அப்போது பெண்களுக்காக நடத்தப்படும் பத்திரிகைகளை வாங்கிப் படிப்பேன். அதில் வரும் தொழில் பயிற்சிகளை செய்து பார்த்து வீட்டிலிருந்தே கற்றுக்கொண்டேன்” என்றவர், தன் தொழிலுக்கான ஆரம்பம் குறித்து பேசினார்.
“என்னுடைய மகனுக்கு முதுகுத் தண்டுவடத்தில் பிரச்சினை இருந்ததால், இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது. அதற்கான செலவுகள் மலைக்க வைத்தது. அவற்றை சமாளிப்பதற்காக ‘ஏதாவது தொழில் செய்தால் என்ன?’ என்று தோன்றியது. அதன் விளைவாகவே இந்தத் தொழிலைத் தொடங்கினேன்.
என் கணவரின் வேலையில் வருமானம் பெரிய அளவில் இருக்காது. அவரின் சம்பாத்தியம் குழந்தைகளைப் படிக்க வைக்கவும், வீட்டு செலவுக்குமே சரியாக இருந்தது. இதில் சேமிப்பது சிரமமானது. இதற்கிடையில் மகனின் மருத்துவச் செலவு வந்தபோது, என்ன செய்வதென்றே புரியாத நிலைமை. கணவரின் வருமானத்தை மட்டுமே கொண்டு குடும்பச் சூழ்நிலையை சமாளிக்க முடியாது என புரிந்தது.
பழச்சாறில் இருந்து ஜாம் தயாரிப்பது, பழரசம் தயாரிப்பது போன்ற சிறு தொழில் பயிற்சியை முயற்சித்துப் பார்த்தேன். மேலும், துணிப்பை தைப்பதற்கான பயிற்சியையும் பெற்றேன்.
அந்தத் தொழிற்பயிற்சி வகுப்பு நடந்த இடத்தில் ஒருவர் ஸ்டால் போட்டு, கலம்காரி துணிகளை விற்றுக்கொண்டிருத்தார். அவரிடம் அதுபற்றி விசாரித்தேன். அவர் “இது ரசாயனங்கள் கலக்கப்படாத துணி. இதில் துணிப்பை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்” என்றார். அப்போது அவரிடம் ஆயிரம் ரூபாய்க்கு துணிப்பை உள்ளிட்ட, துணிப்பை தயாரிப்புக்குத் தேவையான பொருட்களை வாங்கிவந்து விற்பனை செய்தேன்.
அவர் எனக்கு பொருட்களைக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், எங்கு? எப்படி? விற்பனை செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் கொடுத்தார். பொதுவாக இந்தப் பொருட்கள், கண்காட்சியில் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் விற்பனையாகும். மற்றபடி பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களில் ஆர்டர் எடுத்தும் விற்பனை செய்யலாம் என்பது போன்ற வியாபார யுக்திகளையும் சொல்லிக் கொடுத்தார். இது நடந்தது 2014-ம் ஆண்டு.
இதற்கிடையில் நான் மகளிர் சுய உதவிக்குழுவில் சேர்ந்ததால், சென்னை ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் மூலம் பயிற்சி கொடுத்தார்கள். அதில் நமக்கு போட்டியாளர் இருந்தாலும், நம்முடைய பொருளை எப்படி விற்பனை செய்யலாம்? விற்பனையில் வேறு முறையை கையாள்வது எப்படி? என்று பயிற்சி கொடுத்தார்கள்” என்றவர் அதன் பிறகு தானே தயாரிப்பில் இறங்கியுள்ளார்.
“ஒரு பொருளை வாங்கி விற்பனை செய்வதை விட, அதைத் தயாரித்து விற்பனை செய்யும்போது கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன். படிப்படியாக கற்றுக்கொண்டேன். இப்போது புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான இடத்தில், எங்களது தயாரிப்பு நிறுவனத்தை அமைத்து சணல் பை, துணிப்பை, கைத்தறி துணிப்பைகள், மதிய உணவு கொண்டு செல்லும் பைகள் மற்றும் கல்யாண தாம்பூல பைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். ஆர்டரின் பேரில் கேட்பவர்களுக்கும் மொத்தமாக தயாரித்துக் கொடுக்கிறேன். மேலும் தொழிலாகச் செய்ய விரும்பும் பெண்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன்.
இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு, குறைந்த அளவில்தான் முதலீடு செய்தேன். இதில் முழு ஈடுபாட்டோடும், விடா முயற்சியோடும், சந்தைப்படுத்தும் வாய்ப்புகளைத் தெரிந்துகொண்டால் போதுமான வருமானம் பெறலாம். அவரவர் திறமையைப் பொறுத்து இதில் வருமானம் கூடவும் வாய்ப்புண்டு. எனது கடைகளை புதுச்சேரி கடற்கரையில் உள்ள கிராப்ட் பஜாரிலும், ஞாயிற்றுக்கிழமை சந்தையிலும் நடத்தி வருகிறேன்.
சந்தையில் என் தொழில் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அங்கு மட்டுமில்லாமல் ஆண்டுதோறும் நடைபெறும் மலர் கண்காட்சியிலும் ஸ்டால் போடுவதை வழக்கமாக்கிக் கொண்டோம்” என்றவரின் வாழ்க்கையில் முன்னோடியாக அமைந்த புத்தகங்களை இன்றும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்.
“புத்தகங்கள் எப்போதுமே பொக்கிஷங்கள்தான். பெட்டி நிறைய புத்தகங்களை வைத்திருக்கிறேன். இதைப் படித்துதான் படிப்படியாக முன்னேறி இருக்கிறேன். இந்தப் புத்தகங்களைக் கொண்டு என் வீட்டில் சிறிய அளவில் நூலகம் அமைக்கும் எண்ணம் உள்ளது. இந்தத் தொழிலில் நான் இவ்வளவு தூரம் முன்னேறுவதற்கு எனது கணவரும், குழந்தைகளும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள். என் மகன் எம்.பி.ஏ., படித்துள்ளதால், என்னுடைய வியாபாரத்துக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். என்னைப்போல எல்லாப் பெண்களும் கைத்தொழிலை கற்று வீட்டையும், நாட்டையும் முன்னேற்ற வேண்டும்” என நிறைவாக முடித்தார் ஐராணி ராமச்சந்திரன்.
Related Tags :
Next Story