தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கும் தருணிகாஸ்ரீ


தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கும் தருணிகாஸ்ரீ
x
தினத்தந்தி 14 March 2022 11:00 AM IST (Updated: 12 March 2022 4:15 PM IST)
t-max-icont-min-icon

மாணவிகள் சமூகத்தில் ஏற்படுகின்ற தடைகளை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்காப்புக் கலைகளில் வல்லமை படைத்தவர்களாகத் திகழ வேண்டும்.

முதாயத்தில் வெற்றிகரமாக முன்னேறி வரும் பெண்கள், தற்போது தங்கள் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துகிறார்கள். பலர் தற்காப்புக் கலைகளை ஆர்வத்தோடு கற்று வருகிறார்கள். அந்த வரிசையில் தனது 9 வயதில் இருந்தே கராத்தே கலையைப் பயின்று வருகிறார் மதுரையைச் சேர்ந்த தருணிகாஸ்ரீ. கராத்தேயில் சர்வதேச அளவில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். அவருடன் நடந்த உரையாடல் இங்கே…

உங்களைப் பற்றி?
நான் 10-ம் வகுப்பு படிக்கிறேன். நான்காம் வகுப்பில் இருந்தே கராத்தே கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.  

இதுவரை 28 போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை பெற்றிருக்கிறேன். இதில் 9 சர்வதேச, ஆசிய, அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகளும் அடங்கும். மாவட்ட லயன்ஸ் கிளப் சார்பிலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன்.

ஒவ்வொரு முறை பரிசு பெறும்போதும் ‘மேலும் சாதிக்க வேண்டும்’ என்ற உந்துதல் ஏற்படும். ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு, தங்கப் பதக்கம் பெற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன்.

தோல்விகளை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?
தோல்விகளை வெற்றிக்கான படிக்கட்டுகளாக எடுத்துக்கொள்கிறேன். தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றில் உள்ள தவறுகளை களைந்து வருகிறேன். இதுவரை கலந்துகொண்ட போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே தோல்வியை சந்தித்து இருக்கிறேன்.

மறக்க முடியாத தருணம் எது?
இந்தோனேஷியா நாட்டில் நடந்த கராத்தே போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றது என்றென்றும் நினைவில் நிற்கும் தருணமாகும்.

தற்காப்புக் கலை மூலம் சமூகத்துக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
மாணவர்களுக்கு தற்காப்புக் கலையை இலவசமாகக் கற்று கொடுத்து வருகிறேன். அதனைப் பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பயிற்சி மையம் தொடங்க வேண்டும் என்ற கனவும் உள்ளது. மாணவிகள் சமூகத்தில் ஏற்படுகின்ற தடைகளை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்காப்புக் கலைகளில் வல்லமை படைத்தவர்களாகத் திகழ வேண்டும்.

பெண்கள் தற்காப்புக் கலைகளைக் கற்க வேண்டியதன் அவசியம் என்ன?
தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்வதன் மூலம் பெண்கள் தங்களின் பாதுகாப்பையும், தன்னம்பிக்கையையும், சுய மரியாதையையும் அதிகரிக்க முடியும். விடாமுயற்சி, சுய கட்டுப்பாடு, மனஉறுதி, அர்ப்பணிப்பு உணர்வு போன்றவற்றை வளர்த்துக்கொள்ளலாம். உடல் வலிமையும் மேம்படும். சமூகத்தில் எதையும் தைரியத்தோடு எதிர்கொள்ளவும் முடியும்.



கல்வியில் எத்தகைய நிலையை எட்ட வேண்டும் என நினைக்கிறீர்கள்?
விவசாயத்தில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. வேளாண் கல்வியைக் கற்று, பாரம்பரியமாக முன்னோர்கள் செய்த வேளாண்மையில் சாதனை புரிய வேண்டும். குடிமைப் பணித் தேர்வுகளுக்கு என்னை தயார்படுத்தி வருகிறேன். மாவட்ட ஆட்சியாளர் ஆக வேண்டும் என்பதே எனது லட்சியம். 

குடும்பத்தினர் ஆதரவு எப்படி உள்ளது?
பெற்றோர் எனது வளர்ச்சியில் உறுதுணையாக இருக்கிறார்கள். என்னுடைய  கனவுகளை அவர்களின் கனவாகக் கொண்டு வாழ்கிறார்கள்.

உங்களைப் போன்ற இளைய சமுதாயத்தினருக்கு நீங்கள் கூற விரும்புவது? 
பெண்கள் உடல் மற்றும் மனவலிமையோடு இருந்தால் எதையும் சாதிக்க முடியும். பெற்றோர்கள் பெண் குழந்தைகளின் கனவுக்கு தடை விதிக்காமல் அவர்களின் பாதையில் அவர்களை பயணிக்க விடுங்கள். உங்கள் கனவுகளை அவர்கள் மீது திணிக்காமல், அவர்களின் லட்சியத்தை அடைவதற்கு துணையாக இருங்கள். 





உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தும் தற்காப்பு கலை!
பெண்கள் தற்காப்பு கலைகளைக் கற்றுக்கொள்வது முழு உடலின் தசைகள் பராமரிப்பை ஊக்கப்படுத்தும். உடலின் சமநிலைத் தன்மை, விரைவுத் தன்மை, சுறுசுறுப்பு, சீரான உடல் இயக்கம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கும். எவ்வித பிரச்சினையிலிருந்தும் மீள வைத்து உடல் மற்றும் மன வலிமையை உண்டாக்கும். அதேநேரம் உடலின் சீரான இயக்கத்தால், ஹார்மோன் சுரப்புகள் இயல்பு நிலையை அடையும். இதனால் உடலும், மனமும் ஒருநிலைப்படும்; புத்துணர்வு பெறும்.

உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதைப் போல, மனதில் உள்ள கஷ்டம், கோபம், பொறாமை, போட்டி போன்ற நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கக்கூடிய குணாதிசயங்கள் மாறி, மனம் அமைதியை உண்டாக்கும். நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். இதனால், நாம் செய்யும் செயலில் முழு கவனமும், வெற்றியும் கைகூடும். 

Next Story