உணவின் மூலம் தொடங்கிய உன்னத சேவை


உணவின் மூலம் தொடங்கிய உன்னத சேவை
x
தினத்தந்தி 7 March 2022 11:00 AM IST (Updated: 5 March 2022 4:53 PM IST)
t-max-icont-min-icon

முதல் ஆறு மாதங்கள் வரை நான் பதிவிட்ட ரெசிபிகளுக்கு பெரிதாக வரவேற்பு இல்லை. ஒருநாள் ரோட்டுக்கடையில் உருளைக்கிழங்கு வடையை நான் சாப்பிட்ட புகைப்படத்தை ரெசிபியுடன் சேர்த்து பதிவேற்றினேன். உணவு சாப்பிடும்போது, நான் கொடுத்த முகபாவனை காரணமாக அந்தப் பதிவு நல்ல வரவேற்பை பெற்றது.

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கீதா ஸ்ரீதர், திருமணத்துக்குப் பிறகு மும்பையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். முதலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 28 குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவளிக்கும் சேவையைத் தொடங்கி, தற்போது பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஏழைகளுக்கும், இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்களுக்கும் உதவி செய்து வருகிறார். அவருடன் பேசியதில் இருந்து...

“மகிழ்ச்சியாக தருணத்தை அனுபவித்து உணவு சமைக்கும் பழக்கம், என் அம்மாவிடம் இருந்து வந்ததுதான். சிறுவயதில் இருந்தே ‘நீ எது சமைத்தாலும் ருசியா இருக்கும்' என்று என் குடும்பத்தினரும், நண்பர்களும் என்னை ஊக்குவிப்பார்கள். 

என் கணவரின் வழிகாட்டுதலின்படி தனியார் தொலைக்காட்சி நடத்திய மாஸ்டர் செப் 4-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றேன். 50 ஆயிரம் போட்டியாளர்களுக்கு மத்தியில், ஒவ்வொரு படிநிலையையும் தாண்டி இறுதிப் போட்டிக்குச் சென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதேநேரம், அதுதான் என் வாழ்வில் புது அர்த்தத்தை உண்டாக்கிய பாதைக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. 

பின்னர் ‘உங்களுக்குத் தெரிந்தவற்றை அடுத்தத் தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கலாம்’ என்ற எனது மகளின் ஆசைப்படி, என்னுடைய ஐம்பதாவது வயதுக்குப் பின்னர்தான் ‘இந்தியன் புட் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் இணைய பக்கத்தை தொடங்கினேன்.

முதல் ஆறு மாதங்கள் வரை நான் பதிவிட்ட ரெசிபிகளுக்கு பெரிதாக வரவேற்பு இல்லை. ஒருநாள் ரோட்டுக்கடையில் உருளைக்கிழங்கு வடையை நான் சாப்பிட்ட புகைப்படத்தை ரெசிபியுடன் சேர்த்து பதிவேற்றினேன். உணவு சாப்பிடும்போது, நான் கொடுத்த முகபாவனை காரணமாக அந்தப் பதிவு நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல் தொடர்ந்து நான் செய்யும் உணவு வகைகளுடன் உணவை சுவைக்கும் முகபாவனையையும் பதிவேற்றி வருகிறேன். தற்போது ஒரு மில்லியனுக்கும் மேலானோர் என் இணைய பக்கத்தை பின்பற்றுகிறார்கள்.

மேலும், இதன் மூலம் சில குறிப்பிட்ட தனித்துவமான உணவு வகைகளை விளம்பரப்படுத்தும் வாய்ப்பும் வந்தது. அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 28 குழந்தைகளுக்கு தினமும் உணவு சமைத்து கொடுக்கிறேன். பார்வை குறைபாடுள்ள 80 குழந்தைகளுக்கு கல்வி பயிலவும், தேர்வு எழுதவும் உதவி செய்து வருகிறேன். என் குடும்பத்தினரையும் இந்தச் சேவையில் ஈடுபடுத்தி வருகிறேன்.

சிறப்பு குழந்தைகள் பயிலும் பள்ளியில் பெற்றோர்களுக்கான ஆலோசனையையும் வழங்குகிறேன். சென்னையிலும், மும்பையிலும் உள்ள பல தொழில்முனைவோர்களின் உதவியுடன், என் குடும்பத்தினரின் ஆதரவுடன் வேலையின்றி, வாழ்வாதாரத்தை மேம்படுத்த தவிக்கும் பெண்களுக்கு வேலை வாங்கித் தருவது, கல்வி பயில உதவுவது போன்ற சேவைகளைச் செய்து வருகிறேன்.

எனது சேவைக்காக பல்வேறு விருதுகள் பெற்றிருந்தாலும், நான் உதவி செய்தவர்கள் நல்ல நிலையில் இருப்பதைப் பார்ப்பதையே எனக்குக் கிடைத்த பெரும் விருதாக கருதுகிறேன்” என்றார் கீதா. 

Next Story