சமூகத்தின் பார்வையை மாற்றிய ‘திருநங்கை’


சமூகத்தின் பார்வையை மாற்றிய ‘திருநங்கை’
x
தினத்தந்தி 7 March 2022 11:00 AM IST (Updated: 5 March 2022 3:38 PM IST)
t-max-icont-min-icon

நான் சிறுவயது முதல் அனுபவித்த சிரமங்களுக்கு எல்லாம் சேர்த்து, என்னை நிரூபித்து எனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறேன். ஆரம்ப காலகட்டத்தில் எண்ணற்ற அவமானங்களைச் சந்தித்தேன். இன்று அனைவரும் அனைத்து பாலினத்தையும் சமமாக நினைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதுவே எனக்கான மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்

திருநங்கைகள் பற்றிய சமூகத்தின் பார்வை தற்போது மாறி இருக்கிறது. பல்வேறு துறைகளில் அவர்கள் முன்னேறி வருகின்றனர். கல்வியின் உதவியால் சமூகத்தில் உயர் பதவிகளை வகிக்கின்றனர், சுயதொழில் செய்கின்றனர், வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றனர். அந்த வரிசையில் பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து தனக்கென ஒரு அங்கீகாரத்தைப் பெற்றவர் சுதா. 49 வயதான இவர், பல சிரமங்களுக்கு இடையில் சமூக ஆர்வலராக திருநங்கைகளின் வாழ்க்கையில் ஒளி வீசிக்கொண்டிருக்கிறார்.

திருநெல்வேலியை சொந்த ஊராகக் கொண்ட சுதா, தற்போது சென்னையில் வசிக்கிறார். 7 வயதில் தன்னை பெண்ணாக உணர்ந்தார். படிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர், 10-ம் வகுப்பு தாண்டுவதே மிகுந்த போராட்டமாக இருந்தது. பலவிதமான கேலிகள், கிண்டல்களுக்கு ஆளானார். இவரது மாற்றத்தை உணர்ந்து வீட்டில் உள்ளவர்கள் அதிர்ந்துபோனார்கள். ஒரு கட்டத்தில் வீட்டிலும் ஆதரவு கிடைக்காமல் 17 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.

வெளியே வந்தபிறகு நிறைய இடங்களில் வேலை பார்த்த இவருக்கு கிடைத்தது இன்னல்கள் மட்டுமே. பின்பு 1991-ம் ஆண்டு ‘சகோதரன்’ எனும் தொண்டு அமைப்பைச் சேர்ந்த சுனில் என்பவருடன் இணைந்து சமூகப் பணிகளில் களம் இறங்கினார். இருவரும் சேர்ந்து சென்னை முழுவதும் உள்ள திருநங்கைகள் பற்றிய விவரங்களை ஆய்வு செய்தனர்.

2004-ம் ஆண்டு முதல் வி.எச்.எஸ் என்ற அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளுக்காக சமூகப்பணி செய்ய ஆரம்பித்தார். இந்தியா முழுவதும் பயணித்து திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னேற்றத்திற்கான வார்த்தைகளை அவர்களுக்குள் விதைத்தார்.

இதைத் தாண்டி திருநங்கைகள் பற்றி மக்கள் தெரிந்து கொள்வதற்கும், அவர்களின் திறமைகளை அறிந்து கொள்வதற்கும் முழுக்க முழுக்க திருநங்கைகளை பங்கு பெறச்செய்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். 2014-ம் ஆண்டு சுதா ஒருங்கிணைத்த, 220 திருநங்கைகள் கலந்துகொண்ட ‘புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ நிகழ்ச்சியில் 60 மணி நேரம் கலைநிகழ்ச்சிகள் நடத்தி விருது பெற்றனர். இதைப் பாராட்டி கவுரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு 2015-ம் ஆண்டு இவருக்கு ‘கலைமாமணி’ விருது அளித்தது.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மக்களுக்கு செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இவரது அமைப்பினர் இணைந்து சமூக சேவை ஆற்றத் தொடங்கினர். இவர்களின் கலை நிகழ்ச்சிகளை ஒரு கருவியாக வைத்து கல்வி, வேலை, தொழில் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளைப் பெற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளுக்கான வாழ்வியல் மேம்பாட்டிற்காக வழிவகை செய்தார் சுதா. 
முன்னேறும் நோக்கம் கொண்ட திருநங்கைகளுக்கு காவல் துறை, சகோதரன்  அமைப்பு, தன்னார்வலர்கள் உதவியுடன் தொழில் கல்வி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.



அவர் தனது வாழ்க்கைப் பயணம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

“நான் சிறுவயது முதல் அனுபவித்த சிரமங்களுக்கு எல்லாம் சேர்த்து, என்னை நிரூபித்து எனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறேன். ஆரம்ப காலகட்டத்தில் எண்ணற்ற அவமானங்களைச் சந்தித்தேன். இன்று அனைவரும் அனைத்து பாலினத்தையும் சமமாக நினைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதுவே எனக்கான மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்.

திருநங்கைகள் நலவாழ்வு சங்கம் சாத்தியமானது எப்படி?
ஒரு சமூகத்தைச் சீர்படுத்த வேண்டுமெனில், அதனை வழிநடத்த ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. சிதறிக் கிடக்கும் திருநங்கைகளை ஒருங்கிணைப்பதற்காக போராடி பெற்றதே ‘திருநங்கைகள் நலவாழ்வு சங்கம்’. முதன் முதலில் தமிழ்நாட்டில் ஆரம்பித்த இந்த சங்கத்தின் மூலம் நிறைய நன்மைகள் செய்தோம். எங்களின் வாழ்வை மேம்படுத்தினோம். இது இந்தியா முழுவதும் பரவ வேண்டுமென ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று தமிழ்நாட்டை முன்மாதிரியாகக் காண்பித்து, இந்த அமைப்பை அரசு அங்கீகாரத்துடன் ஏற்படுத்த வழிவகை செய் தோம். 

திருநங்கைகளின் வாழ்விற்கு பக்கபலமாய் அமைவது எதுவாக இருக்கும்?
குடும்பம் தான். ஒவ்வொரு சமுதாயமும் ஒரு குடும்பத்தின் மூலம்தான் தோன்றியது. ஆண், பெண் போல திருநம்பியும், திருநங்கையும் கடவுளால் படைக்கப்பட்ட பாலினம்தான். இன்று நான் நல்ல நிலையை அடைந்த பிறகு, என் குடும்பத்தில் என்னை ஏற்றுக் கொண்டனர். 

ஆனால் ஒரு திருநங்கை, தன்னை முழுமையாக உணராத தருணத்தில் இருக்கும்போது அவர்களை ஒதுக்கி, கல்வி, குடும்பம் என அனைத்தையும் பறித்து, மனம், உடல் சார்ந்து வேதனைப்படுத்தி, வளரும் சமயத்தில் தனித்து விடப்படும் பொழுதுதான் அவர்கள் வழியின்றி, ஆதரவின்றி வேறு பாதைகளில் செல்ல நேரிடுகிறது. ஆண், பெண் குழந்தைகளைப்போல, திருநங்கைகளையும் ஏற்று ஆதரவு அளித்து வளர்க்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் தனக்கென அடையாளத்தை, தனித்துவத்தை ஏற்படுத்தி, தான் பட்ட கஷ்டங்களை இனிவரும் தலைமுறைகள் அனுபவிக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் புன்னகை வீசியபடி செயல்பட்டு வருகிறார் சுதா. 

Next Story