அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி


அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி
x
தினத்தந்தி 11 April 2022 11:00 AM IST (Updated: 9 April 2022 4:34 PM IST)
t-max-icont-min-icon

மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமையை மறுவரையறை செய்ததிலும், சிறுபான்மையினர் வாக்களிக்கும் உரிமைகளை உறுதிப்படுத்தும் வழக்கிலும் மிகுந்த பங்காற்றினார்.

“நீங்கள் செய்யும் ஒவ்வொரு பணியிலும், உங்களால் முடிந்ததை சிறப்பாக செய்யுங்கள். உங்கள் பிரச்சினைகளை உங்களை விட யாரும் தெளிவாக அறிந்திருக்க மாட்டார்கள். அதனால் நீங்களே ஒரு நல்ல தீர்வை தேர்ந்தெடுங்கள்” என்கிறார் சாண்ட்ரா ஓ கான்னர். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமை சாண்ட்ராவிற்கு சொந்தமானது.

ஆரம்பகால வாழ்க்கை: 
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸின் எல் பாசோவில் 1930-ம் ஆண்டு மின்சாரம் கூட இல்லாத பண்ணை வீட்டில் பிறந்த சாண்ட்ரா, 1950-ம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். பின்னர் சட்டப் பள்ளியில் சேர்ந்து 1952-ம் ஆண்டு பட்டம் பெற்றார். அந்தக் கால கட்டத்தில் 2 சதவீத பெண்களே சட்டக்கல்லூரியில் படித்து வந்தார்கள்
   படித்து முடித்த பிறகு வழக்கறிஞராக பணிபுரிய வேண்டும் என்ற கனவுடன் வந்த சாண்ட்ராவிற்கு ஏமாற்றமே கிடைத்தது. வேலை தேடி அலைந்த அவருக்கு பணி மறுக்கப்பட்ட காரணம் அவர் ஒரு பெண் என்பதனால் மட்டுமே. மனம் தளராமல் தொடர்ந்து முயற்சித்த சாண்ட்ரா, 1965-ம் ஆண்டு முதல் 1969-ம் ஆண்டு வரை அரிசோனாவின் உதவி அட்டர்னி ஜெனரலாகவும், அரிசோனா மாநில செனட்டிலும் பணியாற்றினார். பின்னர், ஜான் ஓ கான்னர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

முதல் பெண் நீதிபதி:
1981-ம் ஆண்டில், பல எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தையும் தாண்டி, முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாக சாண்ட்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். குடிமக்கள் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாக்களிக்கும் உரிமைகள், பெண் கருக்கலைப்பு உரிமைகள், அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு, பாகுபாடுகளுக்கு எதிரான பாதுகாப்பு போன்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் சாண்ட்ராவின் பங்கு முக்கியமானது.

முக்கிய வழக்குகள்:
மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமையை மறுவரையறை செய்ததிலும், சிறுபான்மையினர் வாக்களிக்கும் உரிமைகளை உறுதிப்படுத்தும் வழக்கிலும் மிகுந்த பங்காற்றினார்.

சிறுபான்மையினருக்கான கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கவும், கல்லூரி வளாகத்தில் இன வேறுபாட்டை நீக்கவும், மாணவர் சேர்க்கை கொள்கைகளில் உறுதியான நடவடிக்கையைப் பயன்படுத்துவதற்கான மாநிலக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உரிமையை உறுதிப்படுத்திய வழக்கில் முக்கிய பங்காற்றினார்.

ஓய்வு காலம்:
“மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வது மிக சுலபம்; அதற்கு பிடித்த வேலையை மனதார செய்தாலே போதும்” என்று கூறும் சாண்ட்ரா, 2006-ம் ஆண்டு தனது கணவர் ஜான் ஓ கான்னர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டதால் அவரை கவனித்துக் கொள்வதற்காக உச்சநீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். 
பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் மக்களுக்கு தொடர்ந்து குடிமக்கள் உரிமைகள் பற்றிய கல்வியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார். இளம் வயதில் தனது உரிமைக்காகவும், பொதுமக்கள் முன்னேற்றத்திற்காகவும் போராடியவர் இப்பொழுது 92 வயதில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

Next Story