பாரம்பரிய சுவையை தனது அடையாளமாக மாற்றிய காயத்திரி


பாரம்பரிய சுவையை தனது அடையாளமாக மாற்றிய காயத்திரி
x
தினத்தந்தி 9 May 2022 5:30 AM GMT (Updated: 2022-05-07T16:18:37+05:30)

ரசாயனங்கள் ஏதும் கலக்காமல், இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரித்து தருவதால் வாடிக்கையாளர்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

“பாரம்பரிய சுவை மாறாத சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் இருந்த ஆர்வமே என்னைத் தொழில் முனைவோராக மாற்றியிருக்கிறது” என்கிறார் திருச்சியைச் சேர்ந்த காயத்திரி. பொறியியல் துறையில் பட்டப்படிப்பை முடித்த இவர், மசாலா விற்பனையின் மூலம் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டது எவ்வாறு என்று தெரிந்து கொள்வோம்.

“திருமணத்திற்குப் பிறகு அமெரிக்கா செல்ல வேண்டிய சூழல் வந்தது. அங்கு மூன்று ஆண்டுகள் இணையம் மூலம் திருமண ஆடைகளை விற்பனை செய்து வந்தேன்.

அப்போது வீட்டிற்கு வரும் நண்பர்கள் அனைவருக்கும் இந்திய பாரம்பரிய உணவு சமைத்துக் கொடுப்பது வழக்கம். அவர்கள் எல்லோரும் என்னுடைய சமையலைப் பாராட்டினர். கணவரின் பணியிடமாற்றத்தால், மீண்டும் இந்தியாவுக்கு வந்துவிட்டோம்.

இங்கு மசாலா விற்பனை செய்யப் போகிறேன் என்ற போது, எனது குடும்பத்தினர் தயங்காமல் ‘பிடித்ததைச் செய்’ என்று ஊக்கம் அளித்தனர். முதன்முதலாக பூண்டு பொடி, இட்லி பொடி தயாரித்து விற்பனையைத் தொடங்கினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், நலுங்கு மாவு, கஸ்தூரி மஞ்சள் பொடி, அரிசி மாவு, சத்துமாவு என பல வகையான பொருட்களும் தயாரித்தேன்.  

ரசாயனங்கள் ஏதும் கலக்காமல், இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரித்து தருவதால் வாடிக்கையாளர்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டில் வசிப்பவர்களும் விரும்பி வாங்குகிறார்கள். மக்களிடையே எப்போதும் பாரம்பரியமான பொருட்களுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும். அதுதான் என்னுடைய வெற்றிக்குக் காரணம் என்று கருதுகிறேன்.

புதிதாக ஏதேனும் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தால், அடுத்ததாக ‘பிரவுனி’ தயாரிப்பில் இறங்கினேன். முளைகட்டிய தானியங்கள், பருப்புகள் கொண்டு தயாரித்தேன். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோக்களாகப் பதிவிடுவதன் மூலம், எனது தயாரிப்புகளை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்த்தேன். மசாலாப் பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி வகுப்புகளும் எடுத்திருக்கிறேன்.

இவை அனைத்தும் எனக்கான அடையாளமாக இருந்த போது, ஏதேனும் ஒன்றை  சமூகத்துக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் நான் தொடங்கிய தொண்டு நிறுவனம் மூலம், தற்போது நாற்பத்தி நான்கு குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர்.

சமூகம், குடும்பம், தொழில் இது எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவதற்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு முக்கியம். அவர்களின் ஆதரவாலும், நம்பிக்கையாலும் இன்று வெற்றி பெற்றுள்ளேன்’’ என்கிறார் காயத்திரி. 

Next Story