ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண் இயக்குனர்


ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண் இயக்குனர்
x
தினத்தந்தி 25 April 2022 11:00 AM IST (Updated: 23 April 2022 5:50 PM IST)
t-max-icont-min-icon

தனது படங்களின் ‘கிளைமேக்ஸ்’ காட்சிகளை இயக்குவதில் மிகவும் பிரபலமானவர் கேத்ரின். ‘பாயிண்ட் பிரேக்’, திரைப்படத்தில் ஸ்கை டைவிங் காட்சியை படமாக்கும் போது, கேத்ரின் பாராசூட் அணிந்து விமானத்தில் இருந்தபடியே, கதாநாயகன் அங்கிருந்து கீழே விழுவதை படமாக்கினார்.

திரையுலகில் இருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் ‘ஆஸ்கர் விருது’  ஒரு கனவாகும். வாழ்நாளில் எப்படியாவது ஆஸ்கர் விருதைப் பெற வேண்டுமென்று, பலர் தங்கள் திறமைகளை ஒவ்வொரு ஆண்டும் மெருகேற்றி திரைப்படங்களில் வெளிக்காட்டுகின்றனர். 

ஆஸ்கர் விருதில் முக்கியமாகக் கருதப்படுவது சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருதுகளாகும். இதில், சிறந்த இயக்குனருக்காக ஆஸ்கர் விருது  வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார், கேத்ரின் பிகிலோ.

கேத்ரின், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் பிறந்தவர். பள்ளிப்படிப்பு முடித்த பிறகு சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் நுண்கலையில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆரம்ப காலத்திலேயே கலை உலகில் அதிக ஆர்வம் கொண்டதால், குறும்படங்கள் எடுப்பதன் மூலம் இயக்குனர் ஆனார்.

1981-ம் ஆண்டு முதன்முதலில் மான்டி என்னும் இயக்குனருடன் சேர்ந்து ‘தி லவ்லெஸ்’ திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து ப்ளூ ஸ்டீல், பாயிண்ட் பிரேக், நியர் டார்க்  மற்றும் ஸ்ட்ரேஞ்ச் டேஸ் போன்ற அதிரடி திரைப்படங்களை இயக்கி ஹாலிவுட்டில் தனக்கென்று தனி இடம் பிடித்தார். அதிரடி காட்சிகளை தத்ரூபமாகவும், உண்மையாகவும் எடுப்பதில் கவனம் செலுத்தினார்.

ஈராக்கில் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்த, அமெரிக்க வெடிகுண்டு குழுவைப் பற்றிய கதையம்சம் கொண்ட ‘தி ஹர்ட் லாக்கர்' எனும் திரைப்படத்தை இயக்கினார். கதாநாயகன் துடிப்புடனும், அதிரடியாகவும் வெடிகுண்டுகளை கையாள்வதால், அவருக்கு கீழே பணிபுரிபவர்களுக்குள் ஏற்படும் மோதல்கள், ஒவ்வொரு முறை வெடிகுண்டை அணுகும்போதும் எப்படி உயிர் தப்பினார்கள் என்பது போன்ற பல பதற்றமான காட்சிகள் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றன. 

இத்திரைப்படம் 2010-ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருதில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த எடிட்டிங் போன்ற பிரிவுகளில் 5 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது. இதன் மூலம் ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் பெண் இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார்  கேத்ரின்.

தனது படங்களின் ‘கிளைமேக்ஸ்’ காட்சிகளை இயக்குவதில் மிகவும் பிரபலமானவர் கேத்ரின். ‘பாயிண்ட் பிரேக்’, திரைப்படத்தில் ஸ்கை டைவிங் காட்சியை படமாக்கும் போது, கேத்ரின் பாராசூட் அணிந்து விமானத்தில் இருந்தபடியே, கதாநாயகன் அங்கிருந்து கீழே விழுவதை படமாக்கினார். 

அதே படத்தில் சர்பிங் காட்சிகளின் போது, ஒரு பெரிய பலகையில் துணிச்சலாக நின்று படமாக்கினார். ‘ஸ்ட்ரேஞ்ச் டேஸின்’ படத்தில் ஒரு காட்சிக்காக கேமராமேன் உயரமான கட்டிடத்தில் இருந்து இறக்கிவிட்ட வலுதூக்கும் இயந்திரத்தை கட்டுப்படுத்தினார். ‘தி ஹர்ட் லாக்கர்’ படத்தை ஜோர்டானில் 130 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் படமாக்கினார்.

எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் போன்ற பல திறமைகளை ஒருங்கே கொண்ட கேத்ரின், “பெண்கள் அதிகம் இயக்கம் செய்ய வேண்டும்.  என்னால் திரைப்படங்களைத் தயாரிப்பதை நிறுத்த முடியவில்லை. அதுபோல, நீங்களும் உங்கள் வேலைகளை நிறுத்தாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்” என இளம்பெண் இயக்குனர்களுக்கு கூறுகிறார். 

Next Story