அடா லவ்லேஸ் - உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர்


அடா லவ்லேஸ் - உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர்
x
தினத்தந்தி 16 May 2022 10:36 AM IST (Updated: 16 May 2022 10:36 AM IST)
t-max-icont-min-icon

தான் உருவாக்கிய பகுப்புப் பொறியின் திறன் குறித்து, சார்ல்ஸ் பாபேஜுக்கு இருந்ததை விடவும் அதிகமான கூர்நோக்கோடு கணித்தார் அடா. இதனால் ‘கணினி யுகத்தின் தீர்க்கதரிசி' என்று அழைக்கப்படுகிறார்.

உலகின் முதல் கணினியைக் கண்டுபிடித்தவர் சார்ல்ஸ் பாபேஜ் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், அந்தக் கணினிக்கான முதல் நிரலை (கோடிங்) எழுதியவர் ஒரு பெண் என்பது உங்களுக்கு தெரியுமா?

அடா லவ்லேஸ் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த, ஆங்கிலேயக் கணித வல்லுநர். அவரது முழுப் பெயர் அடா கிங் லவ்லேஸ் கோமகள் என்பதாகும். இவர்  இங்கிலாந்து பிரபுக்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். புகழ்பெற்ற ஆங்கிலேயக் கவிஞரான லார்ட் பைரனின் (பைரன் பிரபு) மகள். இவர் பிறந்து சில மாதத்திலேயே பெற்றோர் பிரிந்துவிட்டனர்.

அடாவின் தாய் அன்னபெல் மில்பேங்கி கணிதத்தில் பயிற்சி பெற்றவர். ‘இணைகரங்களின் இளவரசி’ என்று அறியப்பட்டவர். மகள் அடாவுக்கும் கணிதத்தைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று விடாப்பிடியாக வீட்டிற்கே ஆசிரியரை வரவழைத்தார். 

19-ம் நூற்றாண்டில் இதெல்லாம் யாருமே செய்யாத விஷயம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். லண்டன் பல்கலைக்கழகத்தின் முதல் கணித பேராசிரியரான அகஸ்டஸ் டீ மார்கன், அடாவுக்கு கணிதம் கற்றுத் தந்தார்.

1833-ம் ஆண்டு விருந்து ஒன்றில் கலந்துகொண்ட போது சார்ல்ஸ் பாபேஜை சந்தித்தார் அடா. அவர் உருவாக்கிய கணினியின் ஒரு பகுதியை இயக்கியதைப் பார்த்து ஈர்க்கப்பட்டார். 1985-ம் ஆண்டு வில்லியம் கிங் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் அடா. திருமணம், குழந்தைப்பேறு ஆகியவற்றால் அவருடைய ஆர்வம் தடைப்பட்டாலும், விடாமல் கணிதப் பயிற்சியை மேற்கொண்டார்.

1843-ம் ஆண்டு சார்ல்ஸ் பாபேஜின் ‘பகுப்புப் பொறி’ குறித்து இத்தாலியப் பொறியாளர் எழுதிய கட்டுரையை, பிரெஞ்சு மொழியில் மொழியாக்கம் செய்தார். கூடவே தன்னுடைய விரிவான கணிதக் குறிப்புகளையும், விரிவுரையையும் எழுதி வெளியிட்டார்.

அதுமட்டுமின்றி பகுப்புப் பொறி வருங்காலத்தில் எப்படிப்பட்ட மாற்றங்களைப் பெறும் என்பது குறித்தும் எழுதினார். எண்கள், அவை சார்ந்த தீர்வுகளோடு சிக்கலான இசைக் கோர்வைகளை உருவாக்கவும், அந்தப் பொறி உதவும் என்றார். எண்கள் கணக்கீட்டுக்கு மட்டுமில்லாமல், கணிப்புக்கும் பயன்படும் என்றார். கணித விதிகளுக்கு ஏற்ப குறியீடுகளை இயக்கும் இயந்திரம் அல்லது தொழில்நூட்பம் பற்றிய அவரின் தொலைநோக்கு இன்று உண்மையாகி விட்டது.

 தான் உருவாக்கிய பகுப்புப் பொறியின் திறன் குறித்து, சார்ல்ஸ் பாபேஜுக்கு இருந்ததை விடவும் அதிகமான கூர்நோக்கோடு கணித்தார் அடா. இதனால் ‘கணினி யுகத்தின் தீர்க்கதரிசி' என்று அழைக்கப்படுகிறார்.
கணிதப் புதிர்களுக்கான தீர்வைக் கண்டுபிடிக்கும் படிப்படியான செயல்முறையை அவரது கட்டுரையில் விளக்கமாக எழுதியிருந்தார் அடா. இதனால் உலகின் ‘முதல் நிரலர்’ (புரோகிராமர்) என்ற பெருமையைப் பெற்றார். முதல் கணினி மொழிக்கு ‘அடா’ என்று பெயர் சூட்டப்பட்டது.

 அக்டோபர் மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமை ‘அடா லவ்லேஸ் நாளாகக்' கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் கணிதம், 
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறைகளில் பங்களித்த பெண்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். 

Next Story