கீதத்தால் கவரும் மானவதி
அப்பாவுடன் கச்சேரிகளுக்குப் போய் வந்ததன் விளைவாக எனக்குள் இருந்த பாடும் திறமையை உணர்ந்தேன். 1975-ம் ஆண்டிலிருந்து பாடத் தொடங்கினேன். தொழில் முறைப் பாடகியானது 1980 காலகட்டத்தில்தான்.
சிறுவயதில் பாடகியாக பயணத்தைத் தொடங்கி, 60 வயது கடந்த பின்னும் உற்சாகமாகப் பாடிக் கொண்டிருக்கிறார் மானவதி. ‘சாதிக்க வயது தடையல்ல’ என்பதற்கு முன்னுதாரணமாக விளங்குகிற அவரது பேட்டி...
உங்களைப் பற்றி?
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீரனூர் என்ற கிராமமே நான் பிறந்த ஊர். என்னுடைய அப்பா குரு ராமலிங்கம்; வாய்ப்பாட்டுக் கலைஞர். அந்தக் காலத்தில் ஏராளமான கர்நாடக இசைக் கச்சேரிகளில் பங்கேற்று பிரபலமானவர். அம்மாவின் பெயர் ஜெயலட்சுமி. கணவர் ராஜ்குமார்; அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். எங்களுக்கு இரண்டு மகள்கள்.
மானவதி என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறதே?
கர்நாடக இசையில் 72 தாய் ராகங்கள் உண்டு. அவற்றில் 5-வது ராகம் மானவதி. அதையே எனக்கு பெயராக வைத்தார்கள். எனக்கு இரண்டு சகோதரிகள், அவர்களின் பெயர்கள் ஹேமவதி, ரூபவதி.
மேடைகளில் பாடத் தொடங்கியது எப்போது?
அப்பாவுடன் கச்சேரிகளுக்குப் போய் வந்ததன் விளைவாக எனக்குள் இருந்த பாடும் திறமையை உணர்ந்தேன். 1975-ம் ஆண்டிலிருந்து பாடத் தொடங்கினேன். தொழில் முறைப் பாடகியானது 1980 காலகட்டத்தில்தான்.
அப்பா பாடகர் என்றாலும், நான் பாடகியாவதை எதிர்க்கவே செய்தார். அதையும் தாண்டி அப்பாவுடன் கச்சேரிகளுக்குப் போனபோது, அவருடன் பாடுகிற பெண் பாடகி வராத சூழலில், நான் இணைந்து
பாடுவது வழக்கமானது. அவ்வாறு அப்பாவுடன் சென்று முதன்முதலாக பாடியது ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’ என்ற பாடல். அதே மேடையில் இன்னும் சில பாடல்களைப் பாடினாலும், ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து' பாடலை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பாடச் சொல்லிக் கேட்க மூன்று முறை பாடினேன். முதல் அனுபவமே மறக்க முடியாத தருணமாக இருந்தது.
இவ்வாறு ஆரம்பித்து, கர்நாடக இசைப் பாடல்கள், பக்திப் பாடல்கள் என இதுவரை 3 ஆயிரம் கச்சேரிகளில் பங்கேற்றுவிட்டேன். ஜானகி, பி.சுசீலா குரல்களில் வந்த பாடல்களை பாடி பிரபலமானேன். கேள்வி ஞானத்தால் பாடத் தொடங்கிய நான், பின்னாளில் இசைக்கல்லூரியில் முறைப்படி சங்கீதம் கற்றேன்.
பாடகியாக உங்கள் பயணத்தில் மறக்க முடியாத தருணங்கள் பற்றி சொல்லுங்கள்?
அகில இந்திய வானொலியில் வாய்ப்புக்காக முயற்சித்தபோது, பிரபல வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன், என்னுடைய அப்பாவின் அருமை பெருமைகளை எடுத்துச் சொன்னார். அப்பா பாடிக்கொண்டிருந்தபோது அவரது இசையில் மயங்கி, பின்னாளில் கச்சேரியொன்றில் தானே முன்வந்து அவருக்கு வயலின் வாசித்ததை நினைவு கூர்ந்து, “அவருடைய மகள்தான் மானவதி” என பெருமையாக எடுத்துச் சொன்னார். சிலிர்ப்பான தருணம் அது.
அவ்வாறு அகில இந்திய வானொலியில் வாய்ப்பு கிடைத்து ‘ஹை கிரேடு ஆர்டிஸ்டாக’ பல வருடகாலம் பாடிவந்தேன். தூர்தர்சனில் ‘ஹை கிரேடு ஆர்டிஸ்டாக’ தேர்வானபோது முதல் பாடலை டி.ஆர்.பாப்பாவின் இசையில் பாடியது மறக்க முடியாத அனுபவம்.
கிடைத்த விருதுகள் பற்றி?
‘யாழ்குரல் வல்லவி’, ‘தேனிசைத் தென்றல்’, ‘இசையரசி’ என பல பட்டங்களும், விருதுகளும் கிடைத்துள்ளன.
Related Tags :
Next Story