பாகுபாடுகளை தகர்த்த இளம்பெண்
கெரிஸ் ரோஜர்ஸ் தனது இயக்கத்தின் மூலம் பல பெண்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி வருகிறார்.
மனிதன் தோன்றியது முதல் இன்று வரை இருக்கும் மிகப்பெரிய சவால் ‘பாகுபாடு’. அதில் நிற பாகுபாடு இன்றளவும் நிலவி வருவது வருத்தமான விஷயம்.
திறமைக்கு மதிப்பு கொடுக்காமல் தோலின் நிறத்தைக் கொண்டு மதிக்கும் நிலைமை கருப்பின குழந்தைகள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதையும் கடந்து தனக்குப் பிடித்த விஷயத்தில் அசத்தி வருகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த 15 வயது இளம்பெண் கெரிஸ் ரோஜர்ஸ்.
கெரிஸ், ஆறு வயது சிறுமியாக இருந்தபோது, கருப்பின பாகுபாடுகளை சந்திக்க நேர்ந்தது. பள்ளிக்கூடத்தில், வகுப்பறைகளில் ஆனந்தமாக விளையாடிய குழந்தை மனதில், நிற பாகுபாடு செயல்கள் அரங்கேறின. வகுப்பு ஒன்றில் ஆசிரியர் மாணவர்களை தங்கள் சுய உருவத்தை வரையச் சொன்னார்.
வண்ணம் தீட்டுவதற்காக அனைவருக்கும் வெள்ளை மற்றும் பிரவுன் நிறத்தை கொடுத்த அவர், கெரிசுக்கு மட்டும் அடர்ந்த கருப்பு நிறத்தை கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற மாணவர்கள் அவரை நோக்கி கிண்டலாக சிரித்தனர்.
தொடர்ந்து பல ஆண்டுகள், பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களால் நிறத்திற்காக கேலிக்கு இலக்கான கெரிஸ் மன அழுத்தத்திற்கும் ஆளானார். பத்து வயது முடிந்தவுடன் ஒரு நாள் கெரிஸ் சிந்திக்கத் தொடங்கினார்.
“என்னுடைய மதிப்பு என்னுடைய திறமைக்காக மட்டுமே இருக்க வேண்டும்; நிறத்திற்காக இருக்கக்கூடாது என்பதை உணர்ந்து தனது பதினோராவது வயதில் ‘பிளெக்சின் இன் மை காம்ப்ளெக்சன்’ என்னும் இயக்கத்தைத் தொடங்கினார். ஆடை வடிவமைப்பு வழியாக நிற பாகுபாட்டை எதிர்த்தும், சுயமரியாதையை ஏற்படுத்தவும் இந்த நிறுவனத்தைத் தொடங்கியதாக கூறுகிறார்.
கெரிஸ் ரோஜர்ஸ் தனது இயக்கத்தின் மூலம் பல பெண்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி வருகிறார். “உலகில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் நிறத்திற்காக பெருமைப்பட வேண்டும். ஒருவர் மன அழகிற்காக மட்டுமே மதிக்கப்பட வேண்டும். புற நிறத்திற்காக அல்ல” என்பதை ஆணித்தரமாக பல மேடைப் பேச்சுகளில் அறிவுறுத்தி வருகிறார்.
இந்தக் கூற்றை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பாடமாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். நியூயார்க் பேஷன் வீக்கில் இடம்பெற்ற இளைய வயது ஆடை வடிவமைப்பாளர் என்ற பெருமையையும் இவர் பெற்றார். தனது நிறுவனம் மூலம் கல்வி, உட்படுத்துதல் மற்றும் சுயமரியாதை ஆகிய 3 முக்கிய விஷயங்களை கற்றுக் கொண்டதாக கூறுகிறார்.
நிறுவனர், நடிகை, பாடகி, தன்னம்பிக்கை பேச்சாளர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்ட கெரிஸ் ரோஜர்ஸ் இளம் பெண்களுக்கு கூறுவதாவது, ‘‘அனைத்து பெண்களுமே தனித்துவமானவர்கள்.
உங்கள் கனவுகளை ஒவ்வொரு நாளும் தீட்டுங்கள். உங்களையும் உங்கள் அழகையும் நேசியுங்கள். உங்களுக்கு உண்மையாக இருங்கள். தகுந்த மதிப்பு தானாக தேடி வரும்’’. கெரிஸ் ரோஜர்ஸ் எப்படி தன் மன உறுதி கொண்டு தனது லட்சியத்தை நோக்கி செல்கிறாரோ, அதுபோலவே அனைத்து பெண்களும் எந்த இடையூறு மற்றும் தடைகள் ஏற்பட்டாலும் அவரைப் பின்பற்றி வாழ்வில் சாதிக்க வேண்டும்.
Related Tags :
Next Story