அரிய வகைத் தாவரங்களை வளர்க்கும் இயற்கை விவசாயி கஸ்தூரி


அரிய வகைத் தாவரங்களை வளர்க்கும் இயற்கை விவசாயி கஸ்தூரி
x
தினத்தந்தி 11 April 2022 11:00 AM IST (Updated: 9 April 2022 1:41 PM IST)
t-max-icont-min-icon

பெண் என்றாலே பொறுமையின் இலக்கணம்தானே. அதனால் விவசாயத்தில் ஏற்படும் சிரமங்களை சவாலாக எடுத்துக்கொண்டுதான் செயல்பட்டு வருகிறேன்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள சாந்திபுரம் கிராமத்தில் ஊருக்கும், உறவுகளுக்கும் தனது வேளாண் பண்ணையில் விளையும் காய்கறிகள், பழங்கள், செவ்விளநீர் போன்றவற்றை இலவசமாக அளித்து வருகிறார் இயற்கை விவசாயி கஸ்தூரிபாய். அவருடன் ஒரு சந்திப்பு.

விவசாயத்தின் மீது ஆர்வம் வந்தது எப்படி?
என் அப்பா சின்னசாமி, அம்மா சாத்தம்மாள். இருவருமே பள்ளி ஆசிரியர்கள். விவசாய ஆர்வம் அதிகம் உள்ளவர்கள். அவர்களைப் பார்த்து வளர்ந்த நானும் விவசாயத்தை உயிர் போல நினைத்தேன். அதனால் பள்ளிப் பருவத்திலேயே விவசாய வேலைகளையும் செய்யத் தொடங்கி விட்டேன். என்னைப் போலவே விவசாயத்தில் தீவிர ஈடுபாடு உள்ள கணவர் எனக்கு அமைந்ததால், மகிழ்ச்சியோடு விவசாயத்தில் தொடர்ந்து ஈடுபடுகிறேன்.

கணவரது ஊர் அருகே, உறவினர்கள் உதவியுடன் உருவாக்கிய புதிய கிராமம் ‘சாந்திபுரம்’.  அந்தக் கிராமத்தில் என் விருப்பப்படி, எனது பெயரில் அறுபது ஏக்கரில் ‘வேளாண் பண்ணை’ அமைத்தோம். பொட்டல் காடாய்... பாலைவனம் போல இருந்த இடம் இன்று சோலைவனம் ஆகிவிட்டது.

உங்கள் விவசாயப் பண்ணையில் என்னென்ன வகை தாவரங்கள் உள்ளன?
சங்ககால இலக்கியங்களில் சொல்லப்பட்ட அத்தனை வகை மரங்களும் எங்கள் பண்ணையில் இருக்கின்றன. மா மரம், பலா மரம், வாகை மரம், தென்னை மரம், ஈச்ச மரம், தாழை மரம், விசிறி வாழை, நந்தியாவட்டை, நெல்லிக்காய், நாவல் பழம், ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் அனைத்து வகையான பூக்கும் தாவரங்களும் உள்ளன.



ஒவ்வொரு விதையும், ஒரு விருட்சம் என்பதால் நிறைய விதைகளை இங்கேயே விதைத்து வைத்திருக்கிறோம்.

எனது இளமைக் காலத்தில் பார்த்த ‘புளிச்சாங்குடி’ என்ற தாவரம், கிராமத்தில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் தண்ணீர் தாகம் எடுத்தால் பிடுங்கிச் சாப்பிடும் ‘கட்டை காடை’ போன்ற அரியவகை தாவரங்கள் பல இங்கே இருக்கின்றன. குழந்தைகள் பூங்காவும் அமைத்திருக்கிறோம்.

விவசாயப் பணி எளிதாக இருக்கிறதா?
பெண் என்றாலே பொறுமையின் இலக்கணம்தானே. அதனால் விவசாயத்தில் ஏற்படும் சிரமங்களை சவாலாக எடுத்துக்கொண்டுதான் செயல்பட்டு வருகிறேன்.

‘தேக்கு மரம்’, ‘செம்மரம்’ போன்றவற்றையும் நட்டு வளர்த்து வருகிறோம். நடும்போதே இயற்கையிலேயே சேதாரம் ஆகிப் பணம் நஷ்டமாகும். ஆனாலும், ‘அழுது கொண்டு இருந்தாலும் உழுதுகொண்டிரு!’ என்ற வேளாண் பண்பாட்டு முறையை மனதார ஏற்று செயல்பட்டு வருகிறோம். விவசாயத்தில் உள்ள லாப-நஷ்டங்களை அறிந்து, தெளிவோடு சுறுசுறுப்பாகத் தொடர்ந்து இயங்கி வருகிறோம்.

உங்கள் விவசாயப் பணிகளில் உறுதுணையாக இருப்பவர்கள் யார்?
என் கணவர் ‘முனைவர் தே.ஞானசேகரன் எனக்கு பெரிதும் உதவியாக இருக்கிறார்; ஊக்கப்படுத்துகிறார். பி.எஸ்.சி. விவசாயப் பட்டதாரியான எங்கள் மகன் அறிவழகன் எனக்கு பக்கபலமாக உள்ளார். மேலும் கூட்டுக் குடும்பமாக எங்களுடன் இங்கே வாழ்ந்து கொண்டு, விவசாயப் பணிகள் செய்யும் அத்தனை பேருமே என் விவசாயப் பணிகள் வெற்றி பெறுவதற்குப் பெரிதும் உதவி வருகிறார்கள்.

உங்கள் வேளாண் பண்ணையின் தனிச் சிறப்பு என்ன?
செயற்கை உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி, ஆரோக்கியம் தரும் ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்வது எங்கள் தனிச்சிறப்பு. இங்கே விளையும் விவசாயப் பொருட்களில் பெரும்பாலானவற்றை விற்பனை செய்வதில்லை. மா, பலா, வாழை, செவ்விளநீர், நெல்லிக்காய், நாவல் பழங்கள் மற்றும் பல்வேறு பூ வகைகளை, இங்கே உழைக்கும் உறவினர்கள் மற்றும் சாந்திபுரம் கிராம மக்கள் அனைவருக்கும் இலவசமாகவே அளித்து வருகிறோம்.

உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?
இன்னொரு நூறு ஏக்கரில் ‘இயற்கை விவசாயம்’ செய்து, நூற்றுக்கணக்கானவர்களுக்கு ‘வேலைவாய்ப்பு’ தரும் வகையில் புதிய விவசாய கிராமம் உருவாக்க வேண்டும், பலவகை மரங்களைக் கொண்ட பிரம்மாண்டமான வனம் உருவாக்க வேண்டும் என்ற லட்சியம் எனக்கு இருக்கிறது. கஸ்தூரிபாயின் கனவு நிறைவேறட்டும். 

Next Story