கரைக்கு வெளியே ஒரு அலை
சில குழந்தைகளுக்கு போட்டோகிராபி பிடிக்கும், சிலருக்கு நடனம் பிடிக்கும், ஒரு சிலருக்கு விளையாட்டு பிடிக்கும். அவர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்டு சொல்லிக்கொடுக்கிறோம். முக்கியமாக அவர்களின் கலாசாரம் எதுவோ அதில் இருந்து சொல்லிக்கொடுக்க வேண்டும்.
“குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கிறேன். அவர்கள் பள்ளிக்கூடம் செல்வதை பார்க்கிறேன். அவர்களின் சிரிப்பும், ‘அக்கா’ என அன்போடு அழைக்கும் வார்த்தையும் எனக்கு மன நிறைவை அளிக்கிறது. நிம்மதியை கொடுக்கிறது” என்கிறார் குழந்தை செயற்பாட்டாளர் செரினா சரீஸ்.
கல்பாக்கத்தில் ‘அலை’ எனும் அமைப்பை நிறுவி தனது நண்பர்களோடு இணைந்து, அடிப்படைக் கல்விகூட கிடைக்காத மீனவ மற்றும் இருளர் சமூக குழந்தைகளுக்கு முழு நேரமாக களத்தில் இருந்து உதவிகள் செய்து வரும் செரினா பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாம் பெங்களூருவில். குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் செரினாவிடம், அவரது பயணம் குறித்து கேட்டோம்.
“முதுகலை படிப்பை முடித்ததும் சில நிறுவனங்களில் வேலை செய்தேன். விடுமுறை நாட்களில் என் சொந்த ஊரான கல்பாக்கம் வந்து செல்வேன். அங்குதான் மீனவ குழந்தைகளையும், இருளர் குழந்தை
களையும் சந்தித்தேன். அதில் பல குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருந்தனர். அதற்கான காரணத்தை அறிய முற்பட்டபோது, அன்றாட தேவைகளுக்கே பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் குடும்பச்
சூழலால் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. படிப்பதற்கான சூழலும், வாய்ப்பும் அவர்களுக்கு அமையவில்லை என்பதை புரிந்துகொண்டேன்.
அடிப்படைக் கல்வியே கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. அப்போதுதான் இந்த குழந்தைகளுக்கு கல்வி ரீதியான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
உணவு, உடையை விட ஒரு குழந்தைக்கு கல்வி அவசியம். எனவே இவர்களுக்கு உதவி செய்வதற்காக ‘அலை’ என்ற அமைப்பை ஏற்படுத்தினேன். என் நண்பர்களின் உதவியுடன் இங்கிருக்கும் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்தோம். சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் மூலம் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு கல்வியோடு, பிற கலைகளையும் கற்றுக்கொடுத்து வருகிறோம். இதன் மூலம் அவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.
சிறு வயதிலே எல்லாவற்றையும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் இந்த குழந்தைகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. வசதி வாய்ப்புகளோடு இருக்கும் ஒரு குழந்தைக்கு எவையெல்லாம் சுலபமாக கிடைக்கிறதோ அந்த வாய்ப்புகளை எல்லாம் இவர்களுக்கும் ஏற்படுத்திக்கொடுத்து அதன் மூலம் இவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர வேண்டிய தேவை இருக்கிறது. கல்வியோடு கலையும் குழந்தைகளிடம் போய் சேர வேண்டும்.
சில குழந்தைகளுக்கு போட்டோகிராபி பிடிக்கும், சிலருக்கு நடனம் பிடிக்கும், ஒரு சிலருக்கு விளையாட்டு பிடிக்கும். அவர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்டு சொல்லிக்கொடுக்கிறோம். முக்கியமாக அவர்களின் கலாசாரம் எதுவோ அதில் இருந்து சொல்லிக்கொடுக்க வேண்டும்.
இருளர் சமூகத்தைச் சேர்ந்த சில குழந்தைகளின் பெற்றோர்கள் நிரந்தர தொழில் இல்லாததால் வேறு ஊர்களுக்கு போய்விடுவார்கள். அதனால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கும். இதை யோசித்து, என் நண்பர்களின் மூலம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சிறு, குறு தொழில்களை ஏற்படுத்தி, ஆடு, மாடு, கோழிகள் வாங்கிக் கொடுத்து வருகிறோம். தற்போது இந்த அமைப்பில் ஐம்பது குழந்தை
களுக்கு மேல் இருக்கிறார்கள். என்னால் முடிந்ததை அவர்களுக்கு செய்கிறேன். அதுவே அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் கொடுக்கும் உணவை மகிழ்ச்சியோடு சாப்பிடுகிறார்கள். எல்லா விளையாட்டிலும் பங்கெடுக்கிறார்கள்.
எங்கள் அமைப்பு தொடங்கி 5 வருடமாகிறது. வேலைக்கு போக எனக்கு விருப்பமில்லை. குழந்தைகள் இப்போதுதான் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். வேலைக்கு போனால் அவர்களை கவனிக்க முடியாமல் போய் விடும்.
இருளர் குழந்தைகள் வசிக்கும் இடத்திலே இயற்கையான பொருட்களை வைத்து ஒரு குடில் அமைத்திருக்கிறோம். அதுதான் குழந்தைகளுக்கு கல்வி, கலையை கற்றுக்கொடுக்கும் அடைக்கல இடமாக இருக்கிறது. ஒரு பெண்ணாக அங்கு சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. அது வருத்தமாக இருந்தாலும் எதிர்கொள்ளத் தானே வேண்டும். எல்லா எதிர்ப்புகளையும் தாண்டி என்னுடைய வேலையில் தெளிவாக இருக்கிறேன்.
எதைப் பற்றியும் யோசிக்காமல் குழந்தைகளை கனவு காண வைக்க வேண்டும். என்னை கருவியாகப் பயன்படுத்தி அவர்கள் எப்படியாவது முன்னேற வேண்டும். அதுதான் என்னுடைய கனவாக இருக்கிறது. இந்தக் குழந்தைகள் பள்ளிக்கூடம் போக வேண்டும். அரசாங்க அதிகாரிகள் ஆக வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை. அதிகாரம் தான் அவர்களின் சமூகத்திற்கு அரணாக இருக்கும் என நம்புகிறேன்” என்று முடித்தார் செரினா சரீஸ்.
Related Tags :
Next Story